வியாழன், 19 ஜூலை, 2018

கார்த்திக் : நடிகை ஸ்ரீ ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும்

ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: கார்த்திமின்னம்பலம்:  நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். விவசாயம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்குநர் பாண்டியராஜ் இயக்க, சாயிஷா, சத்யராஜ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று கார்த்தி, பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் புதுக்கோட்டை சென்றனர். அங்குள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த ரசிகர்களை சந்தித்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி “துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று கவனம் செலுத்தி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.
இதனையடுத்து ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, “ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களிடம் சாட்சியம் இருந்தால் நேரடியாக போலீஸில் புகார் தெரிவிக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் இது போன்று செய்து வருகிறார்கள். இந்த விஷயத்திற்காக தனியாக நாங்கள் ஏதும் பேசமுடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இது குறித்து ஸ்ரீ ரெட்டி நமது மின்னம்பலம்.காமிற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “காவல் துறை வழக்கெடுத்துக் கொண்டால் அதை சந்திக்க தயார். ஆனால் எல்லோரும் பெரிய ஆட்களாக இருப்பதால் என்னைத்தான் காவல்துறையினர் முடக்க முயல்கிறார்கள். இது சம்மந்தமாக வாய்ஸ் ரெக்கார்ட், சேட்டிங் செய்தது மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சாட்சியம் என்னிடம் இருக்கிறது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக