செவ்வாய், 24 ஜூலை, 2018

தமிழகத்தில் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு ஆணை

தினத்தந்தி :சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
துறையின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாநகராட்சிகள், நகராட்சிகள், 3-ம் நிலை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியில் 1.4.2008 முதல் பொதுவான மாற்றங்கள் செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. நகர உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பெரு நகர சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர், பேரூராட்சிகள் இயக்குனர் ஆகியோர் அரசுக்கு கடிதம் எழுதி, நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நகர உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் அடிப்படையில், சொத்து வரியில் மாற்றங்களை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று அவர்களால் முன்மொழியப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.


மேலும், இந்த பிரச்சினையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில், சொத்து வரி உயர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் அளித்த முன்மொழிவில் அரசு முடிவெடுத்து, அந்த முடிவை கோர்ட்டுக்கு 2 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 3.8.18 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், சொத்து வரி உயர்வு தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர், பேரூராட்சிகள் இயக்குனர் ஆகியோருடைய முன்மொழிவுகளையும், ஐகோர்ட்டின் உத்தரவையும் அரசு விரிவாக ஆய்வு செய்தது.

அதில், பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட இடங்களில் சொத்து வரியை இந்த அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) இருந்து பொதுவாக மாற்றி அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

இந்த சொத்து வரி உயர்வுக் கான வழிகாட்டி மதிப்பீடுகள் பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனர், பேரூராட்சிகள் இயக்குனர் ஆகியோரால் வெளியிடப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சொத்து வரியை குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதமும், மற்ற வணிக ரீதியிலான கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, எந்தெந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு எந்தெந்த வகையிலான வரி விகிதத்திற்குள் உட்படுத்தலாம்?. எந்தெந்த விகிதத்தில் உயர்த்தலாம்? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் தனி அதிகாரியான கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு, மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வைக்கப்படுகிறது.

சென்னை கே.கே.நகரில் 540 சதுர அடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 6 மாதத்திற்கு ரூ.391 சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இனி ரூ.200 கூடுதலாக வசூலிக்கப்படும். திருவான்மியூரில் 1200 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு 6 மாதத்திற்கு ரூ.1,218 சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இனி ரூ.1,827 வசூலிக்கப்படும்.

இதேபோல், தியாகராயநகரில் 2400 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு ரூ.9,434 சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இனி ஏறத்தாழ ரூ.5 ஆயிரம் கூடுதலாக வசூலிக்கப்படும். மேற்கு அண்ணாநகரில் 932 சதுர அடி வீட்டிற்கு ரூ.1,135 சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இனி ரூ.1,710 வசூலிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக