சனி, 28 ஜூலை, 2018

குன்ஹாவும் குமாரசாமியும் ... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கு

நீதிபதி குன்ஹா
விகடன் : உங்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை
அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - என்று நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா.
ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா.
தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களைப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துவிட்டது.
2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, என்ன செய்து கொண்டிருக்கிறார் ?
" கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது சட்டப் பணியைக் கவனித்துக்கொண்டு வருகிறார் குன்ஹா.
அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியபோது,
'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவேதான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசியிருக்கிறார்.
'இதுதான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.
இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியில் வர இந்தத் தீர்ப்பு ஒரு காரணமாக அமைந்தது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயர் சம்பாதித்தார்.
'இப்போது என்ன செய்கிறார் குமாரசாமி?'
“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்றுவிட்டார்.
பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணை அதிகாரியாகவோ, தனி அதிகாரியாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளும்.
ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணியாற்ற விருப்பக் கடிதம் கொடுத்தார் குமாரசாமி. அந்தக் கடிதங்களைக் கிடப்பில் போட்டுவிட்டது கர்நாடக அரசு.
அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திரசேகரை (ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி இவர்) பல்வேறு அரசுத் துறைகளில் பயன்படுத்திக்கொண்டது கர்நாடக அரசு.
இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் ரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பதவிக்கும் விண்ணப்பித்தார்.
இந்தப் பதவியையும் சந்திரசேகருக்கு அளித்துவிட்டு, குமாரசாமியைக் குப்புறத்தள்ளியது அரசாங்கம்.
ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப்படுகிறார். மற்றவர் நிராகரிக்கப்படுகிறார்.
‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் போலும். *உண்மையும், நீதியும், நேர்மையும் என்றும் காலத்தால் அழிவதில்லை என்பதற்கு இந்த தீர்ப்பும் நல்ல எடுத்துக்காட்டு*
நன்றி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக