வியாழன், 19 ஜூலை, 2018

அரசியலை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

Savukku ·: வரும் 2019 மக்களவைத் தேர்தலைப் பற்றி யோசிக்கும்போது, நம் மனது நம்மையறியாமலே 1977ஆம் ஆண்டின் அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தலுக்குச் சென்றுவிடுகிறது; ஏதோ ஒரு தந்திரம் நிகழ்ந்ததுபோல, நம்மைப் பிடித்து ஆட்டி எதிர்காலத்தைப் பாதிக்குமோ என நாம் பயந்த கருமேகங்கள் அந்தத் தேர்தலுக்குப் பின்னர் சட்டென்று விலகிவிட்டன.
1977ஐ நினைவுகூரும்போது நினைவுகள் அமைதியற்றே உள்ளன: ஜனதா ஆட்சி என்ற பரிசோதனையின் மாபெரும் தோல்வி, அதனால் இந்திரா காந்தி பதவிக்குத் திரும்ப  உதவியது, காலப்போக்கில் தோல்வியடைந்த ஜனதா (ஆட்சி) பரிசோதனையில் பிழைத்த மோசமான ஒரு வாரிசான பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் எல்லா வித அரசியலும் முடிவுக்கு வந்து நிரந்தர இருட்டு படரும், ‘இந்து ராஷ்டிரத்தை’ நோக்கிய பயணம் தொடங்கும் என்னும் அச்சம் நிலவும் பின்னணியில் 1977 தேர்தலைப் பார்க்க வேண்டும்.
நரேந்திர மோடியும் அமித் ஷாவும் உருவாக்கிய வலுவான தேர்தல் இயந்திரம் சமீபத்திய மக்களவை இடைத்தேர்தல்களில் சாதாரணமான, தற்காலிகமான எதிர்க்கட்சிக் கூட்டணிகளால் தோற்கடிக்கப்பட்டதால் மட்டுமே மீண்டும் நம்பிக்கை – மிகச் சிறிய அளவு என்றபோதிலும் – துளிர்ந்துள்ளது.
எதிர்க்கட்சிக் கூட்டணியானது உள்ளூர்ப் பின்னணிகளில் அவசர ஏற்பாடுகளாக அல்லாமல் மோசமான அரசியல் சக்திகளை அழிக்கும் விதத்தில் தத்துவார்த்த அடிப்படையில் அமைந்தாக வேண்டியது அவசியம்.
பாஜகவின் மோசமான நடத்தையால், வருத்தம் தரக்கூடிய அதன் 4 ஆண்டுக் கால ஆட்சியால் உருவான ‘பாஜக-விற்கு எதிரான’ அணுகுமுறை என்பது ஒரு வலுவான வாதம்தான். அதிகாரம் என்கிற பொறுப்பு கையில் கிடைத்தால் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று யாராவது (பலர் நினைத்தனர்) நம்பிக்கை (இன்னும்) வைத்திருந்தால், அந்த நம்பிக்கை தற்போது நிலைக்கவில்லை. வார்த்தை ஜாலம், தொழில்நுட்ப ஏமாற்றுதல் போன்ற ‘மூடிமறைக்கும்’ உத்திகளை இவ்விரு அமைப்புகளும் பின்பற்றியபோதும் அவர்களது விளையாட்டின் வினை அம்பலமாகிவிட்டது. உயர் சாதி இந்துக்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோருக்கான சாதகங்களை மீண்டும் நிலைநிறுத்த விரும்பும் மோசமான, ரகசியக் குழு ஒன்றால் நடத்தப்படும் இந்த அரசியல் கட்சி தன் நோக்கத்தை நிறைவேற்ற எதையும் செய்யும் ஒரு அமைப்பாகும்.

அடக்கிவைக்கப்பட்ட பொறாமை, வெறுப்பு ஆகியவற்றால் உயர் சலுகை படைத்தவர்களிடையே ஏற்படும் உளவியல் கூறு என்பது தீவிரமாக ஆராயப்பட வேண்டிய கருத்தாகும். ஆயினும், வேண்டுமென்றே கண்களை மூடிக்கொண்டிருப்பவர்களைத் தவிர அனைவருக்கும் இதன் விரிவான நோக்கங்கள் தெரிய வேண்டும் என்ற என் தற்போதையை நோக்கத்துக்கு இதுவே போதுமானது: ‘பசுக் காவலர்கள்’ என்ற போர்வையில் பொது இடங்களின் குரூரமான வன்முறை புரியும் கும்பல்களையும், எது வேண்டுமானாலும் செய்து தப்பிக்கலாம் எனத் திண்ணமாக நம்பும் அதிகாரபூர்வமான / அதிகாரபூர்வமற்ற கட்சித் தொண்டர்களையும் கண்டுகொள்ளாமல் ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருக்க, ‘பாஜகவிற்கு எதிரான’ என்ற வாசகம் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான வலுவான வாதமாக ஆகிவிட்டது. இது அவசியம் எனச் சொல்லும் அதேநேரம், ‘எதிர்க்கட்சி ஒற்றுமை’ தேவை என்பதற்காகக் குறிப்பிடப்படும் எதிர்மறையான காரணங்கள் போதாது. எதிர்க்கட்சி ஒற்றுமையை முன்னிறுத்த மேலும் ஆக்கபூர்வமான, வலுவான சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக அரசியல்வாதிகள் அடிக்கடி ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர். இது அபத்தமானது. அரசியல் நோக்கமில்லாத அரசியல்வாதி எப்படி இருக்க முடியும்? ஆனால் இந்த முரண்பாடான, ஆனால் அனைவராலும் முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு எதனால் எழுகிறது என்பதை முயற்சி செய்து புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் தமது ஆட்கள் / கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும், தமக்கு ஆதரவு தரும் குழுக்கள் இருக்கும் திசைக்கேற்ப அதிகாரச் சமநிலையை மாற்றக் கட்டாயம் நினைக்க வேண்டும். அரசியல் என்றாலே இதுதானே!
தாம் அவ்வாறு செய்வதே இல்லை என கட்சிகளும் / அரசியல்வாதிகளும் சொல்வதும் அரசியலின் இயல்பே. மேலும், கட்சிகளின் சிறப்பு விருப்பங்கள் விஷயத்தில் அவ்விருப்பமே பொதுவிருப்பம்தான் எனக் கூரை மேலிருந்தும் அவர்கள் கத்துவார்கள். அவை பொதுவாகத் தவறானவை என்பதனால் மட்டுமின்றி மறைமுகமாக அரசியல் வாதங்களை ஆரவாரத்துடன் அமுக்கிவிடுபவை என்பதாலும் இவற்றையெல்லாம் கவனமாக ஆராய வேண்டும்: குறிப்பாக ஒரு கட்சி ‘தேசத்துக்காகப்’ பேசுகிறது என்றால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதை எதிர்த்து யாராவது பேசுவார்களா என்ன? ‘தேசம்’ என்பதைப் பற்றிப் பேசினாலே இத்தகைய விளைவுகள் எழுவது இயல்பானதுதானே.
பாஜகவின் ‘தேசியவாதம்’ ஒரு கடினமான அடிப்படை விஷயத்திலிருந்து பிறக்கிறது. அது தான் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் ‘சிறப்பு விருப்பம்’ பெயரிடப்பட முடியாத ஒன்றாகும்: சமுதாயத்தின் வளஆதாரங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் அனுகூலங்களைப் பெற்ற உயர் ஜாதி இந்துக்களின் விருப்பம் இது. இந்தச் ‘சிறப்பு விருப்பம்’ எந்த விதத்திலும் தார்மீகத் தன்மை அற்றதாக இருக்கிறது. இதற்குப் பல சிக்கலான வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. சுதந்திரப் போராட்டத்தின் ‘இடதுசாரி’ வரலாறு, தீண்டாமையின் தத்துவார்த்த அஸ்திவாரங்களையும் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய சமூக வாழ்வின் கொடுமைகளையும் அழித்த இந்து சமூக சீர்திருத்தவாதிகளின் பணி முதலானவையே அந்தக் காரணங்கள். எது எப்படி இருந்தாலும், பிராமணியத்தை நேரடியாக ஆதரிப்பவர்கள் இப்போது இல்லை என்பதே உண்மை. இந்த ஒரு சிறப்பு விருப்பம் மட்டும் மனதுக்குள் இருந்தாலும், இதை வெளியே சொல்ல முடியாது. (இதைவிடப் பட்டவர்த்தனமான முட்டாள்தனங்கள் பாஜகவின் கலாசார நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளன என்பதென்னமோ உண்மைதான். சில உதாரணங்கள்: விநாயகர்- பிளாஸ்டிக் சர்ஜரி, ’மகாபாரத’-இன்டர்நெட், பரிணாமத்தை மறுக்கும் ஆரியர்கள் மற்றும் மிக முக்கியமானதாக ‘பசு கலாச்சாரம்’).
இந்தச் ‘சிறப்பு விருப்பம்’ தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி சமூகத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை மேலும் வலுவாக்கிக்கொள்ள ஒரே வழி இன்னொரு ‘சிறப்பு விருப்பம்’ – அதாவது அனைத்து விதமான அரசியல் – குறித்து எழும் குரல்களை அடக்கிவிடுவது. ‘தேச’ சேவை புரிவதற்காக எல்லா விதமான அரசியல் செயல்பாடுகளுக்கும் மூடுவிழா நடத்திவிடுதல். பிற கட்சிகளைச் சட்ட விரோதமானதாகக் காட்ட, அவை ‘நாட்டுக்கு எதிரானவை’ என்று பலமுறை கூறுவது, மறைமுகமாகக் கூறுவது, குறிப்பு தருவது போன்ற பல யுக்திகளை பாஜக கையாள்கிறது. இதன் விளைவாக, அரசியல் நடவடிக்கைகள் என்பதே மேலோட்டமான செயலாக மாறிப்போகும். விரும்பியோ, அறியாமலோ ஆதரவு தரும், கார்ப்பரேட்டுகள் நிர்வகிக்கும் ஊடகங்கள் வாயிலாக இந்த வியூகத்தை பாஜக ஏற்கனவே செயல்படுத்திவருகிறது. நமது தனித்துவமான ‘சுதேசி’ பிராமண ஃபாசிசமும் உள்ளே நுழையத் தயாராகிவருகிறது.
அரசியலையே ஏறக்கட்டிவிட யத்தனிக்கும் ஒரு கட்சியிடமிருந்து அரசியல் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் எல்லா அரசியல்வாதிகளுக்கும் பொதுவான ஒரு விருப்பம் இருப்பது தெரியவருகிறது. செயல்பாட்டில் இருக்கும் ஒரு ஜனநாயகக் கட்சியில் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறை எப்போதும் இருக்கும். அரசியல் கட்சிகள் எல்லாமே, எப்போதும், பல விதமான தள்ளுமுள்ளுகள், பரஸ்பர வசவுகள், சண்டைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுவரும்; ஈடுபட்டுத்தான்வருகின்றன. தன்னைத்தானே தேசியவாதக் கட்சி எனச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி, அரசியலுக்கு மூடுவிழா நடத்த அனுமதிக்கப்படாதவரை இதெல்லாம் தொடர்வது சகஜம்தான். அரசியல் செயல்பாடுகளே ஒழிக்கப்பட்டுவிட்டால் இவை எதுவுமே சாத்தியமாகாது.
முக்கியமான அரசியல் நோக்கர்களில் ஒருவரான ராஜீவ் பார்கவாவின் வார்த்தைகளைப் பாருங்கள்: “எந்த வகுப்பும் இனக் குழுவும் அரசு அதிகாரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தவோ, தனது செயல்திட்டத்தை அமல்படுத்தப் பயன்படுத்தவோ கூடாது. எனவே, ஒவ்வொரு வகுப்பும் இனக் குழுவும் தனது குறிக்கோள்கள் அனைத்துமே நிறைவேறாது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனது விருப்பம் / குறிக்கோள்களின் சில பகுதிகளை விட்டுக்கொடுத்து, கொள்கை ரீதியான சமரசத்துக்கு முன்வருகிறது. தனது செயல்திட்டத்தைப் பிறர் மீது திணிக்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைச் சமாளித்தால் நம்மால் நிலையான ஜனநாயகங்களை உருவாக்க முடியும்.”
எனவே, எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான எதிர்மறையான அடித்தளமானது பொதுவான, பகிரப்பட்ட தேவையான ‘தேசவிரோதக் கட்சியை’ப் பதவியிலிருந்து நீக்கும் நோக்கத்தால் உருவானது என்பது என் வாதம். கூட்டணி உத்தி என்பது ஜனநாயகத்துக்கு மறைமுக ஆபத்தான பெரும்பான்மை ஆதிக்கவாதத்தை எதிர்க்கும் சட்டரீதியான எதிர்ப்பின் வெளிப்பாடு ஆகும். எனவே, ‘அரசியல் செய்யும் உரிமை’யை ஆதரிப்பதே எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான ஆக்கபூர்வமான அடிப்படையைத் தரும் என்பது என் கருத்து.
எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான பொதுச் சித்தாந்தத்தைத் தேடும் தேடல் இதுவரை ஆரம்பிக்கவில்லை என நாம் நம்புகிறேன். முன்பு காங்கிரஸ் கட்சியிடம் சித்தாந்தம் என்று ஒன்று இருந்தது. இது அனைவரையும் உள்ளடக்கும் கத்தோலிக்க மத அணுகுமுறைக்கு ஒப்பான ஒன்று. சுதந்திரப் போராட்ட காலத்தின் போர்த் தந்திரத்தின் விளைவாகப் பிறந்தது; சொல்லப்போனால் இது சித்தாந்தமே அல்ல. இன்று மீதி இருப்பதெல்லாம் அமைப்பு ரீதியான  நினைவுகளே. வெறும் பேச்சுக்களைத் தாண்டிய ஒரு சித்தாந்தத்தை உருவாக்குவது என்பது காங்கிரசுக்கேகூட கடினமான, கிட்டத்தட்ட முடியாத ஒன்றாகும்.
பிற கட்சிகளைப் பொறுத்தவரை அவை வலுமிக்க பிராந்தியக் கட்சிகள்: வலுமிக்க கட்சிகள் ஏனெனில் அவர்களது சிந்தாந்தங்கள் அவர்கள் சிறிதும் வெட்கமின்றிப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘சிறப்பு விருப்பங்கள்’ மட்டுமே. அவர்களது சிந்தாந்த முகமூடியானது அவர்களுடைய உண்மையான நோக்கத்தை மறைக்கச் சிறிதும் பயன்படுவதில்லை. சமாஜ்வாதி கட்சியின் சமஜ்வாத் (சமூகநலவாதம்) யாதவ சமூகத்திற்கு மட்டும் பொருந்தும் என்றுகூடச் சிலர் கிண்டலடிக்கலாம்; ஆனால் இது கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
தனது ‘இந்துத்துவ’ ‘சிறப்பு விருப்பத்தை’ ‘தேசம்’ என்பதன் வண்ணங்களில் மறைத்துவரும் ஒரே கட்சியான பாஜக மட்டுமே இதற்கு விதிவிலக்கு.
பழைய நினைவுகளில் மூழ்கி ‘தேசிய’ வாசகத்தை காங்கிரசும் எழுப்பினால், இவ்விரு ‘தேசியவாதங்களையும்’ மாறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகும். காங்கிரசின் 1947க்கு முந்தைய காலனி ஆதிக்க விரோத தேசியவாதம் (அதன் குழப்பங்கள், சமரசங்களுடன்) பாஜகவின் அரசியல் – விரோத ‘தேசியவாதத்தை’ விடத் தெளிவாகவே இருக்கும். ஜனநாயத்தின் சாரத்தையே ‘தேசம்’ என்ற பெயரில் வடிகட்டி, மற்ற அரசியல் சவால்களை நசுக்க நினக்கும் பாஜகவின் தேசியவாதம் ஒரு மோசமான அரசியல் முயற்சியாகும். ‘தேசம்’ என்பது தன்னைக் காட்டிலும் “சிறிய” அளவிலான கோரிக்கைகளை நசுக்க முனைந்தால், அது அரசியலின் சாத்தியக்கூறையே கொன்றுவிடுகிறது. தேசத்தை எப்போதும் நிலைத்து நிற்கும், வரலாற்றைத் தாண்டிய ஒரு விஷயமாகப் பார்க்காமல் தனது அரசியலமைப்பினுள் இருக்கும் அனைவரின் சிறப்பு விருப்பத்தையும் நிறைவேற்றும் ஒரு அமைப்பாக இருக்கும்போதுதான் தேசம் என்பது செல்லுபடியாகக்கூடியதொரு அரசியலைச் சாத்தியப்படுத்தும். இத்தகைய தேசியம் என்பது, எப்போதும் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாக, கூட்டுறவின் மூலம் அனைத்தையும் அடையக்கூடிய ஒரு செயல்முறையாக அமைய வேண்டும்.
பிராந்திய ‘சிறப்பு விருப்பங்களை’ வாதித்து, அவற்றை அங்கீகரித்தால்தான் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான ஆக்கபூர்வமான அடிப்படை உருவாகும். இவற்றை உள்ளடக்கிய ஜனநாயகம் என்பது அரசியலிலிருந்து விலகும் வழி அல்ல; அதுவே அரசியலின் சாரமும் உள்ளடக்கமும் ஆகும் என்று உணர்ந்து, வாதம் நடைபெறலாம்; ஆனால் அது தொடர்புடைய அனைவரும் தொடர்ந்து களத்தில் இருப்பர் என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இந்த உரையாடல்களும் கருத்து மோதல்களும் நிகழ முடியும். ஒருவரை அப்புறப்படுத்த வேண்டும் (அவர் யாராக இருந்தாலும் – காங்கிரஸோ பாஜகவோ) என்னும் இலக்கு அடிப்படையில் ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான். பெரும்பான்மைக் குழுவினரின் அடிப்படையில் நாடப்படும், அமல்படுத்தப்படும் கொள்கைகள் அனைத்துமே களத்தில் இருக்கும் அனைவரையும் அங்கீகரிப்பதாக, அனைவரும் களத்தில் இருக்க வகைசெய்வதாக இருக்க வேண்டும். பிராந்திய ரீதியான விருப்பங்களுக்கிடையே மோதல் வரும்போது ஜனநாயக அரசியலில் பொதுவான எதிர்காலத்துக்குப் பங்கம் ஏற்படாதவாறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இதன் பின்னணியில் கூட்டணி என்பது தேர்தல் உத்தியாக மட்டுமல்ல. அது ஒரு கோட்பாடும்கூட. அதன் அடிப்படையிலுள்ள சமூகத்தில் அனைவருக்கும் ஒரு பங்குள்ளது. அனைவரின் கருத்தும் மதிக்கப்படுகிறது. கண்ணியமான, ஓரளவேனும் வசதியுள்ள வாழ்க்கை வாழ அனைவருக்கும் சமஉரிமை உள்ள சமூகத்தைக் காட்சிப்படுத்துகிறது; இதை நிறைவேற்றுவதில் உள்ள மாறுபாடுகளில்தான் அரசியலின் தேவை தொக்கி நிற்கிறது. அரசியலின் சாத்தியக்கூறைக் குறைக்கும் எதுவுமே இவ்விலக்கிற்கு எதிரானதுதான். அரசியல் ஈடுபாடு, வாதிப்பது, பகுத்தறிவது, விவாதம் செய்வது, தூண்டுவது ஆகியவையே இக்கூட்டுத் திட்டத்தின் அங்கமான இருக்க குறைந்தபட்ச நிபந்தனைகளாகும்: இவையனைத்தும் அரசியலமைப்புக்குட்பட்டு இருக்க வேண்டும். அதை மீறிய விருப்பங்கள் – அவை அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமென விருப்பம் (அல்லது) வன்முறை மூலம் பிறரது அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை மறைமுகமாகப் பறிப்பவர்கள் உட்பட – அவை எப்படி உள்ளதோ, அப்படித்தான் அங்கீகரிக்கப்பட வேண்டும்: இத்தகைய விருப்பங்களுக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் அவை பிளவுபடுத்தும் முயற்சிகளே.
எதிர்க்கட்சி ஒற்றுமை பொதுவான தத்துவத்தில் ஏற்படாமல் புதுமையான, வலுவான குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பட வேண்டும். ஆக, அத்தகைய வலுவான பொதுத்திட்டம் உறவுமுறை ஏற்பட ஆரம்பிக்கும்போதே உருவாகிவிடாது. மாறாக, தொடர்ச்சியாக வரையறை செய்யப்பட்டு, செயல்முறைப்படுத்தப்பட்டு, முன்னேற்றப்பட வேண்டும். இந்தக் குறைந்தபட்சப் பொதுத்திட்டம் பல கட்சிகளின் பிராந்திய விருப்பங்களைப் புறந்தள்ளி விட்டு ஏற்படாது; அவ்விருப்பங்களை நிறைவேற்றினால்தான் இது உண்டாகும், ஒருவிதத்தில் சொல்லப்போனால் நாமனைவரும் இதில் அடங்கியுள்ளோம். இத்தகைய பொதுவான, பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுத்திட்டத்தை உருவாக்குவதற்காக வேலைசெய்யவில்லை என்றால், வலுவான ஒரு பெரிய கட்சி அனைவரையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும். அரசியல் என்பதே முடிவுக்கு வந்துவிடும்.
நான் கூறுபவை ஆரோக்கியமற்றவை என ஆட்சேபிக்கப்படலாம் – இங்கு பொருந்தாத விருப்பங்கள், உண்மையான சூழல்கள் உள்ளன. உதாரணமாக ‘A’ என்பவரது ஆதாயம் ‘B’ என்பவரது நஷ்டம். காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்குத் தரப்பட்டால், கர்நாடக விவசாயிகளின் நீரின் அளவை அது குறைத்துவிடும். ஜாட்டுகள் (அ) குஜ்ஜார் இனத்தவர் (அ) வேறொருவர் இடஒதுக்கீடு ஆதாயம் பெற்றால், அது பிற இனத்தவரைப் பாதிக்கும். மிகக் குறைவான வளஆதாரங்கள், விகிதாசாரமற்ற கோரிக்கைகள் போன்றவை அன்றாட அரசியலில் நிறைந்துள்ளன: இது இப்போதைக்கு மாறப் போவதில்லை.
இருப்பினும், நாம் ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை என்னும் விதிகளை ஒப்புக்கொள்ளலாம். அரசியல் என்ற சாத்தியக்கூறு நிலவும் வரையில் அனைத்து சமரசங்களும் தற்காலிகமானவையே என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம். மிகவும் அடிப்படையான, விவாதிக்கப்பட முடியாத விருப்பம் என்னவெனில் அரசியல் என்ற சாத்தியக்கூறைத் தக்கவைப்பதுதான்: ஏனெனில், சமமற்ற சமரசத்தை ஏற்பது என்பது உள்நாட்டு யுத்தத்தை விடப் பரவாயில்லை. நாளைக்கே நாம் புதியதொரு கோரிக்கையுடனும் பதாகைகளுடனும் கோஷங்களுடனும் வாதங்களுடனும் களமிறங்குவோம். எல்லோருக்கும் தேவைப்படும் வளமான எதிர்கால முழக்கங்களுடனும் கூட்டணிகளின் சமமான உறுப்பினர்கள் என்ற அந்தஸ்துடனும் வருவோம். இந்த விதத்தில் பார்த்தால் கூட்டணி என்பது ஒரே சமயத்தில் போர்த் தந்திரமாகவும் தத்துவமாகவும் உள்ளது.
அலோக் ராய்.
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/right-to-politics-at-stake-opposition-unity-tactic-ideology)
தமிழில்: சுப்ரபாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக