வெள்ளி, 1 ஜூன், 2018

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்! லிங்காவிலும் கபாலியிலும் விட்டதை காலாவில் பிடிக்க முயற்சி?

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!மின்னம்பலம: மினிதொடர்: காலாவுடன் ஒரு வியாபாரப் பயணம் - 1 இராமானுஜம்:
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்தவற்றில் அதிகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு அதிகம் வசூலான திரைப்படம் எந்திரன். அதை விடக் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி எந்திரன் படத்துக்கு இணையான வசூலைக் குறைந்த நாட்களில் எட்டிப் பிடித்த படம் விஜய் நடித்து வெளியான மெர்சல்.
மெர்சல் படத்தைவிடக் குறைவான தியேட்டர்களில் தமிழகத்தில் வெளியான மொழிமாற்றுத் திரைப்படம் பாகுபலி - 2. குறைவான டிக்கெட் கட்டணத்தில் அதிக நாட்கள் ஓடி அதிக பார்வையாளர்கள் பார்த்து மெர்சல், எந்திரன் படங்களுக்கு இணையான வசூலைப் பெற்றது பாகுபலி - 2. இந்தப் படங்களுடன் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா, கபாலி படங்களின் வசூலை ஒப்பிட்டால், நினைத்துப் பார்க்க முடியாத அளவு குறைவான வசூலை பெற்றுத் தோல்வியைத் தந்த படங்கள் அவை எனத் தெரியும்.

எந்த ஒரு நடிகர் நடித்த படமும் அவரது முந்தைய படத்தின் வருமானத்தின் அடிப்படை மற்றும் பட்ஜெட்டைக் கொண்டு விலை தீர்மானிக்கப்படும். காலா படத்திற்கு அப்படி ஒரு அளவுகோல் வைத்து படத்தின் விலை கூறப்படவில்லை. முந்தய படங்களின் வசூல் - பட்ஜெட் இவற்றைக் கணக்கில் கொண்டு, நேர்மையாக வியாபாரம் செய்யப்பட்டிருந்தால் எல்லோருக்கும் லாபகரமான படமாக காலா கல்லா கட்ட வாய்ப்புள்ளது.
2.0 படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் முடிய தாமதமாகலாம். அப்படம் ரிலீஸ் ஆன பின்னரே அடுத்த படம் என ரஜினி நினைத்திருக்க, அவ்வளவு நாட்கள் ரஜினியின் கால்ஷீட்டை வீணாக்க அவருக்கு நெருக்கமானவர்கள் விரும்பவில்லை. அதன் விளைவாக குறுகிய நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் காலா. சுமார் 50 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட காலாவை 150 கோடிக்கு விற்க முயற்சித்தது ரஜினி குடும்பம்
அதனால் தான் பாகுபலி, மெர்சல் படங்கள் வசூலித்த மொத்தத் தொகையை ஏரியா அடிப்படையில் கேட்டது லைகா நிறுவனம் என்கிறார்கள். அவர்கள் வாங்கியிருப்பது விநியோக உரிமை மட்டுமே. பட வியாபாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது ரஜினி குடும்பம். இந்தப் படத்தைச் சிறப்பாக வியாபாரம் செய்ய, வசூல் ரீதியாக வெற்றபெற வைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ரஜினிக்கு இருந்தது. அதனால் தன் ரசிகர்களின் நீண்ட வருட ஆசைக்குத் தற்காலிக உயிர் கொடுக்க விரும்பி அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டேன் எனக் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்து காலா கனல் மூட்டினார் ரஜினி.

ரசிகர்கள் ஆரவாரத்துடன் எதிர்பார்த்தார்கள். சினிமா விநியோகஸ்தர்கள் அசையவும் இல்லை, ஆர்வம் காட்டவும் இல்லை. காலா படத்தின் உரிமையை வாங்குவதற்கு ஏராளமான புதிய விநியோகஸ்தர்கள் படையெடுத்தனர். ஆனால் அவர்களுக்குப் படம் கொடுக்க விடாமல் தடுக்கும் பணியை சினிமா நாட்டாமைகள் மறைமுகமாக மேற்கொண்டனர்
இந்த தொடருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போது காலா விநியோக உரிமைகள் சினிமா நாட்டாமைகள் வசம் கொடுக்கப்படும் அல்லது அவர்களிடம் வந்து சேர்வதற்கான பணிகளை செய்து கொள்வார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். அது அப்படியே காலா பட விஷயத்தில் அரங்கேறியிருக்கிறது. தமிழகத்தின் மிகப் பெரிய விநியோகப் பகுதிகள் சினிமா நாட்டாமைகள் வசம் சென்றுவிட்டன.
12 கோடி ரூபாய் மினிமம் கேரண்டிக்கு காலா படத்தை கேட்டவருக்கு கொடுக்காமல் 12 கோடிக்கு டிஸ்ட்ரிப்யூஷன் கொடுத்திருக்கிறார்கள்,
7 கோடி ரூபாய் வரை விலைக்கு கேட்ட ஏரியா உரிமையை விலை தீர்மானிக்காமல் முடிந்த வரை மினிமம் கேரண்டி முறையில் படத்தை திரையிட ஏற்பாடு செய்து தருமாறு தென் மாவட்ட நாட்டாமையிடம் காலா விநியோக உரிமை வழங்கப்பட்டிருக்கிறது,
சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக்குத்து அனைத்து ஏரியாக்களும் மினிமம் கேரண்டி அடிப்படையில் வியாபாரம் ஆனது. சூப்பர் ஸ்டார் நடித்துள்ள காலா அவுட்ரேட் முறையில் விற்க்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
காலா படத்தின் விநியோகஸ்தர்கள் யார் ஏரியா அடிப்படையில், அவர்கள் கொடுத்த அட்வான்ஸ், கொடுத்த அட்வான்ஸ் வசூல் ஆகுமா? 17 கோடி விலை சொல்லபட்டு வந்த செங்கல்பட்டு ஏரியா உரிமையை அருள்பதி 12 கோடி அட்வான்ஸுக்குக் கைப்பற்றியது எப்படி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக