ஞாயிறு, 3 ஜூன், 2018

ஸ்டெர்லைட் ஆவணப்படம் LEMS (Let’s Make Engineering Simple) நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம்


Shankar A : மிக முக்கியமான ஆவணப்படம்.
ஸ்டெர்லைட் குறித்து, LEMS (Let’s Make Engineering Simple) என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் இது. ஊரில் உள்ள அத்தனை பேரையும் மிக மிக எளிதாக குற்றம் சொல்லி, குறை கூறி, ஏகடியம் பேசும் உலகம்தான் சமூக வலைத்தளம்.
சமூகப் பொறுப்போடு, சமூகத்துக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல், இஎம்ஐ கவலைகளோடு, இருக்கும் வேலையை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் ஒரே நோக்கில் வாழ்க்கையை அணுகும் நபர்கள்தான், மிகத் தீவிரமான கருத்துக் கந்தசாமிகளாக வலம் வருகிறார்கள்.
குறைந்தபட்சம், ஒரு சமூக பிரச்சினை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் புகார் அனுப்பக் கூட முனைய மாட்டார்கள். ஒன்று பயம். மற்றொன்று, நமக்கு எதற்கு என்ற மனப்பான்மை. ஆனால் இவர்கள் வானம் முதல், பூமியின் அடியாழம் வரை உள்ள அனைத்து விவகாரங்களிலும் கருத்து சொல்பவர்களாகவும், உணர்ச்சிமயமான சொல் வீச்சில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பதை காண முடிகிறது.
இவர்களுக்கும், இணையம் வருவதற்கு முன்பாக, டீக்கடைகளில் தினத்தந்தி படித்து விட்டு, வெட்டி நியாயம் பேசுபவர்களுக்கும் துளியும் வேறுபாடு இல்லை.

இத்தகைய சூழலில், சில இளைஞர்கள், தூத்துக்குடி சென்று, நீர்நிலைகள், நிலத்தடி நீர், காற்று ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து, பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி, அவற்றின் முடிவுகளை வைத்து, மிக மிக நேர்த்தியாக தயாரித்துள்ள ஆவணப்படம்தான் இந்த ஆவணப்படம்.
ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியுள்ள அபாயகரமான சுற்றுச் சூழல் மாசு குறித்து இந்த ஆவணப்படம் பேசுவதோடு, வைகுண்டராஜனின் நிறுவனம், ஸ்டெர்லைட்டை விட, மோசமான தீங்கை விளைவித்து வருவதையும் இந்த ஆவணப்படம் அம்பலமாக்குகிறது. ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன் தீங்கு பரவலாக தெரிந்துள்ளது.
ஆனால் வைகுண்டராஜனின் ஆலை செய்யும் மாசு இது வரை விவாதப் பொருளாகக் கூட ஆகவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை அடுத்து வைகுண்டராஜனின் ஆலை உடனடியாக மூடப்படுவதுதான் அடுத்த தூத்துக்குடி மக்களின் போராட்டமாக அமைய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை குறித்த அடுத்தகட்ட போராட்டம் இனி நீதிமன்றங்களில். வைகுண்டராஜனின் ஆலை மீது, இடதுசாரி அமைப்புகள், மக்கள் அதிகாரம் அமைப்பு போன்றவை சமரசம் செய்து கொள்ளாமல், கவனத்தை செலுத்த வேண்டும். தற்போது என்ன காரணத்தாலோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வைகுண்டராஜனின் ஆலையை நிரந்தரமாக மூடப்படும் வரை இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இந்த அற்புதமான ஆவணப்படத்தை தயாரிப்பதில் எத்தனை உழைப்பும், நிதியும் செலவிடப்பட்டிருக்கிறது என்பதை காண முடிகிறது.
இதை செய்த, LEMS குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=ZqG90jzu2QE&feature=youtu.be
இந்த ஆவணப்படத்தை அனைவரும் பாருங்கள். பகிருங்கள்.
குறிப்பாக ரஜினிகாந்த் என்ற பைத்தியக்காரன் இதை பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக