வியாழன், 19 ஜூலை, 2018

முட்டை விலையில் பாஜக மாநிலங்களை விட தமிழகம் குறைவுதான் .. எடப்பாடி போன்னாருக்கு பதில்

பாஜக மீது எடப்பாடியின் முதல் பாய்ச்சல்!
மின்னம்பலம்: பாஜக பற்றி கடந்த ஓராண்டாக அதிமுகவில் இருந்து துணை சபாநாயகர் தம்பிதுரையோ, அமைச்சர் ஜெயக்குமாரோதான் எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அதுவே அதிமுகவின் அதிகபட்ச பாஜக எதிர்ப்பாக இருக்கும். ஆனால், ஜூலை 9ஆம் தேதி சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா, அதிமுகவை ஊழல் அரசு என்று விமர்சித்த பிறகு முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இன்று (ஜூன் 19) மேட்டூர் அணையைத் திறப்பதற்காக நேற்று விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்குப் புறப்பட்டார் முதல்வர்.
நேற்று காலை தனது செயலாளர்களிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் சத்துணவு முட்டை விநியோகம் பற்றிய புள்ளிவிவரங்களைக் கேட்டதோடு... மற்ற மாநிலங்களில் அரசு என்ன விலைக்கு முட்டை கொள்முதல் செய்கிறது, முட்டை விலை என்ன, குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் முட்டை என்ன விலை என்று லிஸ்ட் கேட்டுள்ளார். சில மணி நேரங்களில் முதல்வர் கைக்குப் பட்டியல் வந்துவிட அதை கையோடு எடுத்துக்கொண்டுதான் கோவைக்கு விமானம் ஏறினார் முதல்வர்.
வழக்கம்போல் கோவை விமான நிலையத்தில் ரிலாக்ஸாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

முதல்வர் எதிர்பார்த்தது போலவே எஸ்பிகே நிறுவனத்தில் நடக்கும் வருமான வரித் துறை ரெய்டு பற்றியே செய்தியாளர்கள் கேட்டனர்.
ரெய்டுக்கு விளக்கம்
“துணிக் கடையாக இருந்தாலும், நகைக் கடையாக இருந்தாலும் வருமானத்துக்கு ஏற்ற வரி செலுத்தவில்லை என்றால் வருமான வரி சோதனை நடக்கும். வருமான வரி சோதனைக்கு ஆளாகி இருப்பவர்கள் எனது உறவினர்கள் என்று கூறுகிறீர்கள். தமிழகம் முழுவதும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள்.
ராமலிங்கம் & கோ ஈரோடு, இவர் எனது மகனின் சகலையோட அப்பா. கடந்த 35 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணி செய்துவருகிறார். அதிகமாக திமுக ஆட்சியில்தான் ஒப்பந்தம் செய்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஓராண்டில் மட்டும் திமுக ஆட்சியில் ரூ.500 கோடிக்கு டெண்டர் எடுத்து வேலை செய்திருக்கிறார். அந்த ஆட்சியில் ஒருவருக்கே எட்டு டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.
மேட்டூர் அணை திறக்கப்படுவது பற்றி குறிப்பிட்ட முதல்வர்,
“கர்நாடகாவிடமிருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, ஏழு டிஎம்சி கேட்டோம். அதைதொடர்ந்து குடிப்பதற்காக மூன்று டிஎம்சி தண்ணீர் கேட்டோம் அதை வழங்கவும் மறுத்துவிட்டார்கள். இவ்வாறான நிலையில் இன்றைக்கு இயற்கையாகவே மழை பெய்து மேட்டூர் அணை 120 அடியை எட்டவிருக்கிறது. இயற்கையே நமக்கு உதவுகிறது” என்றவர், “ஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பெய்து அணைகள் நிரம்பின. ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் மழை நின்று விட்டது”என்று கிண்டலடித்தார்.
இதன்பின் பலரும் பல கேள்விகள் கேட்டு முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தானாகவே ஆரம்பித்தார்.
முதல்வரே உடைத்த முட்டை
“இருங்க... இப்ப கொஞ்ச நாளா முட்டை முட்டைனு எல்லாரும் பேசிக்கிட்டிருக்காங்க. அதுக்கு நான் ஒரு விளக்கம் சொல்லணும்’’ என்று தானாகவே முட்டை பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.
“2013 முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ. 2,031 கோடிக்கு மட்டுமே முட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முட்டை கொள்முதலில் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்குனு ஒருத்தர் சொல்றாரு. (மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜூலை 14ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் 5 ஆயிரம் கோடிக்கு முட்டை ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்) ஐந்து வருடத்தில் ரூ.2,031 கோடிக்குதான் முட்டை கொள்முதல் பண்ணிருக்கும்போது 5 ஆயிரம் கோடி ஊழல் எப்படி நடக்கும்? அவர் சொல்றாருன்னு ஊடகங்களும் அதை காட்டுறீங்க’’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்குப் பதில் அளித்த முதல்வர், அடுத்து ஒரு பட்டியலை கையில் எடுத்தார்.
“பிஜேபி ஆட்சி செய்கிற ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு முட்டை ரூ.5.93 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆந்திராவில் ரூ.4.68 காசுக்கு கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் ரூ.4.34 காசுக்குதான் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் விலை குறைவு” என்று பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலத்தோடு தமிழகத்தை ஒப்பிட்டுக் காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
“தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் விலையை நிர்ணயிக்கிறது. இதில் எவ்வித முறைகேடும் கிடையாது. ஆட்சி நல்லமுறையில் நடந்துகொண்டிருக்கிறது. அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது” என்று பாஜகவுக்கு பதில் சொல்லும் விதமாகவே பேட்டியை முடித்தார் எப்பாடி பழனிசாமி.
பாஜக மீது அதிமுகவில் இருந்து இதுவரை பல விமர்சனங்கள் அடக்கி வாசிக்கப்பட்ட நிலையில், முதன்முறையாகத் தமிழக முதலமைச்சரே பாஜக ஆளும் மாநிலத்தோடு முட்டை விலையை ஒப்பிட்டுப் பதில் சொல்லியிருப்பதன் மூலம் பாஜக எதிர்ப்பில் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது அதிமுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக