சனி, 30 ஜூன், 2018

காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கிய அதானி

காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கிய அதானி
மின்னம்பலம்: சென்னைக்கு அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து ஜூன் 28ஆம் தேதி அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 விழுக்காடு பங்குகளை வாங்க லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தமிட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.1,950 கோடியாகும். இதில் ரூ.1,562 கோடியை அதானி போர்ட்ஸ் செலுத்துகிறது.
இந்தத் துறைமுகம் வட சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கர்ணன் அதானி, ஸ்க்ரால் ஊடகத்திடம் கூறுகையில், "இந்தத் துறைமுகத்தில் கட்டுமானப் பணிகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 40 மில்லியன் டன் சரக்குகளைக் கூடுதலாக கையாளும் வகையில் துறைமுகத்தை விரிவுபடுத்தவுள்ளோம்" என்றார்.

பல்வேறு விதமான பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதியைக் கையாளும் துறைமுகமாகக் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கண்டெய்னர்கள், ஆட்டோமொபைல், பொதுவான சரக்குகள் மற்றும் திரவ சரக்குகள் இந்தத் துறைமுகத்தின் வாயிலாகக் கையாளப்படவுள்ளன. இந்தத் துறைமுகத்தில் கப்பல் நிறுத்த இரண்டு தளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 710 மீட்டர் நீளம் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக