புதன், 20 ஜூன், 2018

வேல்முருகன் கைது மோடியின் ஆலோசனை...?

பிரதமர் உத்தரவின் பேரில் கைது: வேல்முருகன்மின்னம்பலம்: பிரதமர் மோடி உத்தரவின் பேரில்தான் தமிழக அரசு தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்ததாக, புழல் சிறையிலிருந்து வெளிவந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களைச் சந்திக்க சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உடல்நலம் பாதித்து ஸ்டான்லி மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்ற வேல்முருகனை, நெய்வேலி முற்றுகை தொடர்பாக தேசத் துரோக வழக்கில் நெய்வேலி காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இரு வழக்குகளிலும் கடலூர், உளுந்தூர்பேட்டை நீதிமன்றங்களில் வேல்முருகனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று மாலை புழல் சிறையிலிருந்து வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வரவேற்றனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எங்களுடைய போராட்டங்கள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மத்திய மாநில அரசுகள் என்னைப் பழிவாங்க காத்திருந்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னைக்குப் பிரதமர் மோடி வந்தபோது, 'கோ பேக் மோடி' என்னும் முழக்கத்தை முன்வைத்தோம். இது உலக அளவில் ட்விட்டரில் முதலிடத்தைப் பிடித்தது.
இதனால் ஆத்திரம் கொண்ட பிரதமர், ஆளுநர் மாளிகையில் சூப்பர் முதல்வருடன் ஆலோசனை நடத்தும்போது யார் அந்த வேல்முருகன் என்று விசாரித்துள்ளார். இதுபோன்ற சக்திகளைத் தமிழகத்தில் வளரவிடாதீர்கள், பிடித்து உள்ளே போடுங்கள் என்று பிரதமர் உத்தரவிட்டதாகவும் எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசுக்கு அடிபணித்து கிடக்கிற தமிழக அரசு என் மீது அடுக்கடுக்காக வழக்குகளைப் பாய்ச்சி, சிறையில் அடைத்தனர். எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் என் மண்ணுக்கான, மக்களுக்கான போராட்டங்கள் தொடரும்" என்று தெரிவித்தார்.
"நான் சிறையிலிருக்கும்போதே திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்தைச் சேதப்படுத்தியதாகக் கூறி என் மீது பல பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைச் சட்டப்படியாக எதிர்கொள்வேன்" என்று கூறிய வேல்முருகன், "என்னைக் கைது செய்ததற்குக் கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்களுக்கும், மருத்துவமனையிலும் சிறையிலும் நேரில் சந்தித்த தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைக் கைது செய்ததற்குக் கண்டனம் தெரிவித்துத் தீக்குளித்து உயிரிழந்த எங்கள் கட்சியைச் சேர்ந்த இரண்டு தொண்டர்களின் குடும்பங்களுக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும்" என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக