செவ்வாய், 5 ஜூன், 2018

சமச்சீர் கல்வியின் எதிரிகள் தமிழ்நாட்டின் எதிரிகளே

Vignesh Anand : * சமச்சீர் கல்வி என்றால் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம். இது CBSE மற்றும் இண்டெர்நேசனல் சிலபஸ் etc… இவைகளுக்கு இது பொருந்தாது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் : சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் தரம் இல்லை என்று கொலைகளை நியாயப்படுத்தும் பாசிச மன நோயாளிகளுக்கு .. சமச்சீர் பாட திட்டத்தில் அறிவியல் பாடத்தை யார் தொகுத்தவர்கள் , என்னவெல்லாம் உள்ளது என்பதை கீழே காண்போம்.
—————————————
அறிவியல் பாடம்:
————————
ஐந்தாம் வகுப்பு:
ஆசிரியர் குழு: லயோலா கல்லூரி பேராசிரியர், சென்னை புனித பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர், மதுரை எஸ் பி ஓ ஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.
• பசுமை உலகம் பற்றிய பாடம், உரையாடல் வடிவில் உள்ளது. விதை பரவுதலின் வகைகள் வண்ணப்படங்களால் மனதில் பதியும்வண்ணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
• நாம் இன்று உண்ணும் சில காய்கறிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. (தர்பூசணி, வெண்டை- ஆப்ரிக்கா, தக்காளி,கொய்யா – தென் அமெரிக்கா)

• விலங்குகளின் வாழ்விடமான காடு சுருங்குவதே விலங்குகள் ஊருக்குள் வரக்காரணம் என்பதை ஆழ நெஞ்சில் பதியவைத்துள்ளனர்.
• எளிதில் அனைவரும் செய்து பார்க்கும் சோதனை: பாட்டில் ஒன்றில் முட்டையுடன் கூடிய எருக்கிலையைப் போட்டு அது புழு,கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி என வளர்ச்சியடவதைப் பார்க்கச் செய்தல்.
• விண்வெளிப்பயணம் கட்டுரையில் அண்மையில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயனும் இடம்பெற்றுள்ளது.
• நீர் எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது பொது உடமையானது என ஒரு பாடம் வலியுறுத்துகிறது.
——————————————————————-
ஏழாம் வகுப்பு:
ஆசிரியர் குழு: பெரியார் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர், எத்திராஜ் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், சென்னை புனித ஜான் மெட்ரிக் பள்ளி ஆசிரியர், மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.
• முன்பு +1 இல் இடம்பெற்றிருந்த வகைப்பாட்டியல், சுற்றுச்சூழலியல் இப்போது 7ஆம் வகுப்பில்.
• விலங்குகளால் மனித சமூகத்துக்குக் கிட்டும் பயன்களோடு விலங்கியல் பாடம் ஆரம்பமாகிறது.
• லெக்ஹான் முட்டைக்கும் நாட்டுக்கோழிக்கும் உள்ள வேறுபாடு, நல்லமுட்டையை அழுகிய முட்டையில் இருந்து வேறுபடுத்தும் எளிய முறை ஆகியவை படிப்பை சுவாரசியமாக்குகின்றன.
• நீரின் வணிகமயமாக்கம், ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றால் நீர்வளம் சிதைக்கப்படுதல் விளக்கப்படுகிறது. கடல்நீர் எவ்வாறு குடிநீராக்கப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது.
• ஒவ்வொரு பாட முடிவிலும், கூடுதலாக வாசித்துத் தெரிந்துகொள்ள உசாத்துணை நூல்கள், பதிப்பக விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. இணையதள முகவரிகளும் தரப்பட்டுள்ளன.
• அணுக்கள்->மூலக்கூறுகள்->செல்கள்->திசுக்கள்->நுண்ணுறுப்புகள்->உறுப்புமண்டல்லங்கள்->உயிரினம் என்று விளக்கும் காட்சிப்பட விளக்கம், செல்களைப்பற்றிய புரிதலை எளிதாக்குகிறது.
• மனிதன் ஓடும்போது அவனுடைய எலும்புகள் எந்த நிலையில் இருக்கும் எனும் படமும் அறிவியலோடு அன்றாட நிகழ்வை இணைத்து சிந்திக்க வைக்க உதவும்.
——————————————————————
எட்டாம் வகுப்பு:
ஆசிரியர் குழு:
அண்ணா பல்கலை இயற்பியல் பேராசிரியர், கோவை எஸ் ஆர் எம் வி கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி, சென்னை டொன் போஸ்கோ, புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்
• நெல்சாகுபடி ஆரம்பம் முதல் அறுவடை வரை விளக்கப்பட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தப்படுவதும் உணவு பதப்படுத்தும் முறைகளும் விளக்கப்படுகின்றன.
• கூடுதல் வாசிப்புக்குத் தரப்பட்டுள்ள ஒரு இணையதளம்: எம் எஸ் சுவாமிநாதன்.காம்
• நாளமில்லாச்சுரப்பி, ஆண் பெண்கள் வளரிளம்பருவம் அடைதல், பால் நிர்ணய குரோமோசோம்கள், ஹார்மோன் குறைபாட்டால் வரும் முன்கழுத்துக் கழலை, குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவதிலிருந்து எவ்வாறு தற்காத்தல், புகைத்தல், குடி போன்றவை உருவாக்கும் சீர்கேடுகள், நச்சுக்காளான்களை இனம் காணும் முறை – நன்கு எழுதப்பட்டுள்ளன.
• சைகஸ், பைனஸ் ஆகிய மரங்களை 20 ஆண்டுகளுக்கு முன் +2 பாடத்தில் பார்த்தபோது கறுப்புவெள்ளைப் படத்தில் அது என்ன மரங்களென்றே தெரிந்துகொள்ள இயலவில்லை. இப்போது தெளிவான வண்ணப்படங்களால் 8ஆம்வகுப்பிலேயே அவற்றைப் பார்க்கமுடிகிறது.
• எலுமிச்சை கேன்கர், வெள்ளரி பலவண்ணநோய் – வைரஸ்களால் உருவாகின்றன என அப்போது படித்தபோது அது என்ன நோய் என ஆசிரியரால் விளக்க முடிந்ததில்லை. இந்நூலில் அந்நோய் பாதித்த எலுமிச்சை, வெள்ளரிக்காய்கள் படங்களோடு தரப்பட்டுள்ளன.
• வலசை போகும் ஆமை, உயிப் பன்மத்திற்கு அச்சுறுத்தல்கள், நமது பாரம்பரிய அறிவு இப்பன்மத்தைப் பாதுகாத்த தன்மை, காற்று நிலம் நீர் மாசுபடுதல் பற்றிய பாடங்களும் செறிவாக உள்ளன.
• கழிவுநீர் சுத்திகரிப்பு எவ்வாறு நடைபெறுகிறது என்பது 8ஆம் வகுப்பில் விளக்கப்படுகிறது. இதனை எஞ்சினியரிங் கெமிஸ்ட்ரியில் கல்லூரியில்தான் முன்பு படித்தார்கள்.
• உயிரி பிளாஸ்டிக் தயாரிக்கும் முறை இடம்பெற்றுள்ளது. இது உணவில் இருந்து பிளாஸ்டிக் போன்ற பொருள் தயாரிக்கும் முறை. இது உணவுப்பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லும் என்ற விழிப்புணர்வு இங்கே இடம் பெறவில்லை.
———————————————————————
ஒன்பதாம் வகுப்பு:
ஆசிரியர் குழு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்றியல் துறையின் தலைவர், கோவை ராமகிருஷ்ணாமிஷன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர், சென்னை புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை புனித மேரி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்.
• நகர்மயமாதலைப் படத்துடன் (ஒப்பீடு 1990 & 2010 ஒரே நிலப்பரப்பு எவ்வாறு மாறியுள்ளது எனப் புலப்படுத்தும் படம்) புரியவைத்து, இந்நகர்மயமாதல் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஆனதென்றும், இதனால் விளைச்சல் நிலம் குறைந்ததென்றும், மக்கள் மீதே பழிபோடும் விளக்கம் இடம்பெற்றுள்ளது .
• பயிர் மேம்பாட்டுப்பாடம், இயற்கை உரங்களின் அவசியத்தையும் பேசுகிறது. பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப் பரிந்துரைக்கும் இப்பாடம் உதாரணமாக டி.டி.ட்டி ஐ பரிந்துரைக்கிறது (இது பல ஆண்டுகளுக்கு முன்பே பல நாடுகளில் தடை செய்யப்பட்ட நஞ்சாகும்)
• முன்னரெல்லாம், பயிர்களுக்கு வரும் நோய் பற்றிய குறிப்புகள் வெறுமனே எழுத்தில்தான் இருக்கும். இப்பாடநூலில் நிலக்கடலைக்கு வரும் இலைப்புள்ளி நோயை விளக்க வண்ணப்படம் இடம்பெற்றுள்ளது.
• பயிர்ப்பாதுகாப்புப் பாடத்துக்கான உசாத்துணையில் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் இணையதள முகவரி இடம்பெற்றுள்ளது.
• புகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு அடிமையாவதற்கான காரணிகள், அவை உருவாக்கும் நோய்கள் ஆழமாக விளக்கப்பட்டுள்ளன.
• அதேபோல உடல்பருமன், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுபட வழிமுறைகளும் சொல்லித்தரப்பட்டுள்ளன.
• எலும்புமண்டலம், நரம்புமண்டலம் போன்றவற்றில் கண்டுபிடிப்பாளர்களின் படங்களுடன் அவர்கள் செய்த ஆய்வு, ஆய்வு முடிவுகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. இதே போல அனைத்துத் துறைகளிலும் பின்பற்றப்பட்டுள்ளன. (உதாரணம் பெஞ்சமின் ப்ராங்ளின் சாவிக்கொத்தை பட்டத்தின் நூலில் கட்டி இடிதாங்கியைக் கண்டுபிடித்தது படத்துடன் உள்ளது)
• மாசுபடுதலும் ஓசோன் படல ஓட்டையும் எவ்வாறு நிகழ்கின்றது எனும் பாடம் உள்ளது. இதில் சென்ற ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் நடந்த எண்ணெய்க் கசிவு உட்பட பல ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
• வேதியியல் சமன்பாடுகளைப் புரிந்துகொள்ள விளக்கப்படத்துடன் கூடிய சமன்பாடு உதவுகிறது. கந்தக ட்ரை ஆக்சைடு எவ்வாறு கந்தக டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜன் ஏற்றமுறுகிறது என்பதை யாவரும் எளிதில் புரியும்படி சமன்பாடு புதுவகையில் தரப்பட்டுள்ளது.
• தனிமவரிசை அட்டவணை உருவாக்கிய மென்டலீபின் புகைப்படத்தை முதன்முறையாக இப்புத்தகத்தில்தான் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
• நேனோ தொழில்நுட்பம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
• வேதிப்பிணைப்புகள் முன்பெல்லாம் +1இல் சொல்லித்தரப்பட்டது., இப்போதோ அது 9ஆம் வகுப்பில்.
• கெல்வின், ஜேம்ஸ் வாட், டாப்ளர் போன்றோரின் வரலாறும் அறிவியலில் இவர்கள் செய்த பங்களிப்பும் இதற்காக ஊலகில் இவர்கள் பெயர் நிரந்தரமாக்கப்பட்டமை எல்லாம் சொல்லப்பட்டுள்ளது (திறனின் அலகு வாட், வெப்பநிலையின் அலகு கெல்வின்)
• ஒன்பதாம் வகுப்பில் இருந்து செய்முறைப்பயிற்சி (Practical exam) இடம்பெறுகிறது.
———————————————————————-
பத்தாம் வகுப்பு:
———————
ஆசிரியர் குழு: சென்னை ஐ ஐ டியின் இயற்பியல் பேராசிரியர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர், சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, சென்னை செயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர்கள்
• · மரபியல் 10ஆம் வகுப்பில் ஆரம்பமாகிறது.
• · கிரிகர் ஜோஹன் மென்டல், டார்வின், ஜென்னர் எனப்பலரின் ஆய்வுகளோடு விவாதிக்கும் இப்பாடம் இரட்டைக்குழந்தைகள், குளோனிங் ஆட்டுக்குட்டி, ஸ்டெம் செல் சிகிச்சை வரை விளக்குகிறது.
• · நோய்த்தடுப்பு முறை எனும் பாடம் சமகால நோய்களையும் பேசுகிறது. (இன்புளுயென்சா, ஊட்டக்குறைவு நோய்கள், ஹெச்1என்1 )
•· செடி,மரங்களின் தாவரப்பெயர் அட்டவணை, அத்தாவரப்பெயரின் வட்டாரவழக்கிற்கும் ஒரு இடம் கொடுத்துள்ளது. உதாரணமாக ‘ஆர்டோகார்பஸ் இன்டக்ரிபோலியா’ என்பது பலாவைக் குறிக்கும். பலாவை சில வட்டாரங்களில் சக்கை என்றே அழைப்பது வழக்கம்.
•· விலங்குகளின் நடத்தை பற்றிய அண்மைக்கால ஆய்வுகளிலிருந்து செந்நாய்களின் கூட்டு வேட்டைப்பழக்கம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. (இவற்றைப்பற்றி சிறுபத்திரிக்கைகளில் தியோடர் பாஸ்கரன் ஏற்கெனவே எழுதி இருந்தார்)
•· ரயில் பயணங்களின்போது தேநீரை தூக்கி எறியும் குவளைகளில் வழங்குகின்றனர். முன்பு மண்குவளையில் வழங்கிப் பார்த்தனர். இதனால் வளமான மண் வீணானது..இப்போது லட்சக்கணக்கில் தூக்கி எறிகிறோம்..இது நல்ல முறையா? சிந்தித்துப் பார் என்கிறது ஒரு பெட்டிச் செய்தி.
• · கழிவுநீர் மேலாண்மை எனும் பாடம் இடம்பெற்றுள்ளது.
• · சந்திராயன் திட்டம் பற்றிய பாடம் மயில்சாமியின் பங்களிப்போடு விளக்கப்பட்டிருக்கிறது.
——————————————————————
* சமச்சீர் கல்வி திட்டத்தால் மெட்ரிக்குலேசன் மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் இஸ்டம் போல் புத்தகங்களுக்கு கட்டணம் வசூலிக்கமுடியாது.
* திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமில்லை என்று சாக்கிட்டு அதை இரத்து செய்து அமைச்சரவை மூலம் உத்தரவிட்டு சமச்சீர் கல்வியை ரத்து செய்து சட்டமாக்கியவர் ஜெயலலிதா.
* தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை இரத்து செய்த பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றத்தை அனுகியது
* ஜூன் 7 ஆம் தேதி சமச்சீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்தனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தில் தரமில்லை என்போர் எந்த வகுப்பில் எந்த தலைப்பில் பிழை உள்ளது என்று சுட்டிக்காட்ட வேண்டும். சமச்சீர் கல்வி என்பதும் சமூக நீதியின் கோட்பாடு தான். எல்லாருக்குமான கல்வியே சமச்சீர் கல்வி .. சமச்சீர் கல்வி தரமற்றது என்று மூடநம்பிக்கை போல பரப்பப்படும் கருத்துக்களை புறக்கணிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக