செவ்வாய், 5 ஜூன், 2018

சத்தியராஜ் : ஆன்மீக அரசியல் என்ற பிசினஸ்!

மின்னம்பலம் : ஆன்மீக அரசியல் என்பது பிசினஸ்
என்று கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.
கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. இதில் நடிகர்கள் சத்யராஜ், மயில்சாமி, ராஜேஷ் மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உட்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய சத்யராஜ், ரஜினியின் ஆன்மீக அரசியல் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் குறித்த அவரது கருத்து ஆகியவற்றை விமர்சித்துப் பேசினார்.
“அரசியல் என்பது சமூக சேவை. பதினான்கு வயதில் கலைஞர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்று களத்தில் இறங்கிப் போராட வந்தார். அந்தப் பதினான்கு வயது சிறுவனுக்கு நாம் எதிர்காலத்தில் முதலமைச்சராக வருவோம் என்ற எண்ணம் ஒரு துளியாவது இருந்திருக்குமா? அதுதான் சமூக சேவை.
அதுதான் அரசியல். திட்டம் போட்டு கணக்குப் போட்டு வருவதற்குப் பெயர் அரசியல் அல்ல; அது பிசினஸ். ஆன்மீக அரசியல் என்பது அந்த பிசினஸிற்கு வைத்த பெயர். எனக்குத் தெரிந்த வரையில் இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மீக அரசியல்; அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதுதான் ஆன்மீக அரசியல். நான் பெரியாரைப் படித்ததால் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு மலைக்குப் போய்த்தான் நிம்மதி வர வேண்டும் என்றில்லை” என்று தனது உரையில் குறிப்பிட்டார் சத்யராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக