செவ்வாய், 10 ஜூலை, 2018

இல்லாத அம்பானியின் இன்ஸ்டிடியூட்டுக்கு 10000 கோடி ரூபாய் நிதி உதவியும் உலகத்தரம் என்ற அங்கீகாரமும் வழங்கிய மோடி அரசு

tamilthehindu :தொடங்கப்படாமல் ‘பேப்பர்’ அளவில் மட்டுமே உள்ள ஜியோ
இன்ஸ்டிடியூட்டுக்கு மத்திய அரசு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரம் வழங்கி, பல கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.
உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு நிகராக இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்ததும் நாட்டின் 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் கூறுகையில் ‘‘பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, பிஐடிஎஸ் பிலானி, மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனங்கள் மத்திய அரசால் நடத்தப்படுபவை. எஞ்சிய 3 நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை’’ என தெரிவித்து இருந்தார்.

இந்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும், அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ இன்டிடியூட்டுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு வெளியான உடன், அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களை இணையதளங்களில் பலர் தேடினர். அப்போது, ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னமும் தொடங்கப்படவில்லை என்ற விவரம் தெரிய வந்தது. வெறும் திட்ட அளவில்தான் இருப்பதாகவும் இணையதளங்களில் விவரங்கள் வெளியாகின.
இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை, நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். சமூகவலைதளங்களில் மத்திய அரசையும், பிரகாஷ் ஜவடேகரையும் கடுமையாக விமர்சித்து பதிவிடப்பட்டன.
இதுபோலவே எதிர்கட்சிகளும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறன. இன்னமும் தொடங்கப்படாத நிறுவனம் எப்படி தலை சிறந்த நிறுவனமாக இருக்க முடியும் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இதனிடையே ஜியோ இன்ஸ்டிடியூட் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுபற்றி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கையில் ‘‘தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மூன்று அரசு சார்ந்த நிறுவனமும், மூன்று தனியார் நிறுவனங்களும் தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தனியார் நிறுவனங்களில் ஒன்று ‘கிரீன்பீல்டு’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒன்று தேர்வு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரீன்பீல்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் பல நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் சிறந்த நிறுவனமாக ஜியோ இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யப்பட்டது; சமூகவலைதளங்களில் இதுகுறித்து தவறான தகவல் பரப்பப்படுவதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை செயலாளர் சுப்பிரமணியம் கூறுகையில் ‘‘ஜியோ நிறுவன இன்ஸ்டிடியூட்டுக்கு உடனடியாக எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கவில்லை. அந்த நிறுவனம் பேப்பர் அளவில்தான் உள்ளது. அது இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பது அரசுக்கும் தெரியும். இதுபோல பேப்பர் அளவில் உள்ள 11 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் ஜியோ நிறுவனத்தின் செயல் திட்டம் ஏற்புடையதாகவும், சிறப்பாகவும் இருந்ததது.
அதன் அடிப்படையிலேயே நாட்டின் மிகச்சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் அது இணைக்கப்பட்டது. எனினும் அந்த நிறுவனம் கூறியபடி அடுத்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்டால் மட்டுமே அந்த அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நிபந்தனைகளுடன் மட்டுமே நிதியுதவியும் வழங்கப்படும். அதுவரை அதற்கு உடனடியாக அங்கீகாரம் எதுவும் வழங்கப்படவில்லை’’ எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக