ஞாயிறு, 15 ஜூலை, 2018

தினமலர் : உதயசூரியன் சின்னத்தில் வைகோ? பறிபோகிறது பம்பரம்?

ம.தி.மு.க.,வுக்கு, 'பம்பரம்' சின்னம் கிடைப்பதற்கு, தேர்தல் கமிஷனில் சிக்கல்
உருவாகியிருப்பதால், லோக்சபா, சட்டசபை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும், வைகோவுக்கு துணை முதல்வர் பதவி பெறவும், அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வின் போர் வாளாக விளங்கிய வைகோ, வாரிசு அரசியல் எதிர்ப்பால், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த, 1994ல், ம.தி.மு.க.,வை துவக்கி, 24 ஆண்டுகளாக, தேர்தல்களில், சில முறை வெற்றியையும்; பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனாலும், மனம் தளராமல், ஓடி கொண்டுஇருக்கிறார்.
எதிர்பார்ப்பு : சமீப காலமாக, வைகோவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிகின்றன. அவரின் பலவீனமாக கருதப்படுகிற உணர்ச்சிவயப்படுதல், ஆவேசப்படுதல் போன்ற குணாதிசயங்களில் இருந்து, மெல்ல விடுபட்டு வருகிறார்.கேரளாவில், உழிச்சல், பிழிச்சல் போன்ற, ராஜ வைத்தியங்களை செய்து விட்டு, சென்னைக்கு திரும்பிய வைகோ, அறிவாலயம் சென்று, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் அன்பழகனை சந்தித்து பேசினார்.


ஈரோட்டில், செப்., 15ல் நடக்கவுள்ள, ம.தி.மு.க., முப்பெரும் விழாவில், ஸ்டாலினை பங்கேற்க அழைப்பு விடுத்தார். வரும் லோக்சபா தேர்தலில், வட சென்னை அல்லது விருதுநகர்
தொகுதியில் போட்டியிட, வைகோ முடிவு செய்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய, மூன்று கட்சிகளுக்கு மட்டும் தான் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பா.ம.க., - ம.தி.மு.க., - த.மா.கா., - விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு, அங்கீகாரம் ரத்தாகியுள்ளதால், அக்கட்சிகளால் சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாது.ம.தி.மு.க.,வின் பம்பரம் சின்னத்தை, வேறு மாநிலங்களில் உள்ள, தேசிய கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து விட்டால், வைகோவுக்கு பம்பரம் கிடைக்காது.எனவே, எம்.பி., தேர்தலில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதை விட, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, அக்கூட்டணியின் தயவில், மத்தியில் காங்கிரஸ் கட்சியோ அல்லது மாநில கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி உருவானால், துணை பிரதமர் பதவி அல்லது மத்திய அமைச்சர் பதவியை, வைகோ பெறவும் வாய்ப்புள்ளது.
இணைய வாய்ப்பு : அதேசமயம், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு, லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனில், சட்டசபை தேர்தலில், வைகோ போட்டியிடுவார்.முதல்வர் பதவி, ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் பதவி, வைகோவுக்கும் வழங்குவதாக உறுதி அளித்தால், ம.தி.மு.க.,வை, தி.மு.க.,வில் இணைக்கவும் வாய்ப்பு உள்ளது.அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் பட்சத்தில், தி.மு.க.,வில், வைகோவுக்கு பொதுச்செயலர் பதவி வழங்கப்படலாம். தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, அன்பழகன் எப்படி உறுதுணையாக இருக்கிறாரோ, அதைப்போல், ஸ்டாலினுக்கும், வைகோ உறுதுணையாக இருப்பார்.எனவே, லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தலும் இணைந்து வருமா அல்லது தனித்தனியாக வருமா என்ற, முடிவு தெரிந்த பின், தி.மு.க.,வுடன், ம.தி.மு.க., இணைவது குறித்த பேச்சு துவக்கலாம்< .சமீப காலமாக, கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில், தகுதி, அனுபவம் பார்க்காமல், கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களையும், தகுதி இல்லாதவர்களையும், தலைமை செயற்குழு உறுப்பினர், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் போன்ற பதவிகளில், வைகோ நியமனம் செய்து வருகிறார்.


ஐக்கியம் :
வைகோவுடன் நெருக்கமாக இருந்த, எல்.கணேசன், கோவை கண்ணப்பன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாசிலாமணி, வேளச்சேரி மணிமாறன், துாத்துக்குடி ஜோயல், மதுரை டாக்டர் சரவணன், பாலவாக்கம் சோமு போன்றவர்கள், தி.மு.க.,வில் ஐக்கியமாகி விட்டனர். தினகரன் கட்சியிலிருந்து விலகியுள்ள சம்பத், மீண்டும், ம.தி.மு.க.,வில் சேர துாது விட்டுள்ளார்.வைகோவும், சம்பத்தும், சில நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசினர். அப்போது, சம்பத்தை அமைதியாக இருக்கும்படி, வைகோ கூறியுள்ளார். அதேசமயம், சம்பத், தி.மு.க., கதவையும் தட்டி கொண்டிருக்கிறார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், மீண்டும், தாய் கட்சியான, தி.மு.க.,வில், வைகோ இணையும் காலம் கனியுமா அல்லது ம.தி.மு.க.,வில் தான், அவரது பயணம் தொடருமா என்பது, தற்போது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக