செவ்வாய், 31 ஜூலை, 2018

ஸ்டெர்லைட் ஐ திறக்க கோரும் மனு நிராகரிப்பு ,,, தேசிய பசுமை தீர்ப்பாயம்

tamilthehindu : தூத்துக்குடியிலுள்ள ஆலையை திறக்க கோரும் ஸ்டெர்லைட்
நிறுவனத்தின் கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் 2-வது முறையாக நேற்று நிராகரித்தது. அத்துடன் இந்த ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
மேலும், ஆலையைத் தொடர்ந்து பராமரிக்க அந்த ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 13 பேர் பலியானதை அடுத்து, கடந்த மே 28-ம் தேதி இந்த ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரியும், ஆலையை திறக்க உத்தரவிடக்கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜூலை 5-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை கோரப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை தீர்ப்பாயம் நிராகரித்ததுடன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இதனிடையே, கடந்த ஜூன் 18-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அமில கசிவு ஏற்பட்டிருந்தது. தமிழக அரசு ஆலைக்கு மின்சாரத்தை துண்டித்ததால் அடிப்படை பாரமரிப்பு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என்றும், இதன்விளைவாகவே அமில கசிவு ஏற்பட்டதாகவும், பராமரிப்பு பணிக்கு குறைந்த அளவுக்கேனும் மின்சார விநியோகம் செய்ய வேண்டும் என்றும் ஆலை நிர்வாகம் கோரியது.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடியிலுள்ள ஆலையை திறக்க கோரும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் 2-வது முறையாக நேற்று நிராகரித்தது. அத்துடன் இந்த ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. ஆலையைத் தொடர்ந்து பராமரிக்க, அந்த ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக