திங்கள், 23 ஜூலை, 2018

அக்னிவேஷ் மீதான தாக்குதல்: பாஜக சொல்லும் செய்தி என்ன?

.savukkuonline.com : ஜார்கண்டின் பகூரில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது, ஒரு கூட்டத்தினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளனர். கூட்டமாகத் திரண்டு தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு உள்ளூர் நிர்வாகம், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இதை தடுக்கும் பொறுப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்ட அன்று இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.
பஹாரியா பழங்குடியின சங்கம் சார்பிலான அழைப்பில் அக்னிவேஷ் அங்கு சென்றிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பு இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவித்திருந்தது. அக்னிவேஷ்  மாட்டிறைச்சி சாப்பிடுவதை நியாயப்படுத்தியதாலும், நக்ஸல் ஆதரவாளர் என்பதாலும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த இருந்ததாக இந்த அமைப்பின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்ற பிறகு தங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பில்லை என அவர்கள் மறுத்தாலும், இந்த தாக்குதல் அக்னிவேஷ் செயல்களுக்கு எதிரான இயல்பான எதிர்வினை என்று குறிப்பத தவறவில்லை.

நாம் பழகிவிட்ட ‘புதிய இந்தியா’வின் தரத்தின் அட்ப்படையில் பார்த்தாலும், நடைபெற்ற நிகழ்வு மிக மிக மோசமனாது. ஒரு 78 வயது மனிதர் கீழே தள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான் பலசாலிகளால் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு, தலைப்பாகை பிடுங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அக்னிவேஷின் புகைப்படத்தைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.
2002இல் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் மேதா பாட்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இது நினைவுபடுத்துகிறது. இதே அமைப்பின் வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள்தான் அந்தச் சம்பவத்திலும் தொடர்புடையவர்கள்.
அக்னிவேஷ் மீதான தாக்குதல், அது முன்வைக்கப்பட முயற்சிக்கப்படுவது போல, உள்ளூர் மக்களின் இயல்பான கோபம் அல்ல. யுவ மோர்ச்சா மற்றும் பாஜக தலைவர்கள் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்துவது, மாட்டிறைச்சியைச் சாப்பிடுவது அல்லது சட்ட விரோதப் பசு வணிகம் தொடர்பாக நடத்தப்படும் தாக்குதல் சம்பங்களைத் தொடர்ந்து நியாயப்படுத்திவருவதுபோலவே அமைந்துள்ளது. அவர்கள் தங்கள் தொடர்பை மறுத்தாலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதே அவர்கள் பழி போடுகின்றனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தங்களது அவமதிப்பான செயல்களால், அமைதியை விரும்பும் மக்களைத் தாக்குதல் நடத்த தூண்டுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். ஆக, பாதிக்கப்பட்டவர்கள் இரட்டைக் ‘குற்றங்’களைச் செய்துள்ளனர்: முதலாவதாக, அவர்கள் குற்றம் செய்துள்ளனர், அதோடு மக்களை அவர்களால் இயலாத செயலில் ஈடுபடவும் தூண்டியுள்ளனர்.
அப்பாவிகளான பஹிரா பழங்குடியின மக்களை மூளைச்சலவை செய்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றி, அமைதியை குலைப்பதற்கான சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக அக்னிவேஷ் இருந்ததாக யுவ மோர்ச்சா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதல் தொடர்பான தங்கள் விளகத்தில், நிர்வாகம் மற்றும் காவல் துறைக்குத் தனது வருகை மற்றும் நிகழ்ச்சியின் விவரங்களை அக்னிவேஷ் அளிக்காமல் இருந்தது தவறு எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இது உண்மையாக இருந்தாலும், தாக்குதல் நடத்துவதற்கான காரணமாக இது மாறிவிடுமா? காவல் துறையினர் தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியதோடு, தாக்கியவர்கள் கண்காணிப்பு காமிராவில் சிக்கிய பிறகும், அவர்களைக் கைது செய்யாமல் இருக்கின்றனர்.
ஸ்வாமி அக்னிவேஷ் மீதான தாக்குதலை எப்படிப் பார்ப்பது? இதைக் கும்பலின் தாக்குதல் என்று கருதுவது ஏன் தவறானது? கூட்டம் அல்லது கும்பல் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவாது என்பது ஏன் தெரியுமா?
முதல் விஷயம் இந்தத் தாக்குதலின் துணிச்சல். அக்னிவேஷ் தேசிய அளவில் அறியப்பட்டவர். அவர் மீதே இந்த அளவு துணிச்சலுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றால், அனைத்து அரசியல் மற்றும் சமூகத் தொண்டர்களும் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது. ஆளும் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகள், தாங்கள் தான் நாட்டின் காவல் துறை மற்றும் ராணுவம் என நினைத்துக்கொண்டு, அரசுக்கும் தேசத்துக்கும் விரோதமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை தண்டிப்பது தங்கள் வேலை என்பது போல நடந்துகொள்கின்றன. தேசத்தின் பெயரில் செயல்படுவதால் அவர்களைப் பொறுத்தவரை இந்தச் செயல் குற்றமாகாது.
நாம் ஒரு நிமிடம் யோசித்துப்பார்ப்போம். உயர் நீதிமன்றம் ஜாமீன்  அளித்துவிட்டது என்பதற்காகவே, முஸ்லிம் ஒருவரைக் கூட்டமாகச் சேர்ந்து அடித்துக் கொன்ற குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரை மத்திய அமைச்சர் பாராட்டுகிறார். இன்னொருவர் மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகப் பேசுவதோடு, இந்துக்களைக் “காக்க இயலாத நிலை” குறித்துக் கண்ணீர் விடுகிறார். மூன்றாவது அமைச்சர் கொலைக் குற்றம்சாட்டப்பட்டவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, அவரது உடல் தேசியக் கொடியால் போர்த்தப்படும்போது வணக்கம் செலுத்துகிறார். அமைச்சர்கள் இவ்வாறு நடந்துகொள்ளும்போது, கூட்டமாகத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுபவர்களுக்குட் தெரிவிக்கப்படும் செய்தி என்ன? இந்தக் கூட்டம் அரசுடன் இருப்பதுதான் என்றோ அல்லது கூட்டத்துடன் தான் இருப்பதை அரசு உணர்த்த விரும்புகிறது என்றோதான் இதற்கு அர்த்தம் கொள்ல வேண்டும் எனச் சொல்வது தவறாகுமா?
அரசு மற்றும் ஆளும் கட்சி இந்த சம்பவங்களில் இருந்து விலகி நின்றாலும், இந்தச் செயலை ஆதரிப்பதாகக் கூட்டமாகத் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு உணர்த்தப்படுவதாகாதா? அரசு மற்றும் கட்சியின் வரம்புகளைப் புரிந்துகொண்டு கூட்டம் செயல்படுகிறது. மகாத்மா காந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்ட நாதுராம் கோட்சேவும் அவன் சகாக்களும், தங்கள் அமைப்பைச் சங்கடத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், அதனால் அந்த அமைப்புடனான தொடர்பை ஒரு பிரச்சினையாக்கவில்லை என்றும் நாதுராமின் சகோதரார் கோபால் கோட்சே எழுதியுள்ளார். அமைப்பு அவர்களிடமிருந்து விலகி நின்றபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதேபோல, பாபர் மசூதி இடிப்புக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அந்தச் செயல் இந்த அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது.
கூட்டமாகத் தாக்குதல் நடத்துவது என்பது இந்த சக்திகள் கையாண்டுவரும் வன்முறை வடிவம். அக்லக் அல்லது பாஹ்லு கான் அல்லது காசிம் அல்லது அக்னிவேஷ் மீதான தாக்குதலை பாபர் மசூதி தாக்குதலிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பீர்கள்? அடிப்படையில் இவை எல்லாம் ஒன்றுதான். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீதான பெரும்பாலான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டவை. கூட்டம் தயார் செய்யப்பட்டு, ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக திடீரென நிகழ்ந்தது போல தோற்றம் தரக்கூடிய வகையில் ஒரு இயல்பான தன்மை அளிக்கப்படுகிறது. இத்தகைய இயல்பான தன்மை வேரூன்ற அவர்கள் அமைப்புரீதியாகச் செயல்படுகின்றனர்.
நாட்டில் நடைபெறும் கும்பல் வன்முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. தானாக நடந்ததாகத் தோன்றுவது அரசியல் ரீதியாக ஆழமானது. மக்களைக் கும்பலாக மாற்றுவது, அதாவது, சிந்தனை அற்ற ஒரு கும்பலைச் சிந்தித்துப்பார்க்க இயலாதவற்றைச் செய்பவர்களாக மாற்றுவது, இந்த அரசியலின் முக்கிய திட்டமாகிறது. கொந்தளிக்கும் மக்கள் கையில் எடுப்பதற்கான பல்வேறு பிரச்சினைகளை அது கையில் எடுக்கிறது. அவர்களின் மோசமான உணர்வுகளைத் தூண்டிவிடுகிறது. இத்தகைய சூழ்ந்லையில் சிக்கியவர்கள் நல்லது, கெட்டதைப் பகுத்துப்பார்க்கும் திறனை இழந்துவிடுகிரார்கள். அவர்கள் வன்முறைக்கு உடந்தையாகிறார்கள். தாங்கள் குற்றவாளிகளாக மாறிவிட்டதை உணர்கிறார்கள்.
இந்த வன்முறை அரசியல், மக்கள் திரளைக் குற்றவாளிகளாக மாற்றுகிறது. அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாகின்றனர். இந்த குற்றத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் விரோதிகளாகக் கருதப்படுன்றனர். இவ்வாறாக அவர்கள் வெளிவர இயலாத சுழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த அன்று ஸ்வாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது ஆளும் கட்சியினரால் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வன்முறையைத் தடுப்பது எப்படி? சட்டம் பலன் அளிக்கலாம். ஆனால், இது வன்முறையால் தழைக்கும் அரசியல் கலாச்சாரம் தொடர்பானது. இந்தக் கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களும் தலைவர்களும் அரசியல் அதிகாரத்தில் இருக்கும்வரை உச்ச நீதிமன்றம் விரும்புவதை நிறைவேற்றுவது கடினம்தான்.
(அபூர்வானந்த் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.)
நன்றி: தி வயர் (https://thewire.in/rights/swami-agnivesh-attack-lynch-mobs-bjp)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக