திங்கள், 18 ஜூன், 2018

தலித் பகுதியில் பள்ளி : படிக்க மாணவர்கள் மறுப்பு!

தலித் பகுதியில் பள்ளி : படிக்க மாணவர்கள்  மறுப்பு! மின்னம்பலம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே கோவிந்தவாடியில், தலித் மக்கள் வாழும் பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிக்குச் செல்ல தலித் அல்லாத மாணவர்கள் மறுத்துள்ளனர்.
கோவிந்தவாடியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டும் விவகாரத்தில், தலித் மக்களுக்கும், தலித் அல்லாதவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, தலித் அல்லாத மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக வகுப்புகளைப் புறக்கணித்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கோவிந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த அரசுப் பள்ளியானது தலித்துகள் குடியிருப்பை ஒட்டியிருக்கிறது. இந்த அரசுப் பள்ளியானது 1961ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 2016ஆம் ஆண்டு வீசிய வரதா புயல் காரணமாக இப்பள்ளியின் கட்டடங்கள் சேதம் அடைந்தன. இதன்பிறகு இப்பள்ளியை புதிய இடத்திற்கு மாற்றப் பெற்றோர் ஆசிரியர் கழகம் முடிவு செய்து, கிராம சபைக் கூட்டத்தின் மூலம் தீர்மானத்தை நிறைவேற்றியது. நபார்டு வங்கி நிதியின் வாயிலாகப் புதிய கட்டடம் கட்டுவதற்கு 3 கோடியே 77 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, புதிய கட்டடங்களைத் தங்கள் பகுதியில் கட்ட வேண்டும் என்று தலித் அல்லாத மக்கள் கோரியிருந்தனர். அதனால், தலித் பகுதியில் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை ஒரு வார காலமாக பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா தலைமையில் ஜூன் 15 மற்றும் 16 தேதிகளில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பள்ளிக் கட்டடத்தை இந்து அறநிலை துறைக்குச் செந்தமான இடத்தில் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் புதிய ஆலோசனையை வழங்கியது. மேலும், இரு தரப்பினரும் பொதுவான இடத்தை 30 நாட்களுக்குள் தேர்வு செய்து கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக