வெள்ளி, 20 ஜூலை, 2018

நீட் கருணை மதிப்பெண்கள்: இடைக்காலத் தடை! உச்சிக்குடுமி நீதிமன்றம் !

நீட் கருணை மதிப்பெண்கள்: இடைக்காலத் தடை!
மின்னம்பலம்: மொழிபெயர்ப்பால் ஏற்பட்ட குளறுபடியினால், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு, இன்று (ஜூலை 20) உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 6ஆம் தேதியன்று நடைபெற்றது. தமிழ் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவறாக மொழிபெயர்த்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. புதிய தர வரிசைப்பட்டியல் தயாரித்து கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும், அதுவரை தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 16 ஆம் தேதியன்று சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. “நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களே காரணம். தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளைத் தமிழில் மொழிபெயர்த்தனர். 554 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 196 மதிப்பெண்களை வழங்கினால், அவரின் மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும். நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்ணே 720தான் என்ற நிலையில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு எப்படி கருணை மதிப்பெண்ணாக 196 தர முடியும்? இது குழப்பத்தை ஏற்படுத்தும்” என அதில் கூறப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாகவே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் டி.கே ரங்கராஜன் கேவியட் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 20 ) நீதிபதிகள் பாப்டே மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இதனால் என்ன நடக்கும்? தகுதியுள்ள மாணவர்கள் பாதிப்படைவார்கள். இது அகில இந்திய தேர்வு. 196 என்பது தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் அல்ல. அது கூடுதல் மதிப்பெண். மொழிபெயர்ப்பு துல்லியமாக இருந்தாலும் கூட மாணவர்களின் பதில்கள் தவறாகப் போய் இருக்கலாம்” என்று கூறினார் நாகேஸ்வரராவ்.
“தமிழ் மாணவர்களின் நிலைமையை ஒப்புக்கொள்கிறோம்” என்ற பாப்டே, இது மாணவர்களைத் தவறான பாதைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும். கருணை மதிப்பெண் வழங்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
‘‘மொழி பெயர்ப்பு தவறாக இருந்தால் ஆங்கில வினாத் தாளை ஒப்பிட்டுப் பார்த்து மாணவர்கள் பதில் எழுதி இருக்கலாம். கருணை மதிப்பெண்கள் வழங்குவது தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரிய சலுகையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் என்ன செய்யலாம் என்பதை சிபிஎஸ்இ முடிவு செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து சிபிஎஸ்இ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக