வியாழன், 5 ஜூலை, 2018

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

tamilthehindu : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதற்கு மறுத்துவிட்டது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது, மக்களின் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுகிறது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.< இறுதியில் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றபோது போலீஸாருக்கும், மக்களுக்கும் மோதல் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பானதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளதால், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தது.
மேலும், ஆலையைத் திறக்கக் கோரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை என்ற அடிப்படையில் கடந்த மே மாதம் 28-ம் தேதி நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரியும், தண்ணீர் சட்டம் பிரிவு 18(1) (பி) பிரிவின் கீழ் கடந்த 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹிம் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அதேசமயம், வேதாந்தா குழுமத்தின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்ரவிட்டு, வரும் 18-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக