புதன், 20 ஜூன், 2018

ஸ்டெர்லைட் மின் இணைப்பு வழங்க வேண்டுமா? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் ..

tamilthehindu : ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா,
வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் அரசாணையின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மேலும், ஆலைக்கான மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உருக்குப் பிரிவு அருகேயுள்ள கந்தக அமிலம் சேமிப்பு டேங்கில் கசிவு இருப்பது போலீஸ் ரோந்துப் பணியின்போது கண்டறியப்பட்டது. கந்தக அமிலம் முழுவதையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஏதேனும் விபத்து ஏற்படாமல் தடுக்க, கந்தக அமிலம் கசிவைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க எங்களை அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெறாததால் இதுபோன்ற விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதை அறிந்து, ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள குறைந்த மனித சக்தி மற்றும் மின்சக்தியை வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், இந்த கோரிக்கை இப்போது வரை நிலுவையில் உள்ளது. விபத்துகளைத் தவிர்க்க ஆலையைக் குறைந்த அளவு பராமரிக்க எங்களை அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. அப்போது, ஆலைக்குள் கச்சா பொருட்கள், ரசாயனங்கள் இருப்பதாகவும், அதனால், ஏற்படும் பேரிழப்பைத் தடுக்க மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 25-ம் தேதி தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக