சனி, 14 ஜூலை, 2018

நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது! ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர்

  Veera Kumar - ONEINDIA TAMIL பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவர் மகள் மரியம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத் சிறையில் அடைக்கப்பட்டனர். 
இதையொட்டி பாகிஸ்தான் முழுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பனாமா பேப்பர்ஸ்  ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 நவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது. 
இந்த நிலையில், மனைவியின் புற்றுநோய், சிகிச்சைக்காக லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மரியம் ஆகியோர் அபுதாபி வழியாக விமானத்தில், லாகூருக்கு இன்று இரவு இந்திய நேரப்படி 9.30 மணியளவில் வந்து சேர்ந்தனர். 
அவர்கள் இருவரும் லாகூர் விமான நிலையத்தில் நவாஸ் ஷெரீப்பின் தாயாரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்டு மற்றொரு குட்டி விமானத்தில் ஏற்றப்பட்டு, இஸ்லாமாபாத் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 
வரும் 25ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் நவாஸ் இப்போது சிறை சென்று ஸ்டன்ட் அடிக்கிறார் என்பது ஆளும் கட்சி குற்றச்சாட்டு. 
ஆனால் தேர்தல் முறையாக நடக்காது என்பது நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு. நவாஸ் கைதையடுத்து அவரின், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி தலைவர்கள் பலரையும் முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். 
இவர்கள் கலவரங்களை முன்னெடுப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்று மாலை முதல் லாகூர் விமான நிலையத்தை முற்றுகையிட்ட நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் கல்வீச்சு, வன்முறைகளில் இறங்கினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். 
இதையடுத்து, நவாஸ் ஷெரீப் நேரடியாக இஸ்லாமாபாத்திற்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டுவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் நவாஸ் மற்றும் மரியம் பயணித்த விமானம் லாகூரில் தரையிறங்கியது. அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக