சனி, 14 ஜூலை, 2018

கேரளா ராமயணம் கம்யுனிசம் .. காவிகளுக்கும் செங்காவிகளுக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை.... ?

LR Jagadheesan : காவிகளுக்கும் செங்காவிகளுக்கும் இருக்கும் இன்னொரு
ஒற்றுமை கூசாமல் பொய்சொல்வது. ஆர் எஸ் எஸ்ஸின் இந்துராஷ்டிரத்தை அமைக்க உழைப்பதற்காக திடீர் திடீரென புதுசு புதுசா அமைப்புகள் உருவாகும். ஆனால் எல்லா அமைப்புகளுக்கும் ராமனே மூலக்கடவுள். அவருக்கு பாபர்மசூதி இடித்த இடத்துலயே கோவில் கட்டணும்னு சொல்வதில் ஆர் எஸ் எஸ் மாதிரியே இந்த அமைப்புகளும் தெளிவான கொளுகையை முன் வெப்பாங்க.

மதசார்பற்ற மார்க்சிய மாணிக்கங்களும் கேரளத்துல அதே பாணியை கடைபிடிக்கிறாய்ங்க. அதுவும் “சமஸ்கிரத மொழியின் காதலர்கள்” எல்லாம் ஒண்ணுகூடி ஒரு அமைப்பை உருவாக்கி ராமநாம சங்கீர்த்தனம் பண்றா. அவாளோட சேர்ந்து நம்ம மைலாப்பூர் மாம்பலம் மார்க்சிஸ்டுகளும் ததாஸ்துன்னு பாட கிளம்பிட்டதுகள். கேட்டா இராமாயணத்தை சங்கபரிவாரன்ங்கள் கிட்டேர்ந்து மீட்கப்போறோம்னு ஒரு சால்ஜாப்பு. அதுவும் எப்படி? “ராமபக்தர்கள் மனம் புண்படாம ராமாயண ஆய்வு” செய்யப்போறாளாம் இந்த மார்க்சிய சேட்டன்கள்.
https://m.timesofindia.com/…/takin…/articleshow/64982511.cms
அட அட. பேஷ் பேஷ். ரொம்ப நன்னாருக்கு. ராமபக்தாள் மனம் புண்படாம செய்யறதுக்குப்பேர் ராமபஜனை. ஆராய்ச்சியில்லை. அடுத்து என்ன? பாஞ்சாலி சபதம் மாதிரி சீதையின் சிறப்புன்னு ஒரு காவியம் படையுங்கோ. மாம்பலம் அயோத்யா மண்டபத்துல மார்க்சிய பேரறிஞர்களெல்லாம் கூடி சீதாகலியாணம் நடத்தலாம்.
தியாகராயநகரில் இருக்கும் சிபிஎம் கட்சி officeலேர்ந்து மகளிர் அணிக்காரா எல்லாம் அன்னைக்கு மட்டும் வீட்ல கட்ற மடிசாரை வெளிலயும் கட்டிண்டு சீதைக்கு சீர் எடுத்துண்டு ஊர்வலமா போலாம். “சீதா கலியாண வைபோகமே; மார்க்சியர்கள் சீர் செய்யும் மகாத்மியமே” ன்னு பாடிண்டே போங்கோ. உங்க இஷ்டகவி பாரதி பாடினபடி கும்மியடிச்சுண்டே போனா கூட்டம் அள்ளும்.
கேரளத்தில் ராமபக்தாள் மனம் புண்படாம ராமநாம சங்கீர்த்தனம் பண்ற மார்க்சிய மங்குனிகள் தமிழ்நாட்டில் பெருமாள் முருகன் விவகாரத்தில் என்ன செய்தன? ஊருக்கு என்ன உபதேசித்தன? மாதொருபாகன் நாவல் தம்மை இழிவு செய்வதாக நாமக்கல் ஊர்க்காரர்களும் இந்துக்களை புண்படுத்துவதாக அந்தபகுதி இந்துக்களும் சொன்னபோது அவர்களுக்கு இந்த மார்க்சிய பேரறிஞர்கள் எல்லாம் என்ன உபதேசம் செய்தார்கள்? தமுஎச கருத்து சுதந்திர கண்ணாயிரங்கள் என்ன சொல்லிக்களமாடின?
கேரளத்து ராமபக்தர்கள் மனம் புண்படக்கூடாது என்று நீங்கள் காட்டும் இன்றையை உங்கள் அக்கறையை நாமக்கல் சிவபக்தர்கள் பெருமாள் முருகனால் தங்கள் மனம் புண்பட்டதாக சொன்னபோது ஏன் காட்டவில்லை. ஒருவேளை மார்க்ஸ் நாமக்காரரா?
மார்க்சிய மதசார்பு கேரளத்தில் படுகேவலமாக பல்லிளிக்கிறது. மார்க்சியம் சர்வதேசியம் எல்லாம் பேசும் சிபிஎம் சந்தர்ப்பவாதிகளைவிட இதையெல்லாம் பேசாத பெரிய பள்ளிப்படிப்பறிவற்ற சாதாரண சினிமாக்கலைஞன் M R Radha எவ்வளவோ பெரிய கலகக்காரன். இராமாயணத்தை அக்குவேறு ஆணிவேறாக கழற்றிப்போட்டு துவம்சம் செய்திருக்கிறான். அதுவும் வெகுமக்கள் முன்னால். அவன் கால் தூசுக்குப்பெறாது இந்த காரல் மார்க்ஸிடம் மார்க்சியம் பயின்றதாக மார் தட்டும் வெற்று கும்பல்.
இந்திய அரசியலின் ஆனப்பெரிய சந்தர்ப்பவாதிகள், இரட்டை வேடதாரிகள் இடதுசாரிகள் என்பது இன்னும் ஒருமுறை கேரளத்தில் அம்பலப்பட்டு சந்தி சிரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக