திங்கள், 25 ஜூன், 2018

வி.பி.சிங் .. மண்டல் கமிஷன் .. காவிரி நடுவர் மன்றம் ... சமூகநீதி காவலர்

BBC : இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்த வி.பி.சிங் என்று
அறியப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்தநாள் இன்று. 1931ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர் வி.பி.சிங். 1974இல் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசில் இணை அமைச்சராக சேர்ந்த அவர், மத்திய வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றினார்.
1980 முதல் 1982 வரை உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக விளங்கிய வி.பி.சிங், அந்த காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த முடியாததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
போஃபர்ஸ் ஊழல் விவகாரம் :  பின்னர் 1984 முதல் 1987 வரை ராஜிவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங், பின்னர் 1987இல் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரானனர்.
வி.பி.சிங் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான், ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா ஆயுதம் வாங்குவதற்காக இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை மீது வி.பி.சிங்குக்கு விமர்சனம் இருந்தது. அதைத்தொடர்ந்து பிரதமர் ராஜீவ் காந்தி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வி.பி.சிங் ஜன் மோர்ச்சா எனும் கட்சியை 1987இல் நிறுவினார். போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கடுமையாகப் பிரசாரம் செய்தார் அவர்.

தேசிய முன்னணி

ஜன் மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தள், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து 1988இல் ஜனதா தளத்தை உருவாக்கினார் வி.பி.சிங். e>1989-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம், திமுக, தெலுங்கு தேசம் கட்சி, அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி 143 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இடதுசாரிகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் டிசம்பர் 2, 1989 அன்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். மண்டல் கமிஷன்< 'மண்டல் கமிஷன்' என்று பரவலாக அறியப்பட்ட, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையம் (Socially Backward Classes Commission) சரண் சிங் பிரமதராக இருந்தபோது 1979ல் அமைக்கப்பட்டது. 1968இல் 30 நாட்கள் மட்டுமே பிகார் மாநில முதலமைச்சராக இருந்த பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் அதன் தலைவராக இருந்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 51% வாழ்வதாகவும், அவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று 1980இல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்தது. எனினும், ஜனதா கட்சி ஆட்சியை இழந்தபின் பின்னர் வந்த, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுகள் அந்தப் பரிந்துரையை நிறைவேற்றவில்லை.
ஆகஸ்ட் 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அரசு கவிழ்ந்தது

பாஜக ஆதரவை விலகிக்கொண்டதால், வி.பி.சிங் தலைமையிலான அரசு நவம்பர் 1990இல் கவிழ்ந்தது. தமிழகமும் வி.பி.சிங்கும் < காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்துகொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது.
1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியில் அங்கம் வகித்த திமுக ஒரு மக்களவைத் தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. எனினும், திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறனுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினார் வி.பி.சிங்.
பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த வி.பி.சிங் நவம்பர் 27, 2008இல் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக