வியாழன், 26 ஜூலை, 2018

மல்லையா நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.,, மும்பை அமலாக்கப் பிரிவு வீழ்த்தியது எப்படி?

லண்டனில் வீராப்பு பேசிய விஜய் மல்லையாவை மும்பையில் அமலாக்கப் பிரிவு வீழ்த்தியது எப்படி?விகடன் - எம்.குமரேசன் : லண்டனில் சி.பி.ஐ, மும்பையில் அமலாக்கப் பிரிவு நெருக்கடி கொடுக்க மல்லையா நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது விஜய் மல்லையா பிரச்னை. இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்  கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்துவரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை, கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. இனிமேல் விஜய் மல்லையா வந்தாலும் வராவிட்டாலும், அவரின் 13,900 கோடி ரூபாய் மதிப்புள்ள  சொத்துகள் கைப்பற்றப்பட்டு, நாட்டின் கருவூலத்தில் சேர்க்கப்படும். 
கடந்த மாதம் மும்பை சர்வதேச நிதி மோசடித் தடுப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை  தொடர்ந்த வழக்கில், விஜய் மல்லையாவை `தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி' என அறிவிக்கக் கோரியது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், `வரும் ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி விஜய் ஆஜராகவில்லை என்றால், அவரை தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துவிடும். அப்படி அறிவிக்கப்பட்டுவிட்டால், விஜய் மல்லையாவின் 13,900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, மத்திய அரசு பறிமுதல் செய்துவிடலாம். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தன் கழுத்தைப் பிடித்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட விஜய் மல்லையா, லண்டனிலிருந்து அமலாக்கத் துறை  அதிகாரிகளுக்குச் சமாதானத் தூதுவர்களை அனுப்பியுள்ளார். அவர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகளைச் சந்தித்து, ``விஜய் மல்லையா, தாய்நாடு திரும்பி சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்'' என்று கூறியுள்ளனர்.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடந்துவருகிறது. சி.பி.ஐ தரப்பிலிருந்து தொடரப்பட்ட இந்த  வழக்கில், இரு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சி.பி.ஐ தரப்பு தெளிவான, உறுதியான வாதங்களை முன்வைத்துள்ளதால், அவர் மீண்டும் இந்தியா திருப்பி அனுப்பப்படுவது உறுதி. வழக்கின் போக்கை மோப்பம்பிடித்துவிட்ட மல்லையா, நாடு கடத்தினால் நிலைமை மோசமாகிவிடும் என்று உணர்ந்துதான், நைஸாக அமலாக்கத் துறை அதிகாரிகளுக்குத் தூது அனுப்பியுள்ளார். 

அமலாக்கத் துறை அதிகாரிகளோ, ``விஜய் மல்லையா தானாகவே நாடு திரும்பி வழக்கை எதிர்கொண்டால், ஓரிரு நாள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீன் பெற்று வெளியே வர வாய்ப்புள்ளது. பிறகு, இந்திய நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளலாம். தானாக நாடு திரும்பினால், அவரின் பயணத்துக்குத் தேவையான ஆவணங்கள் உடனடியாக வழங்கப்படும். மேலும், லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கும் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்'' என்கின்றனர்.
மல்லையாவின் முடிவுகுறித்து, பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அவரை போனில் தொடர்புகொண்டுள்ளது. ``இந்திய பத்திரிகையாளர்கள் தாங்களே கேள்வி கேட்டு தாங்களே பதில் எதிர்பார்க்கிறார்கள். இந்தியா வருவது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை'' என்று மீடியாக்கள் மீது பாய்ந்துள்ளார். 
கடந்த ஜூன் 22-ம் தேதி, விஜய் மல்லையா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 500 பக்கங்கள் அடங்கிய ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அதில், தனக்கு 13,900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், அவற்றை விற்று வங்கிகளுக்குக் கட்டவேண்டிய பணத்தை அடைத்துவிடுவதாகவும்  கூறியிருந்தார். பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும், வங்கிகளிடம் வாங்கிய கடனை அடைத்துவிடுவதாக உறுதிமொழிக் கடிதம் அனுப்பியிருந்தார். 
விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளுக்குத் திரும்பச் செலுத்தவேண்டிய கடன்தொகை மொத்தம் 9,990 கோடி ரூபாய். இனிமேல் அவர் இந்தியா வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை. மக்கள் பணம் திரும்பக் கிடைத்தால் சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக