வெள்ளி, 27 ஜூலை, 2018

இசையமைப்பாளர் .ரஹ்மான் ஒரு நீதிபதியின் கட்டுப்பாட்டில் ? அவர் பாடலாசிரியர் விவேக்கின் தந்தை ..

அதிகாரத்தின் பிடியில் ஆஸ்கர் நாயகன்? - அதிர்ச்சியில் திரையுலகம் இந்தியன் எக்ஸ்பிரெஸ்: நேற்றும் அதற்கு முந்தைய தினமும் வெளியான சில ட்விட்டர் செய்திகள் தமிழக திரையுலகினரை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தின. ரஹ்மான் சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் செய்தி கூடுதல் கவனம் பெறுகிறது.
வாலி, வைரமுத்து உச்சத்தில் இருந்த போதும் வளர்கிற பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு அளித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். உதாரணமாக, ரஹ்மானின் இசை தனது பாடல் வரிகளை அழுத்துவதாக வைரமுத்து மேடையில் குற்றம்சாட்ட, வைரமுத்துவை தனது படங்களில் விலக்க ஆரம்பித்தார் ரஹ்மான். அந்த காலகட்டத்தில் அழகம் பெருமாள் இயக்கத்தில் விஜய், சிம்ரன் உதயா படத்தில் நடித்தனர். இசை ரஹ்மான். வைரமுத்துடன் மோதல் ஏற்பட்டதால் அவரை விலக்கி, ரஹ்மான் வாய்ப்பளித்தது இளைய கம்பன் என்ற இளம் கவிஞருக்கு. அதன் பிறகு வைரமுத்து, பூ எறிந்து விளையாடியவர்களை வாள் எறிந்து விளையாடியதாக மீடியா திரித்துவிட்டது என அறம்பாடி மீண்டும் ரஹ்மானுடன் இணைந்து கொண்டார். எனினும், வாலி, வைரமுத்துக்கு இணையாக இளம் கவிஞர்களுக்கும் ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்பு கிடைத்து வந்தது.

மணிரத்னம் போன்ற அரிதாக சிலர் மட்டுமே முழுப்பாடலையும் வைரமுத்துக்கு தருகின்றனர். கௌதம் தாமரைக்கு முழுப்பாடல்களையும் தருவதைப் போல.
இளம் இயக்குநர்கள் ரஹ்மானிடம் வருகையில் கபிலன், விவேகா, பா.விஜய் போன்ற இளம் கவிஞர்கள் பயன்பெறுவார்கள். அவர்களுக்கும் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு தரப்படும். விஜய்யின் அறிமுகப்பாடல் என்றால் ஒருகாலத்தில் அதை கபிலனே எழுதுவார். ஆனால், மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதியவர் விவேக் என்ற புதிய இளம் பாடலாசிரியர். அதில் ஆச்சரியமில்லை. புதியவர்களை ஊக்குவிப்பதில் ரஹ்மான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்.
ஆனால், மெர்சலைத் தொடர்ந்து அவர் இசையமைக்கும் சர்கார் படத்தின் அனைத்துப் பாடல்களையும் விவேக்கே எழுதுகிறார். இது திரையுலகினரை முக்கியமாக பாடலாசிரியர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தாமரை, நா.முத்துக்குமார் போன்று ஆச்சரியப்படுத்தும் வரிகளை விவேக் எழுதுகிறவரல்ல. அவரது வரிகள் ஓகே ரகம். பிறகேன் முழுப்பாடல் எழுதும் வாய்ப்பு தரப்படுகிறது?
சர்காரை இயக்கும் முருகதாஸ் ஒருவேளை விவேக்கை பரிந்துரைத்திருக்கலாம் என்றும் சொல்ல இயலாது. காரணம், ரஹ்மான் இசையமைக்கும் படங்களில் பாடலாசிரியர்களை பெரும்பாலும் அவரே தீர்மானிப்பார். அதிலும் ஒரு இளம் பாடலாசிரியருக்கு முழுப்பாடலையும் ஒதுக்க நிச்சயம் அனுமதிக்க மாட்டார்.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி. ரஹ்மான் இசையில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் அனைத்துப் பாடல்களையும் விவேக்கே எழுதுகிறார். மெர்சல், சர்கார், சிவகார்த்திகேயன் படம்… தொடர்ச்சியாக மூன்று படங்கள்… முழுப்பாடல்கள். பிற இளம் பாடலாசிரியர்கள் செய்த தவறு என்ன? ரஹ்மான் ஏனிப்படி மாறிப்போனார்?
விவேக்கின் தந்தை ஒரு நீதிபதி. அந்த அதிகார அழுத்தம் காரணமாகவே ரஹ்மான் விவேக்குக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு அளிக்கிறhர்… அளிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார் என இன்டஸ்ட்ரியில் பேச்சு உள்ளது. இது நிச்சயம் திரையுலகுக்கும், இசைப்புயலுக்கும் ஏன் அந்த நீதிபதிக்குமேகூட கெட்ட பெயரையே ஏற்படுத்தி தரும். திரையுலகில் எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை இதில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவருக்குமே உள்ளது.
கலை அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கலாமே தவிர அதிகாரம் கலையை வழிநடத்தக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக