செவ்வாய், 3 ஜூலை, 2018

சேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 3... மில்லியன் டாலர் கேள்வி?

.savukkuonline.com/ Image of a land owning farmer’s family crying after officials lay marker stones for Salem 8 lane விளம்பரப் பிரியையான சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பாஜிபாக்கரே 22.06.2018 வெள்ளிக்கிழமை கூறியது,”விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும், அதோடு சேர்த்து பொருத்தமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்திடவும், மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நிலத்திற்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படமாட்டாது, நிலத்திலுள்ள மரங்கள், கிணறுகள், வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை இவற்றிற்கும் சேர்த்து இழப்பீடு வழங்கப்படும்.  நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் வரையறுக்கப்பட்ட மதிப்பு ஆகியவற்றின் படி, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.21.5 லட்சம் முதல் ரூ.9.05 கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நேற்று வரை, 17 கி.மீ தூரத்துக்கு சாலை அளவீடு முதற்கட்ட பணி முடிக்கப்பட்டுள்ளது. 853 பட்டா உரிமையாளர்களின் 126 ஹெக்டேர் நிலங்கள் இந்த சாலைக்காக அளவிடப்பட்டுள்ளன”.
இந்த இழப்பீடு மிகவும் தாராளமான ஒன்றாக  தோற்றமளிக்கிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை  2007-2008ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட  நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு  சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில் கூறினார்.

ஆனால் இழப்பீட்டுத் தொகையை அளிக்கப் போவது யார் என்பதை சேலம் ஆட்சியரோ, தமிழக முதல்வரோ கூறவில்லை.
மாநிலத்தின் நிதி நிலை பற்றி நன்கு அறிந்தவர் முதல்வர் எடப்பாடி. ஆனால்  பாரத்மாலா  பரியோஜனாவில்  சேர்க்கப்படும் எந்த ‘புது’ திட்டத்திற்கும்,  நிலம் கையகப்படுத்துதலுக்கு ஆகும் செலவில் 50% சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிடாமல் முதல்வர் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
“பாரத்மாலா பரியோஜனா முதல்கட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத பசுமைவழித் திட்டங்கள்” என்பது பாரத்மாலா விதிமுறைகளில் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது,
“மாநில அரசால் பரிந்துரைக்கப்படும்  அல்லது தேவையானதாகக் கருதப்படும் திட்டங்கள் மற்றும் சுற்றுவட்டச் சாலை அல்லது  பைபாஸ் சாலை அமைக்க உகந்த திட்டங்கள். நிலம் கையகப்படுத்துதலுக்கு ஆகும் செலவில் 50% சதவீதத்தை மாநில அரசு அல்லது நிறுவனம் ஏற்றுக்கொண்டால் மட்டும்தான்   அத்தகைய புதுத் திட்டங்கள்  சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால்[MORTH]  கணக்கில்  எடுத்துக் கொள்ளப்படும்.

2018-2019ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டின் கடன் தொகையானது 3.55 லட்சம் கோடியாக இருக்கும்.
நிலம் கையகப்படுத்துவதற்கான செலவில் 50% மாநில அரசினால் செலுத்தப்பட வேண்டும் என்கிற உண்மையை தனக்குத் தெரியாது என்று எடப்பாடி பழனிச்சாமி கூற முடியாது. மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், “பாரத்மாலா பரியோஜனா விதிமுறைகளின்படி, நிலம் கையப்படுத்துதலுக்கு ஆகும் செலவில் 50% சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் மட்டுமே,  அடையாளம் காணப்பட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு மாநில அரசினால் பரிந்துரைக்கப்படும் திட்டங்கள் மத்திய அமைச்சகத்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்”.

23.11.2017 அன்று மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த விரிவான அறிக்கையில் எந்த இடத்திலும் சேலம் 8 வழித்தடம் குறிப்பிடப்படவில்லை என்பதை அறியும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. உண்மையில் சேலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி NH7 நெடுஞ்சாலையின்  ஓசூர் – தர்மபுரி – சேலம் – நாமக்கல் – கரூர் – திண்டுக்கல் – மதுரை  பகுதியை 6 அல்லது 8 வழித்தடமாக விரிவுபடுத்த எடப்பாடி பழனிச்சாமி அழுத்தம் கொடுத்திருந்தார்.
அவரது அறிக்கையில் கூறியது,”சேலம் நகரமானது மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். பாக்சைட், சுண்ணாம்பு, இரும்புத் தாது, குவார்ட்ஸ் மற்றும் கிரானைட்கள் உள்ளிட்ட மாநிலத்தின் கனிம வளங்களின் பெரும்பகுதி சேலம் மாவட்டத்தில் காணப்படுகிறது. சேலம் கைத்தறித் தொழில்துறையானது மிகவும் வளர்ச்சியடைந்த ஒன்றாகும். வடக்கு-தெற்கு வழித்தடம், சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ஆகிய முக்கிய வழித்தடங்கள் சேலம் நகரத்தின் வழியே செல்கின்றன. மாநிலத்தின் பொருளாதாரத்தில் சேலம் முக்கியப்பங்கு வகிக்க இவை அனைத்தும் காரணமாக இருக்கின்றன.
அதிகமாகிக் கொண்டிருக்கும் போக்குவரத்து மற்றும் விபத்து ஆபத்துக்களை கவனத்தில் கொண்டு, NH7 (புது எண் 44) நெடுஞ்சாலையின்  ஓசூர் – தர்மபுரி – சேலம் – நாமக்கல் – கரூர் – திண்டுக்கல் – மதுரை  பகுதியை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MORTH) வடிவமைக்கப்பட்ட 4 வழித்தடத்தை 6 அல்லது 8 வழித்தடமாக அகலப்படுத்தும்  முன்னுரிமை பட்டியலில்  இணைத்துக்கொள்ள வேண்டும்.
(iii) செங்கபள்ளியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் சாலை ஏற்கனவே 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால், அதனோடு சீரான இணைப்பை ஏற்படுத்தும்வகையில்  NH-47(புது எண் 544) சாலையின் சேலம் – குமாரபாளையம் – பவானி – பெருந்துறை – செங்கபள்ளி வழித்தடத்தை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்த கருத்தில்கொள்ள வேண்டும். அதற்கும் அப்பால் கோயம்புத்தூரிலிருந்து கொச்சின் வரையிலான பகுதிகளை 6 வழித்தடமாக அகலப்படுத்தி, அதன் மூலம்  சேலத்திலிருந்து கொச்சின் வரையிலான  முழு வழித்தடத்தையும் 6 வழித்தடமாக( 6 lane interstate highway) மாற்ற  கருத்தில் கொள்ள வேண்டும்”.
அதிக அளவில் நிலம் கையகப்படுத்தல் இல்லாமல் எளிதாக தற்போதுள்ள வழித்தடங்களை 6 அல்லது 8 வழித்தடமாக விரிவுபடுத்த இயலும் என்பது  எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்கு தெரிந்திருந்தும், இந்த புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்த திரு.பழனிச்சாமியை ஆயத்தப்படுத்தியது என்ன? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
பாரத்மாலா பரியோஜனா விதிமுறைகளின்படி, சேலம் பசுமைவழி விரைவுச் சாலையானது பாரத்மாலா திட்டத்தில் ஒருபோதும் பொருந்தாது.
பாரத்மாலா பரியோஜனா விதிமுறைகளின்படி பசுமைவழி விரைவுச் சாலைக்கான நிபந்தனை பின்வருமாறு,”தேசிய மற்றும் பொருளாதார வழித்தடங்களில் போக்குவரத்து 50,000 PCUக்கும் அதிகமாக உள்ள மற்றும் வளர்ச்சியடைந்த பகுதிகளை உள்ளடக்கிய குறிப்பிட்ட பகுதிகள்”.
ஆக பாரத்மாலா விதிமுறைகளின்படி, போக்குவரத்து அளவானது 50000 PCU   (Passenger Car Units )க்கு மேலாக இருந்தால்தான் பசுமைவழி விரைவுச் சாலை அமைக்க முடியும்.  ஆனால் NHAI-இன் பிராந்திய அதிகாரி பவன்குமார் அவர்கள் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “போக்குவரத்து அளவீடானது 40000 PCUக்கும் குறைவாக இருக்கும், ஆதலால் சாலையின் அகலத்தை 110 மீட்டரிலிருந்து 70 மீட்டராக குறைக்க அமைச்சரவை விதிமுறைகள் அனுமதி அளித்துள்ளன. மொத்தம் 10கிமீ தொலைவு செல்லும் வனப்பகுதிகளில் சாலையின் அகலமானது மேலும் குறைக்கப்பட்டு 50மீட்டர் ஆக்கப்படும்”. முழுஅறிக்கையை இங்கே படிக்கவும். எனவே NHAI-இன் மதிப்பீட்டின்படி கூட போக்குவரத்து 40000 PCU மட்டுமே இருக்கும்.
அதுபோக, சாலையின் அகலம் 70 மீட்டராக குறைக்கபப்டும் மற்றும் சில இடங்களில் 50மீட்டராக குறைக்கப்படும் என NHAI பிராந்திய அதிகாரியே  கூறுகிறார். இது உண்மையாக இருந்தால், பசுமைவழி விரைவுச் சாலைக்கான தேவை என்ன? அல்லது அவ்வாறு அழைக்கப்படத்தான் முடியுமா?
8 வழிச்சாலை பற்றிய நமது இரண்டாம் கட்டுரையில் குறிப்பிட்டது போல, முழுமையான விரிவான விஞ்ஞானரீதியான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகளுக்குப் பின்னர்தான் பசுமைவழி விரைவுச் சாலை மற்றும் பொருளாதார வழித்தடங்களுக்கான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டன.  பாரத்மாலா அறிக்கையின் படி, அத்தகைய முழுமையான ஆய்வுகளுக்குப் பின்னர்தான் 1900கிமீ நீளமுள்ள வழித்தடங்கள் நாடுமுழுவதும் அடையாளம் காணப்பட்டன.  சுமார் 800கிமீ நீளமுள்ள வழித்தடங்கள் ‘பசுமைவழி விரைவுச் சாலை’ பிரிவின் கீழ் பாரத்மாலாவின் முதல்கட்டமாக(Phase 1) எடுத்துக்கொள்ளப்பட்டன என அந்த அறிக்கை கூறுகிறது. அந்த 800கிமீ அல்லது மொத்த 1900கிமீ என எதிலும் சேலம் வழித்தடம் இல்லவே இல்லை.
ஆனால் எந்த படிப்பினையும் ஆய்வும் இல்லாமல்  எடப்பாடி பழனிச்சாமி சேலம் வழித்தடத்தை எப்படி அடையாளம் கண்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
பாரத்மாலா அறிக்கையின் “பெரும் சவாலான பொறிமுறை”(Grand challenge mechanism) என்னும் தலைப்பின்படி, பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தவும், துரிதப்படுத்தவும் பின்வரும் நிபந்தனைகள் உள்ளன.
1) பரத்மாலா திட்டத்தின் கீழ் 10 சதவிகித நிதி, துரித முறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கென ஒதுக்கப்படும்.  உடனடியாக எந்த மாநிலம், இத்திட்டத்துக்கான நிலத்தை வழங்குகிறதோ, அந்த மாநிலத்தின் திட்டங்கள் துரித முறையில் செயல்படுத்தப்படும்.
2) “துரித முறை திட்டத்தின்” கீழ், ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு மாநிலத்தில் அதிகபட்சம் இரண்டு வழித்தடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதுவும் 100கிமீ நீளத்திற்கு அதிகமானதாக இருக்கக் கூடாது.
3) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள சாலைகளில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய வழித்தடங்களை மாநில அரசு சுட்டிக் கட்டலாம்.
4) அவ்வாறு மாநில அரசால் விருப்பம் தெரிவிக்கப்பட்டால், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையானது முதல்நிலை (preliminary) உறுதிப்படுத்துதலை மாநில அரசுக்கு அனுப்பும், மற்றும் திட்ட வடிவத்தை இறுதி செய்யுவும், திட்ட அறிக்கையை தயார்படுத்தவும் வலியுறுத்தும்.
5) விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தயார் ஆன நேரத்தில் 50% நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தியிருந்தால், அந்த திட்ட அறிக்கை துரிதப்படுத்தப்படும், மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையானது இரண்டாம்நிலை உறுதிப்படுத்துதலை மாநில அரசுக்கு அனுப்பும்.
மேலே குறிப்பிட்ட எந்த நிபந்தனைகளையும் சேலம் 8 வழித் திட்டம் நிறைவேற்றவில்லை. பின்னர் எதற்காக இந்தப் புதிய 8 வழித் திட்டம் மக்களின் தொண்டையில் திணிக்கப்படுகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
சேலம் – அழிவின் பாதை திட்டத்தில் ஒவ்வொருநாளும்  அம்பலமாகும் ஓட்டைகள் அனைத்தும், இந்த திட்டத்தில் எதுவும் சரியில்லை என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன.
ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி அரசானது மிகவும் ஆர்வத்துடன் உள்ளது.
மொழிபெயர்ப்பு உதவி – குருநாதன் சிவராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக