திங்கள், 30 ஜூலை, 2018

காவேரி மருத்துவமனை வாசலில் நள்ளிரவு காட்சிகள்..!

மருத்துவமனை வாசலில் நள்ளிரவு காட்சிகள்..!மின்னம்பலம்: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நேற்றிரவு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட தற்காலிக பின்னடைவு தீவிர சிகிச்சையின் காரணமாக இயல்பாகி வருவதற்கான முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. “தலைவர் கலைஞர் நலமாக இருக்கிறார்” என்று அடுத்த சில நிமிடங்களில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் உறுதிப் படுத்தியிருந்தார்.
கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருவதால் தொண்டர்களைக் கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அங்கிருந்து அகல மறுத்த தொண்டர்கள், கருணாநிதி நலம்பெற வாழ்த்தி முழக்கமிட்டபடி இருந்தனர். இதனால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி தொண்டர்களைக் கலைக்க முயன்றனர். மருத்துவமனை வாசலுக்கு வந்த ஆ.ராசா, தொண்டர்கள் மத்தியில் காவல் துறையினர் மைக்கின் மூலம், “கலைஞர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார். பேராசிரியர் உள்ளிட்டோர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். எனவே, வாகனங்களுக்கு வழிவிட்டுக் கலைந்து செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், மு.க.அழகிரி, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி, துர்கா ஸ்டாலின் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையிலிருந்து இரவு 11 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர்.
புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “அப்பா நலமாக இருப்பதால்தான் நாங்கள் வீட்டிற்குச் செல்கிறோம்” என்று கூறிவிட்டுச் சென்றார். கலைஞர் தற்போது நலமாக இருக்கிறார் என்று கனிமொழியும் தெரிவித்தார்.
ஆனாலும் தொண்டர்கள் அங்கிருந்து செல்லாமல் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நம் அனைவரின் அன்புக்குரிய கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
ஆகவே கழகத் தோழர்கள் அனைவரும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்துவிடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
ஸ்டாலினின் வேண்டுகோளையடுத்து தொண்டர்கள் எவ்வித முழக்கங்களும் எழுப்பாமல், வாகனங்களுக்கு வழிவிட்டு அமைதியான முறையில் சாலையின் ஓரத்திற்குச் சென்று காத்திருக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோர் இரவு 12.20 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர். சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து அப்பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக