திங்கள், 30 ஜூலை, 2018

வீரமணி : கலைஞருக்காக் ல;அஒக்மார் பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகள் வேண்டாம்

கருணாநிதிக்காக  பிரார்த்தனை வேண்டாம்: கி. வீரமணிமின்னம்பலம் : திமுக தலைவர் கலைஞர்  காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், “அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் தி.மு.க.வினர் ஈடுபடவேண்டாம்; கலைஞரை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்து வந்த - பின்பற்றி வந்த கொள்கையை மதிப்பதுதான்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனை வாசலில் திமுகவினர் திரளாகக் கூடி கலைஞரின்  உடல் நலம் பற்றிய தகவல்களை அறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘வாழ்கவே வாழ்கவே கலைஞர் வாழ்கவே’ என்று வாழ்த்து முழக்கங்களை ஒலித்து, ‘கலைஞர் நலம் பெற வேண்டும்’ என்று கையெழுத்து பதாகைகளை நிறுவி வருகின்றனர்.

இதற்கு இடையே மருத்துவமனைக்கு வெளியே பூசணிக்காய் சுற்றுவதும், பிரார்த்தனையில் ஈடுபடுவதும் என்று சிலர் தங்களுக்கு விருப்பமான முறையில் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி வருகின்றனர்.
இதுகுறித்து இன்று (ஜூலை 30) அறிக்கை வெளியிட்டுள்ள கி.வீரமணி, “ மருத்துவமனை முன்பு யாரோ ஒருவர் பூசணிக்காய் சுற்றி படைத்ததைத் தொலைக்காட்சியில் கண்டு வேதனை அடைந்தோம். அதைவிட வருந்தத்தக்க செய்தி - கலைஞர் நலம் பெற கூட்டுப் பிரார்த்தனை என்பதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சகோதரர் தா.மோ.அன்பரசன் அவர்களும், அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அவர்களும் அமர்ந்துள்ள படம் வந்துள்ளது கண்டோம். வேதனை அடைந்தோம்.
ஏற்பாடு செய்தவர்கள் மதநம்பிக்கையாளர்கள் ஆக இருக்கலாம்; அதனை அவர்கள் நடத்திக் கொள்ளட்டும். நமது தி.மு.க. பொறுப்பாளர்கள் தாட்சண்யம் கருதியோ, அழைத்ததைத் தட்ட முடியாது என்ற பண்பு காரணமாகவோ சென்றிருக்கக் கூடும். என்றாலும், இது ஒரு பரவலாக ஒரு தொற்று வியாதிபோல் பல இடங்களிலும் பரவக் கூடும்; அதைத் தவிர்த்தல் அவசியம் - தேவை! கலைஞர் உடல்நலத்தோடு இருந்தால் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் இத்தகைய ஏற்பாடுகளில் கலந்துகொள்வதை ஏற்கமாட்டார்” என்று குறிப்பிட்டுள்ள கி.வீரமணி,
“எவ்வளவுதான் வாக்கு வங்கி அரசியல் என்றாலும், கொள்கைக்கே முன்னுரிமை தருபவர் நமது மானமிகு கலைஞர் என்பது அவரை நெருக்கமாக அறிந்த நமக்கும், ஏன் எல்லோருக்குமே தெரியும். கலைஞரை மதிப்பது என்பதை - அவர் கொள்கையை மதிப்பதில் காட்டுவதே சரியானது. எனவே தாய்க் கழகத்தின் உரிமையின் பாற்பட்ட வேண்டுகோளாக அந்த சகோதரர்களுக்கு நாம் இதனை வைக்க விரும்புகிறோம்” என்று கி.வீரமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக