சனி, 23 ஜூன், 2018

ஆளுநர் இங்கே ! நிர்மலா எங்கே? என்ற கோஷத்தால் கோபம் ... திமுகவினர் சரமாரியாக கைது

ஆளுநரைக் கோபப்படுத்திய வார்த்தை!மின்னம்பலம்: பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் கூட ரிமாண்ட் செய்து சிறையில் அடைக்கப்படாத நிலையில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்குக் கறுப்புக் கொடி காட்டிய திமுகவினரை ஏன் ரிமாண்ட் செய்தீர்கள் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி, அதற்காக இன்று சென்னையில் ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் பணிகள் குறித்து ஆய்வு நடந்த வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக நாமக்கல் மாவட்ட திமுகவினர் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 192 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூலை 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தமயந்தி உத்தரவிட்டதையடுத்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இதுவரைக்கும் பல மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுகள் செய்துள்ளார். அங்கெல்லாம் திமுக எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தியுள்ளது. இதுவரை எங்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டதாக தகவல் இல்லை. தஞ்சாவூரில் ஆளுநர் வருகையின்போது திமுகவினர் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைது செய்யலாமா என்று மாவட்ட போலீஸ் தரப்பில் ஆளுநர் மாளிகையிடம் கேட்டபோது, ‘வேண்டாம், வேண்டாம் அவர்கள் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்தட்டும். கறுப்புக் கொடியோடு வந்து என்னிடம் மனு அளித்தாலும் வாங்கிக் கொள்கிறேன். அழைத்து வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். பல மாவட்டங்களிலும் கறுப்புக் கொடி காட்டுதல், கலைதல் என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது.
ஆனால் நேற்று நாமக்கல்லில் மட்டும் ஏன் இப்படி ஆனது என்று நாமக்கல் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம்.
ஆளுநரை அதிரவைத்த கோஷம்!
“நேற்று காலையே நாமக்கல் கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் இருந்து ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டனர். நாமக்கல் அண்ணா சிலை அருகே கறுப்புக் கொடி காட்ட இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் அந்த இடத்தைக் கடக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையான முழக்கமிட்டனர். திரும்பிப் போ திரும்பிப் போ பன்வாரிலால் திரும்பிப் போ என்பன போன்ற முழக்கங்களைத் தாண்டி, ‘ஆளுநர் இங்கே நிர்மலா எங்கே?’ என்ற கோஷமும் திமுகவினரால் ஓங்கி ஒலிக்கப்பட்டது.
மேலும் ஆளுநர் கான்வாய்க்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே அதாவது ஆளுநர் காரின் பக்கவாட்டில் ஒரு கார் போனது. அந்தக் காரின் பேனட் மீது கல்லும், கறுப்புக் கொடியும் வந்து விழுந்தது. இந்த சம்பவங்களோடு நிர்மலா என்ற வார்த்தையும் ஆளுநரின் காதில் விழுந்திருக்கிறது. பிறகு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆளுநர் பேசி திமுகவினரின் கோஷங்கள் பற்றியும் கேட்டறிந்தார். அதன் பின் கடுமையான ஆங்கிலத்தில் சில வார்த்தைகளைப் பேசினாராம் ஆளுநர்.

இதெல்லாம் நடந்து முடியும்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்து பாதி பேர் கலைந்துவிட்டனர். 12 மணிக்கு மேல் வந்து மிச்சமிருக்கும் 200 முதல் 300 பேர் மீது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாகவும் மேலும் நான்கு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு பக்கத்திலுள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு ஆகியும் விடுவிக்கப்படாத நிலையில்தான் ரிமாண்ட் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பின் பெண்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
மீதிருந்தவர்களை விடியற்காலை மூன்று மணி வரை திருமண மண்டபத்தில் வைத்திருந்த போலீசார் பிறகு வயதானவர் மற்றும் பெண்களை விட்டு விட்டு நாமக்கல் கிழக்கு மா.பொறுப்பாளர் காந்தி செல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 197 - பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீதுஆளுனரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், கலகத்தை ஏற்படுத்த முயன்றது என நான்கு பிரிவில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 14-நாள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
எங்களையும் கைது செய்யுங்கள்!
இந்தத் தகவல் கிடைத்த பின்புதான் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று காலை உடனடியாக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் பேசிய ஸ்டாலின்,
“இதற்கு முன்பு ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டியபோதெல்லாம் திமுகவினர் கைது செய்யப்படவில்லை. ஆனால் திடீரென்று நேற்று கைது செய்துள்ளனர் என்றால் ஏதோ சதித் திட்டம் தீட்டுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஆளுநர் நிகழ்ச்சிகளுக்கோ விழாக்களுக்கோ சென்றால் அதனை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அவர் ஆட்சியாளர்கள் அமைச்சர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்வது கண்டிக்கத்தக்கது. மேலும் தூய்மையாக இருக்கும் இடத்தில் குப்பையைக் கொட்டிவிட்டு, அதனை சுத்தம் செய்யும் வேலையைத்தான் ஆளுநர் பார்க்கிறார். இதனை எதிர்க்கும் வகையில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்துள்ளனர். திமுகவினரை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்டுகிற வகையில் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுதான் இந்த திடீர் போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
இப்போது எங்களை கைது செய்துள்ளனர். கைது செய்து எங்களை மண்டபத்தில் அடைத்து மாலையில் விட்டுவிடாதீர்கள். இந்த ஆட்சிக்கு தெம்பிருந்தால் சேலத்தில் எங்கள் தோழர்களை சிறையில் அடைத்ததுபோல எங்களையும் சிறையில் அடையுங்கள்" என்று பேசினார்.
எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நிர்மலாதான் என்று போலீஸ்காரர்களே பேசிக் கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக