வியாழன், 5 ஜூலை, 2018

2019 தேர்தலுக்கான பிஜேபியின் புதிய உத்தி.

சவுக்கு : அடுத்த பொதுத் தேர்தலுக்கு நாம் நெருங்கிச் செல்கையில்,    நம்பகத்தன்மை குறைந்து வரும் பாஜக  2019 ஆம் ஆண்டின் சவாலை சமாளிப்பதற்காக  அதன் உத்தியை  மறுசீரமைத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.  2014 தேர்தலுக்கு, அது ஒரு ஜனரஞ்சகமான அரசியல் உத்தியாக,  காங்கிரஸ் பாணியிலான இணக்கமான அரசியலைப் பயன்படுத்தியது. அதாவது, முக்கியமாக மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு நாம், நமக்கு எதிராக அவர்கள் என்ற உத்தியை  கையாண்டது. இது காங்கிரஸ் சந்தித்த நம்பகத்தன்மை  சரிவோடு சேர்ந்து வெற்றி பெற உதவியது.   நரேந்திர மோடியின் இமேஜ் அக்கட்சிக்கு சாதகமாக இருந்தது. அந்த நேரத்தில், வியத்தகு முடிவுகளை வழங்கக்கூடிய ஒரு தீர்க்கமான தலைவராக அவர் கருதப்பட்டார்.

இந்த சாதகங்களில் பல இப்போது குறைந்து வருகின்றன. அவர் கூறியவை எதையும் செய்து முடிக்க இயலாதவர் என்ற ஒரு பெயர் நிலவுகிறது.  தவறே இழைக்காதவர் என்று மோடி கருதப்படவில்லை. காங்கிரஸ் சற்றே தட்டுத் தடுமாறி வேகம் பெற்றுக்கொண்டு வருகிறது. கொஞ்சம் ஆர்வத்தை உண்டு பண்ணக் கூடிய கவர்ச்சிகரமான வகையில் அக்கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  வட இந்தியாவின் பெரும்பகுதியிலும், அனேகமாக மேற்கிலும், பழைய மாய எண்ணை (magic number) தொட முடியாது என்பதை  பாஜக உணர்ந்துள்ளது.    வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிற பகுதிகளுக்கு பரவி   இழப்பை ஈடு செய்வதே அதன் ஆரம்ப  உத்தியாக இருந்தது. அதேபோல, தென் மாநிலங்களில் அதன் பிடியை விரிக்க பாஜக விரும்பியது. இந்த இரண்டு உத்திகளும் எதிர்ப்பார்த்த பலனைத் தரவில்லை.
தெற்கில் நம்பகத்தன்மையைப் பெற பாஜக தவறிவிட்டது. தமிழகத்தில், ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை வேட்டையாடுவது ஆகியவை அதிக பலனை தரவில்லை. கேரளாவில்,    ஆர்.எஸ்.எஸ்-ன் “இருத்தல்“ (presence of the RSS) வாக்குகளாக மாறியிருக்கவில்லை. நீதிமன்ற தலையீட்டிற்கு பின்னர் ஹதியா வழக்கில் வீழ்ந்ததுடன், அம் மாநிலத்தில் ஒரு மாற்று நுழைவுப் புள்ளியை பாஜக கண்டுபிடிக்க முடியவில்லை. தொடக்கத்தில் ஒரு ஒப்பீட்டளவில் பிரகாசமான இடமாக இருந்தாலும், புதிய கூட்டணி அரசாங்கம் நிறுவப்பட்ட பின்னர், கர்நாடக அரசியல் மனநிலை இப்போது நிச்சயமற்றதாகத் தெரிகிறது.
சிறப்பு அந்தஸ்தில் பாஜக பின்வாங்கிய தற்கு பின்னர், ஆந்திரப்பிரதேசம் “பூமராங்“ ஆனது.   தனது பரபரப்பற்ற பாதயாத்திரைகள் மூலம் ஜகன்மோகன் ரெட்டி எந்த பலனும் அடையவில்லை. காப்பு வாக்காளர்களை ஈர்க்க பவண் கல்யானை அமைதியாக களத்திலிறக்கியது அதிக நன்மையை தரவில்லை. காங்கிரஸின் எழுச்சியைத் தடுக்க மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்க விரும்பும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடனான தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் கொண்டு தென்னகத்தில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான பாஜகவின் ஒரே நம்பிக்கை தெலுங்கானா ஆகும். காங்கிரஸின் எழுச்சி அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை நெருக்கி வரும் மாநில சட்டமன்ற தேர்தல்களை பாதிக்கக்கூடும். சிறுபான்மையிரை . KCR திறமையாக நிர்வகித்ததன் காரணமாக, பாஜகவின் சொந்த அமைப்பின் வளர்ச்சி குன்றிவிட்டது. மாநிலத்தில் உள்ள இந்து  கோயில்களில் யாகங்கள் நடத்தியும், தாராளமாக நிதியுதவி செய்தும் இந்து அடையாளத்தின் அடையாளங்களை அவர் கையகப்படுத்தியுள்ளார்.
ஒரு சாதாரண பெரும்பான்மையை பெறும் வாய்ப்புக்கூட இந்த தருணத்தில் ஒரு கடினமாக பணியாக பாஜகவுக்கு தோன்றுகிறது. அண்மையில் அதனுடைய அணுகுமுறையில் மாற்றத்தைப் பார்க்கையில், அவர்கள் முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களையும் விலக்கி ஒரு புதிய வகையான பிளவை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  புதிய உத்தி என்னவென்றால், தலித்துகளின் வாக்குகளையும் இழக்க பிஜேபி தயாராகி விட்டது.  பிரதிநிதித்துவம் செய்யப்படாத சிறிய தலித் துணை சாதிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக தலித்துகளை பிளவுபடுத்தும் கொள்கையை பாஜக தொடர்ந்து கடைபிடிக்கும்.
தெலுங்கானா மாநிலத்தின் ஒரு வலுவான மாடிகா தலைவரான கிருஷ்ணா மாடிகா, தேசிய நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்ட சாதிகளின் துணைப் பிரிவுகள் சிக்கல் தொடர்பாக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது சில பலன்களைத் தரலாம். ஆனால், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் இடதுசாரிகள் ஆகியோரை புதிய கூட்டணியாக இணைக்கும் உத்திதான் மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது.
பிஜேபியின் புதிய உத்தி உயர்சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை ஒன்றிணைக்கும் ஒரு புதிய சமூக பிணைப்பாக திட்டமிடப்படுகிறது.  முந்தைய பொதுத் தேர்தல்களில் பா.ஜ.க வெறும் 31 சதவீத வாக்குகளையே பெற்றது, அந்த எண்ணிக்கையை பராமரிப்பதற்காக, பிராமண, க்ஷத்ரிய, வைஷ்யா மற்றும் ஓ.பி.சி. வாக்குகளை ஒருங்கிணைப்பது மிக முக்கியமானது என்று அக்கட்சி கருதுகிறது.
இந்த உத்தியின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களோடு சேர்த்து, தலித்துகளையும் விமர்சிக்கும் நடைமுறையை பிஜேபி கையாளத் தொடங்கி உள்ளது.  இந்த உத்தியின் முதல் செயல்தான் பீமா-கோரேகான். மேலும், தலித்துகள் மற்றும் ஜிஹாத் இஸ்லாத்திற்கும் நெருக்கமான உறவு உள்ளது என்று கட்டமைப்பதையும் ஒரு உத்தியாக பாஜக கையாளத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமிய குழுக்களிடமிருந்து ஜிக்னேஷ் மேவானி நிதியுதவி பெற்றுள்ளதாக அவர்கள் கூறினர். இப்போது  ரோஹித் வெமுலாவின் தாயார், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் (IUML )- இடமிருந்து  உதவி பெற்றதாகக்கூறி கண்டிக்கப்படுகிறார். இந்த உத்திகளுக்கும் பின்னே உள்ள தந்திரம்,   ஜிஹாதி இஸ்லாமிய குழுக்களுக்கும், தலித்துகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டி அதன் மூலம் இடது சாரிகளையும் இவர்களோடு சேர்ந்து சிலுவையில் அறைய பாஜகவுக்கு இது உதவுகிறது.
மோடிக்கு எதிரான திட்டமிடப்பட்ட மாவோயிஸ்டு தாக்குதல் பற்றிய சமீபத்திய கூற்றுக்கள் அத்தகைய ஒரு “மறைமுக உணர்த்தலை“ வலுவூட்டுகின்றன.  மாவோயிஸ்டு மற்றும் ஜிகாதி தொடர்பு பீமா-கோர்கானின் சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இப்போது பள்ளத்தாக்கில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடனும் தீவிரவாதத்துடனும் பொருத்தப்படும். ஒருபுறம், பாகிஸ்தானுக்கு வளர்ச்சி நிதி வழங்குவது, நவாஸ் ஷெரீஃப் மற்றும் UPSC தேர்வில் நன்கு செயலாற்றிய காஷ்மீரிகளை பிரதமர் நரேந்திர மோடி சென்று சந்தித்தது (அவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார்) மற்றும் ரமலான் மாதத்தில் போர் நிறுத்த அறிவிப்பு போன்ற முஸ்லிம்களை சமாதானப்படுத்த தொடர் முயற்சிகளை பாஜக மேற்கொண்டாலும், ஜம்மு-காஷ்மீரில் அரசாங்கத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் நன்றிகெட்டவர்கள் மற்றும் நியாயமற்றவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தலித்துகளை தனிமைப்படுத்துவதன் மூலம் உயர் ஜாதி வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து, பெரும்பான்மையான இந்துக்களிடையே மீறல் உணர்வுகளை ஒருங்கிணைக்க இது மேடை அமைத்துள்ளதாக பாஜக எண்ணுகிறது.
மேலும், முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் மாவோயிஸ்டுகள் கூட்டணியின்  பிரதிநிதி என ராகுல் காந்தியை அக்கட்சி முன்வைக்கிறது. முஸ்லீம் அடிப்படைவாதம், தலித் ஆக்கிரமிப்பு மற்றும் மாவோயிஸ்டுகள் போன்ற இடதுசாரி அரசியல் குழுக்களின் தேசிய அச்சுறுத்தல் போன்றவை மீது காங்கிரஸ் மிகவும் மென்மையாக இருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. காங்கிரஸின் மறைமுக ஆதரவுடன் இந்த மூன்று குழுக்களும், காஷ்மீர் மக்களுடன் இணைந்து, தேசிய பாதுகாப்புக்கு நேரிடக்கூடிய அச்சுறுத்தலை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
பாஜகவின் உத்தி ஓ.பி.சி-க்கள் எனப்படும் மற்ற பிற்பட்ட வகுப்பினர் எந்தப்பக்கம் வாக்களிப்பார்கள் என்பதைப் பொருத்து அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு கொள்கையில் மாற்றங்கள், அதேபோல் வளர்ந்து வரும் வேலையின்மை ஆகியவை OBC-க்களின் நலன்களை பாதிக்கின்றன. இந்த குழுக்களுக்கு இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளுடனான உறவு, ஒரு சிக்கலான உறவு என்பதில் இரகசியம் இல்லை. கடந்த மூன்று தசாப்தங்களில், ஓ.பி.சி.க்கள் பிராந்தியக் கட்சிகளின் முன்னணியில் இருந்தன. பல வட மாநிலங்களில் காங்கிரசின் சரிவுக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.
பிராந்தியக் கட்சியின் தலைமையில் ஏற்பட்ட தேக்கத்தை அடுத்து OBC-க்களின் மத்தியில் இருக்கும் சிறிய குழுக்கள் பாஜகவுக்கு நிரந்தரமாக நகர்ந்து ஒரு வலிமையான சக்தியாக இருந்து வருகின்றன. தங்களை வீரர்களாகவும்,  சத்திரியர்களாகவும் சித்தரிக்கும் வகையிலான இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
பாஜக தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த புதிய அரசியல் “காக்டெய்ல்“ (மதுக்கலவை) இப்போது பாஜகவில் பிரதிநிதித்துவம் பெறுவதில் தலித்துக்கள் மத்தியில் ஏற்பட்ட சில குழப்பங்களைத் தணித்துவிடும்.  இதற்கு நேரெதிராக உள்ள குழுக்களை இந்த நகர்வு, பிஜேபியின் பின்னால் அணி சேர்த்து, தற்போதைய ஆட்சியின் தோல்விகளை பின்னுக்குத் தள்ள உதவும்.  பல்வேறு பாரம்பரிய வாக்காளர்களிடையே பாஜக இழந்துவரும் செல்வாக்கின் வெளிப்பாடாக இந்த உத்தியை புரிந்து கொள்ள வேண்டும். தங்களது பாரம்பரிய வாக்காளர்கள் தங்களை விட்டு விலகிச் செல்கிறார்கள் என்பதை உணர்ந்த பிஜேபி, தற்போது, புதிய வகையான பிளவுகளை உருவாக்கி, அதன் மூலம் 2019ல் ஆட்சியமைக்கத் தேவையான குறைந்த அளவு இடங்களை வெற்றி பெற முடியும் என்று நம்புகிறது.
அது நடக்காது என்று கூறுவதற்கில்லை.
அஜய் கூடாவர்த்தி
நன்றி தி வயர் இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக