வியாழன், 26 ஜூலை, 2018

டெல்லியில் பட்டினி சாவு .. 8வயது,4வயது மற்றும் 2 வயது சகோதரிகள் 8 நாட்கள் தொடர்ந்து பட்டினி

தலைநகரில் பட்டினிச்சாவுகள்!
மின்னம்பலம் :நாட்டின் தலைநகர் டெல்லியிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் நேற்று(25.07.18)பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலுள்ள மண்டவாலி பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8வயது,4வயது மற்றும் 2 வயதுடைய 3 சகோதரிகள் 8 நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்ததால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நள்ளிரவு 1மணிக்கு மருத்துவமனைக்கு அவர்களது தாயாரால் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து மருத்துவமனை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட உடல் கூறாய்வில் மூன்று சகோதரிகளும் சத்திண்மையாலும் பட்டினியாலும் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவர்களின் உடலில் எந்தவித உணவு உண்டதற்கான ஆதாரங்களும் இல்லை.
தடயவியல் நிபுணர்கள் அந்த வீட்டை ஆராய்ந்த போது வயிற்றுப்போக்கு சிகிச்சைக்கான சில மருந்து பாட்டில்களும், மாத்திரைகளும் இருந்துள்ளன. கூலி வேலை பார்க்கும் அவர்களுடைய தந்தையைக் காணவில்லை. அவர் வேலைக்கு சென்றுள்ளதாகவும் சில நாட்களில் திரும்பி வந்துவிடுவார் என்று அண்டை வீட்டார் கூறியுள்ளனர்.
சகோதரிகளின் உடல்களில் எந்த காயங்களுக்கான அடையாளங்களும் இல்லை. அவர்களின் தந்தையின் நண்பரும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சகோதரிகளின் தாயார் மனநிலை சரியில்லாதவர் என்பதால் அவருக்கு நடப்பது என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார்.
அவர்கள் சாப்பிட்ட மருந்துகளும் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளன. மண்டவாலிப்பகுதியானது டெல்லியில் ஆட்சி நடத்தி வரும் ஆம்ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மானிஷ் சிசோடியாவின் தொகுதியாகும். உண்மையில் நடந்தது பட்டினிச்சாவா என்பதை விசாரணை செய்ய டெல்லி அரசு ஒரு மாவட்ட நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக