வெள்ளி, 8 ஜூன், 2018

நீட் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே தமிழ்நாடு மீது போர் தொடுத்துள்ளார்கள்

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?மின்னம்பலம் : நீட் விஷயத்தில் இவ்வளவு வெளிப்படையான புறக்கணிப்பு அரசியல் நடக்கும் என்று நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அரசியலுக்கும் மாணவர்களின் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அரசியலுக்காக மாணவர்கள் பலிகடா ஆக்கப்பட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். அரசியல் என்று வந்துவிட்டால் பச்சிளம் குழந்தைகூட விதிவிலக்கல்ல என்று உணர்த்தியிருக்கிறது நீட் தேர்வு முடிவுகள்.
நீட் தேர்வு முடிவுகளில் நிகழும் மரணங்கள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்தைத் தாண்டி டெல்லி, ஹைதராபாத் என்று எல்லா மாநிலங்களிலும் நீட் தோல்வியினால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் வலம்வந்து கொண்டேதான் இருக்கின்றன.
மற்ற மாநிலங்களில் நடக்கும் தற்கொலைகளுக்கும், தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்காகத் தயாரான மாணவர்களுக்கு இருந்த வசதி, நிச்சயமாகத் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. ‘சமம்’ எனும் பெயரால் நடத்தப்பட்ட நீட் எனும் தேர்வின் சமநிலை தவறியதே தமிழகத்தின் தொடர் மரணங்களுக்குக் காரணம்.

10ஆம் வகுப்பு படித்தும், ஆங்கிலத்தில் தங்கள் பெயரைக்கூட எழுதத் தெரியாத தற்குறிகள் நிறைந்த மாநிலம் குஜராத் என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்தி. அங்கே நடத்தப்படும் தேர்வுகளில் ‘ஈ அடித்தான் காப்பி’ என்பார்களே, அதைவிட மோசமாக காப்பியடித்த மாணவர்கள் மாட்டியதெல்லாம் நாடே அறிந்து வெறுத்த வரலாறு.
அப்படிப்பட்ட மாநிலம் நீட் தேர்வில் முன்னணி வகிப்பது, இந்தியாவிலேயே தமிழக மாணவர்களுக்கு மட்டும் மற்ற வடமாவட்டங்களில் தேர்வு மையம் அமைத்தது, தேர்வு முடிவுகளை ஒரு நாள் முன்பே அறிவித்தது என இன்னும் பல தொடர் நிகழ்வுகள் ‘நீட்’ எனும் பெயரில் வெளிப்படையாக நடந்த அரசியலைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன.
தேர்வு முடிகள் வெளிவரும் முன்பே நீட் மரணங்கள் தொடங்கிவிட்டன. கஸ்தூரி மகாலிங்கத்தின் தகப்பனார் கிருஷ்ணசாமியின் மரணமும், ஐஸ்வர்யாவின் தகப்பனார் கண்ணனின் மரணமும் நம்மை வந்தடைந்த செய்தி. இந்த இரு மாணவர்களும் முறையே 84 மதிப்பெண்களும், 92 மதிப்பெண்களும் பெற்று தோல்வியடைந்துள்ளனர். தந்தையையும் இழந்து வருங்காலத்தையும் இழந்து தவிக்கிறார்கள்.
- நரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக