வெள்ளி, 6 ஜூலை, 2018

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை

BBC : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் (ஒன்றே முக்கால் கோடி இந்திய ரூபாய்) அபராதமும் விதித்துள்ளது.
அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியம் நவாசின் கணவர் கேப்டன் சஃப்தர் அவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். லண்டனில் உள்ள பல சொத்துக்களையும், எவன்ஃபீல்ட் அடுக்குமாடி குடியிருப்பையும் பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எவன்ஃபீல்ட் அடுக்குமாடி குடியிருப்பை பறிமுதல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதாக, பத்திரிகையாளர்களிடம் பேசிய தேசிய பொறுப்புக் குழு (பாகிஸ்தானிய லோகாயுக்தா அலுவலகத்தின்) செய்தித் தொடர்பாளர் சர்தார் முஜஃபர் தெரிவித்தார்.

அப்போதே நவாஸ் ஷெரீஃபை சாடிய உச்ச நீதிமன்றம்
கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத் தீர்ப்பின்படி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் நிறுவன தலைவரும், நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முறைகேடாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டதால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

சிறை தண்டனை விதித்துள்ளது ஒரு பாகிஸ்தான் நீதிமன்றம். லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது சொத்து மற்றும் வருவாய் ஆதாரங்களைப் பற்றி விசாரணையில் நவாஸ் ஷெரீஃபால் நேரடியான மற்றும் தெளிவான பதில்களை கொடுக்க முடியவில்லை. பாகிஸ்தான் நாட்டின் அரசியலமைப்பு சாசனத்தின்படி நேர்மையற்ற எந்தவொரு நபரும் நாட்டை ஆள அனுமதிக்க முடியாது.
பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி, அரசு பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், கட்சித் தலைவர் உள்ளிட்ட வேறு பதவிகளை வகிக்க முடியாது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியாது என்னும் பாகிஸ்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1976-ல் உள்ள விதியை நீக்கி, அரசு ஊழியர் அல்லாத எவரும் அரசியல் கட்சியில் பதவி வகிக்க முடியும் என்று திருத்தம் செய்து தேர்தல் சீர்திருத்த மசோதா இயற்றப்பட்டது.
இந்த மசோதா பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அதிபர் மம்னூன் உசேனின் ஒப்புதலைப் பெற்று தேர்தல் சீர்திருத்த சட்டம் 2017 என்ற சட்டமாக மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் பதவிக்கு வந்தார். ஆனால் எதிர்கட்சிகள் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் (நவாஸ்) பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், பிரதமராக பதவியில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, கட்சித் தலைவராக நவாஸ் மேற்கொண்ட முடிவுகள் அனைத்தும் செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாகிப் நிஸார், எந்தவொரு அரசு பதவிக்கும் தகுதியில்லாத ஒருவர் எப்படி அரசியல் கட்சிக்கு மட்டும் தலைமை வகிக்க தகுதி பெற்றவராக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பனாமா ஆவணங்கள் என்றால் என்ன?
2016-ம் ஏப்ரல் மாதம் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்து வெளியானதையடுத்து, உலகின் அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் எப்படி தங்கள் செல்வத்தைப் பதுக்க, வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
பல நாடுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் அரச தலைவர்கள் 72 பேர் தொடர்புடைய ஆவணங்கள் அப்போது வெளியாகி இருந்தன.

சட்ட நிறுவனமான மொசாக் ஃபொன்சேகாவிலிருந்து கசிந்த ஆவணங்களில், பாகிஸ்தான் பிரதமரின் மகன்கள் ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ் மட்டுமல்லாது அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோருக்கு வெளிநாடுகளில் வரி ஏய்க்க உதவும் நிறுவனங்களுடன் இருந்த தொடர்பு பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அவர்கள் குவித்த சொத்துகளுக்கான ஆதாரங்கள் மீது கேள்விகள் எழுந்தன. ஆனால், பனாமா ஆவணங்களில் பிரதமரின் பேர் குறிப்பிடப்படவில்லை.
இந்த ஆவணங்கள் வெளியான பின்பு, எதிர்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஐ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப்க்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை தொடுத்தார். 1990 களில் நவாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த போது அந்த பதவியை பயன்படுத்தி அவரது குடும்பம் சட்டத்தை உடைத்து அதன் மூலம் பலன் பெற்றதாகவும் கூறினார்.
இதன் பின்னர் எதிர்க்கட்சி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது; பாகிஸ்தான் ஊடகங்களால் பனாமாகேட் என்று குறிப்பிடப்பட்ட அந்த வழக்கை விசாரிக்கவுள்ளதாகவும் அறிவித்தது. 2017-ம் ஆண்டில் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான விசாரணையை தினந்தோறும் நடத்தியது.

அந்த நேரத்தில், பிரமரின் குற்றங்களை நீதிமன்றம் கண்டறிந்து அவரை பதவி நீக்கம் செய்யுமா என்பது போன்ற யூகங்கள் அதிகமாக நிலவின. ஆனால், ஐந்து நீதிபதிகளைக் கொண்டிருந்த விசாரணை அமர்வானது இரண்டு பிளவுபட்ட தீர்ப்புகளை ஏப்ரல் 20-ம் தேதி அறிவித்தது, இரண்டு நீதிபதிகள் பிரதமருக்கு எதிராகவும், மூன்று நீதிபதிகள் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதன் விளைவாக கூட்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு குடும்பத்தின் சொத்து சார்ந்த 13 சிக்கலான கேள்விகளுக்கான பதில்களை 60 நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் விசாரணைக் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆஜரானார். பதவியில் இருக்கும் போதே விசாரணைக் குழு முன்பு ஆஜரான முதல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கடந்தகாலத்தில், பர்வேஸ் முஷாரப் ஆட்சியை கவிழ்த்தபோது, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியிலிருந்து விலகியதுடன், நாட்டை விட்டும் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக