புதன், 25 ஜூலை, 2018

ராஜஸ்தான்.. பாலை விட கோமியத்துக்குத்தான் மவுசு!

பாலை விட கோமியத்துக்குத்தான் மவுசு!மின்னம்பலம்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில், பால் விலைக்கு இணையாக மாட்டுக் கோமியம் விற்கப்படுவதாக அங்குள்ள பால் பண்ணை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நல்ல இனவிருத்தி கொண்ட பசுக்களின் கோமியத்துக்குப் பெரியளவில் தேவை இருக்கிறது. இங்கு, ஒரு லிட்டர் பால் ரூ.22 முதல் ரூ.26 வரை விற்கப்படுகிறது. ஆனால், ஒரு லிட்டர் கோமியம் ரூ.15 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. இதன்மூலம், 30 சதவிகித வருவாய் அதிகரித்துள்ளதாகப் பால் பண்ணை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பூச்சிக் கொல்லி மருந்துக்குப் பதிலாகவும், மதச் சடங்குகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கும் கோமியம் அதிகமாகத் தேவைப்படுவதால், இதற்கு மவுசு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பால் வியாபாரி ஓம் பிரகாஷ் மீனா கூறுகையில், 'ஒரு லிட்டர் கோமியத்தை ரூ.30 முதல் 50 வரை விற்பனை செய்கிறேன். பூச்சிக்கொல்லி மருந்துக்கு மாற்றாக அதைப் பயன்படுத்தும் விவசாயிகளிடையே கோமியம் தேவை அதிகரித்திருக்கிறது. மேலும், பயிர்களைப் பூச்சி தாக்குவதைத் தடுக்க அதன்மீது கோமியத்தைத் தெளிப்பார்கள்' என்கிறார்.
குஜராத்தில் உள்ள ஜுனகத் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் கோமியத்தைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களைக் கொல்ல முடியும் எனக் கூறியிருந்தனர். இதை மருத்துவர்கள் மறுத்திருந்தனர். ஆனால், பல மாநிலங்களில் மாட்டுக் கோமியம் மருந்து தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இந்தாண்டின் பிப்ரவரி மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் மருத்துவத்திற்குக் கோமியத்தைப் பயன்படுத்த மக்களிடையே அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆயுர்வேத மருத்துவ துறையின் இயக்குநர் ஆர்.ஆர்.செளத்ரி கூறுகையில், 'ஆயுர்வேத மருத்துவத்தில் எட்டு மருந்துகளுக்குக் கோமியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்து, கல்லீரல் நோய்கள், மூட்டுவலி மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாட்டைக் குணமாக்கும் என்பதை நிரூபிக்க முடியும்' எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக