வெள்ளி, 13 ஜூலை, 2018

நீலகிரி யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் தினத்தந்தி  : நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புதுடெல்லி,
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து ஓய்வு இல்லங்கள் (ரிசார்ட்) மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முன்பு யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விவசாயிகள், ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் காலி செய்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2011–ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் நேரில் ஆஜராகி வாதாடினார்.
அவர் வாதாடுகையில் கூறியதாவது:–
சென்னை ஐகோர்ட்டு 2011–ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த போது நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் 136 ஓய்வு இல்லங்கள் மட்டுமே இருந்தன. ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இதுவரை 430–க்கும் மேற்பட்ட ஓய்வு இல்லங்களும், ஓட்டல்களும் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் தண்ணீரை உடனடியாக துண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களில் எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன? அவற்றின் தன்மை மற்றும் அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு உத்தரவுக்கு முன்பு கட்டப்பட்டவை எத்தனை? அதற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் எத்தனை? அவற்றில் ஓட்டல் மற்றும் ஓய்வு இல்லங்கள் மற்றும் குடியிருப்புகள் எத்தனை? இந்த கட்டிடங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களும் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.
அத்துடன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக