திங்கள், 9 ஜூலை, 2018

தி.மு.க. மாநில சுயாட்சி மாநாட்டிற்குஅழைப்பு .. ராகுல்காந்தி, முலாயம் சிங்,மம்தா, மாயாவதி, கேஜ்ரிவால் ..

ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மாலைமலர்: தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: தி.மு.க. சார்பில், மாநில சுயாட்சியை வலியுறுத்தும் மாநாடு தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன. பா.ஜனதா தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அந்தந்த மாநிலங்களில் நிலவும் தற்போதைய சூழலை தங்களுக்கு சாதகமாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.
இதற்கிடையே, பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து சந்திரசேகரராவ், சமீபத்தில் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது மாநில கட்சிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவது பற்றி அவர்கள் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் மாநில சுயாட்சியை வலியுறுத்துவது தொடர்பான மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். நேரிலும் கடிதம் வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்குமாறு ராகுல்காந்தியை திருமாவளவன் நேரில் அழைத்த நிலையில், மு.க.ஸ்டாலினும் ராகுல்காந்திக்கு தனியாக அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் பல யூகங்களுக்கு வழி வகுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக