வெள்ளி, 6 ஜூலை, 2018

ஸ்டாலின் உடனடியாக களம் இறங்கவேண்டும் ! காலம் தாழ்த்தினால் மிகப் பெரிய தவறாகிவிடும்?

LR Jagadheesan : அறிவிக்கப்பட்ட
எமெர்ஜென்ஸியைவிட கொடூரமான
அடக்குமுறை எடப்பாடி என்கிற எடுபிடியின் ஆட்சியில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்திராவின் எமெர்ஜென்ஸியில் அவரது எதிர்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தான் பெருமளவு நேரடியாக பாதிக்கப்பட்டார்கள். அரசியல் ஆர்வமற்ற, தொடர்பற்ற சாமானியர்களுக்கான நேரடி பாதிப்புகள் குறைவு என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் காலில் விழுந்தே முதல்வரான அடிமையின் அறிவிக்கப்படாத கொடுங்கோன்மை ஆட்சியிலோ எதிர்கட்சிகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான நேரடி பாதிப்பு என்பது குறைவாகவும் அரசியல் ஆர்வமற்ற, தொடர்பற்ற சாமானியர்களுக்கான நேரடி பாதிப்புகள் அதிகமாகவும் இருக்கின்றன. 
இதை செய்வது அராஜக ஆளும்கட்சி. ஆனால் இந்த பாதிப்புகளை தடுத்து நிறுத்தவேண்டிய அல்லது குறைக்கவேண்டிய முதன்மைக்கடமை எதிர்கட்சியின் செயல் தலைவருக்கானது. 
இத்தனைக்கும் அவர் இந்திராவின் எமெர்ஜென்ஸியின் கொடுங்கோன்மையில் மற்ற யாரையும்விட நேரடியாக அதிகம் பாதிக்கப்பட்டவர். ஒருநாளல்ல. இருநாட்களல்ல. ஓராண்டுக்கும் மேலாக கொடுஞ்சிறையை அனுபவித்தவர். 

எட்டுவழிச்சாலை தேவையா இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அதன்பேரால் சாமானியர்கள் மீது நடக்கும் கொடுங்கோன்மையும் அடக்குமுறையும் உடனடியாக தடுக்கப்பட்டே ஆகவேண்டும். கைதானவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவேண்டும். இனிமேல் ஒரே ஒருவர் கூட இது தொடர்பாக கைதாகக்கூடாது. 
பாதிக்கப்படும் பொதுமக்கள் ஒப்புதல் இன்றி இந்த பணிகள் எந்த வடிவத்திலும் முன்னெடுக்கப்படக்கூடாது என்கிற மூன்று நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் திமுகவின் செயல்தலைவருமான மு க ஸ்டாலின் உடனடியாக களம் இறங்கவேண்டும். முதல்கட்டமாக கைதானவர்களை விடுவிக்க திமுகவின் சட்டத்துறை நீதிமன்றம் செல்லவேண்டும். இவற்றை செய்யாமல் இனியும் காலம் கடத்தினால் வரலாறு மட்டுமல்ல வாக்காளர்களும் திமுகவையும் அதன் செயல்தலைவரையும் மன்னிக்க மாட்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக