வெள்ளி, 22 ஜூன், 2018

ஸ்டாலின் : சேலம் சாலை ... அரசபயங்கரவாதம் மூலம் நிறைவேற்ற முயலவேண்டாம்!


மின்னம்பலம் : பசுமைவழிச் சாலை திட்டத்தை எப்படியும் நிறைவேற்றிய தீர வேண்டும் என்று முதல்வர் துடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், “சென்னை- சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி சாலை பசுமைவழிச் சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டத்தை எதிர்ப்பவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் விருப்பத்தோடு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அல்லது மாற்று வழியில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 22) விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை- சேலம் எட்டு வழி பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் மக்களைப்பற்றி அதிமுக அரசு சிறிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், காவல்துறையைத் துணைக்கு வைத்துக் கொண்டு நில அளவை செய்து விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றிச் செல்வது அங்குள்ள விவசாயிகளுக்கு ஆத்திரத்தையும் நமக்கெல்லாம் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
எட்டு வழிச் சாலை அமைப்பதால் எட்டு ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும்; ஐந்நூறு ஏக்கர் வனப்பகுதியை அழிக்க வேண்டியதிருக்கும்; எட்டு மலைகளை அழிக்க வேண்டியதிருக்கும் என்றெல்லாம் அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் எல்லாம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுப் போராடும் வேளையில், அவர்களின் கவலைகளையும் கருத்துகளையும் பொறுமையாகக் கேட்டறியாமல், “எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்” என்று மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த திட்டத்தால் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், நூறுக்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு புறந்தள்ளி விட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், “ திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களைக் கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்? அதிமுக அரசின் இந்த அப்பட்டமான அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிக முக்கியம் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனியாவது உணர முன்வரவேண்டும்.
சொந்த மாவட்ட மக்களின் போராட்டத்தைப் பார்த்தாவது, அவருக்கு இந்தத் திட்டத்தை எதிர்க்கும் மக்களின் வீரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ. பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில் சென்னை-சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அவர் , இது ஜனநாயக நாடு; ஆகவே மக்களின் ஒத்துழைப்பும் ஒப்புதலுமின்றி, சர்வாதிகார மனப்பான்மையுடனும் தன்முனைப்புடனும், எந்தத் திட்டத்தையும் அரச பயங்கரவாதத்தைக் கொலுவேற்றி வைத்துக்கொண்டு, நிறைவேற்றிட முடியாது என்பதை முதல்வர் புரிந்துகொண்டு, குறுகலான ஒருவழிப்பாதை அணுகுமுறையைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பசுமைவழிச் சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். அதுவரை விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான ஆய்வை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக சார்பில் நாளை (ஜூன் 23) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக