வெள்ளி, 22 ஜூன், 2018

எடப்பாடியும் பன்னீரும் சிறைக்கு செல்வார்கள் .. திமுக ஆட்சி அமைந்தது அதிமுக ஆட்சியின் ஊழல்கள்

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சிறைக்குச் செல்வர்!மின்னமபலம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அப்போது எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சிறைக்குச் செல்வர் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று (ஜூன் 21) நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஸ்டாலின், “நிர்வாகிகளுடன் நடந்த கள ஆய்வுக்குப் பிறகு ஓரிரு மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட உள்ளன. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... சிறுபான்மையினருக்கு உரிய மரியாதையை, அங்கீகாரத்தை திமுக தலைவர் கருணாநிதி வழங்கியுள்ளார். காதர் மொய்தீன் அவர்கள் மனைவியை நலம் விசாரிக்கச் சென்றிருந்தபோது, ‘அடுத்த முறை நீ இங்கு வரும்போது முதல்வராக வர வேண்டும்’ என்று அவர் கூறினார். அது அவருடைய உணர்வு மட்டுமல்ல; நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உணர்வாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

சிறுபான்மை சமூகத்துக்காக திமுக ஆற்றிய பணிகளைப் பட்டியலிட்ட ஸ்டாலின், “மத்தியில் மதவெறி பிடித்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தியைத் திணித்து தமிழைப் புறக்கணிக்க முயற்சி செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. நீட் பிரச்சினை வந்த பிறகு நடுத்தர ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ப்ளஸ் டூவில் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வினால் மருத்துவக் கனவு நிறைவேறாத காரணத்தால் நான்கு மாணவிகள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு விவகாரத்தில் நடந்த குளறுபடிகள் குறித்து பாஜக அரசுக்குக் கவலையில்லை. இதைத் தட்டிக்கேட்கும் தைரியம் தமிழக அரசுக்கு இல்லை” என்று விமர்சித்தார்.
“தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்கள் நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் காண்டிராக்ட்டில் கமிஷன், சாலை போடுவதில் கரெப்ஷன் என அனைத்துத் துறைகளிலும் மாமூல் சென்று கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்களுக்கு ஐந்து கோடி ரூபாய், பத்து கோடி ரூபாய் என்று மாதாமாதம் மாமூல் சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் கல்லூரிகள், ஹோட்டல், பங்களாக்கள் என வாங்கியுள்ளதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதற்குரிய விசாரணை நடக்கப் போகிறது. எடப்பாடி உள்பட அனைத்து அமைச்சர்களும் சிறையில்தான் இருக்கப் போகிறார்கள்” என்று கூறிய ஸ்டாலின், ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவினர்தான் அமைச்சர்கள் போல, ஆளுங்கட்சி போல செயல்பட்டு வருகிறார்கள். காரணம், திமுகவை மக்கள் நம்புகிறார்கள்; வரவேற்கிறார்கள்” என்றும் பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற ஸ்டாலினுக்கு, கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு உடல்நலக் குறைவினால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் காதர் மொய்தீன் மனைவி லத்தீபா பேகத்தைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக