புதன், 20 ஜூன், 2018

அம்மாவின் கொள்ளை பணத்தை பறிமுதல் செய்யவேண்டும்.. திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலம்


சிவசங்கர் எஸ்.எஸ் : "திண்டுக்கல் ஆர்.சீனிவாசன் என்னும் நான், சட்டப்படி அமைப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், உண்மையாகவும் உளச்சான்றின்படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன்
என்றும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்", என்று உறுதிமொழி எடுத்து அமைச்சர் ஆனவர்.
ஆனால் அவர் பொது நிகழ்வுகளில் பேசுகிற பேச்சுகள் நேர்மையானதாகவோ, உண்மையானதாகவோ இல்லை என்பது தான் உண்மை.
அவர் பேசுவதை ஓர் 'காமெடியன் பேச்சு' போல் கடந்து செல்கின்ற நிலையில் தான் சமூகம் உள்ளது. காரணம் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவின் விஞ்ஞான அறிவிப்புகளும், ஜெயக்குமாரின் தினப்படி தொலைக்காட்சி சுவிசேஷங்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 'ஜெயலலிதா' நினைப்பு உரைகளும் மக்களை எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாத நிலைக்கு தள்ளி சென்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் மற்ற விஷயங்களில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். திண்டுக்கல் சீனிவாசனின் இரண்டுப் பேச்சுகளை அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது, முடியாது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த அவரது பேச்சு காமெடியாகத் தான் கடக்கப்பட்டது. "அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு சொன்னோம். ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. அது எங்களுக்கு தெரியாது. நாங்க பொய் சொன்னோம். எங்களை மன்னிச்சிடுங்க", என்று தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிட்டுக் கொண்டே பேசினார் சீனி ஒரு பொதுக் கூட்டத்தில். இது தொலைக்காட்சிகளில் அல்லோகல்லோப்பட்டது.
மு.மு ஜெயலலிதா மரணம் குறித்து ஓர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தினம் ஓர் கோட் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அதன் தலைவர். இந்தப் பேச்சுக்கு மறுநாளே, சீனியை கமிஷன் அழைத்து விசாரித்திருக்க வேண்டும்.
அல்லது, தான் எடுத்துக் கொண்ட பதவியேற்பு உறுதிமொழியின் படி, தான் அறிந்த செய்திகளை கமிஷன் முன் தானாக ஆஜராகி தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால், இது எதுவுமே நடக்காது. காரணம், அமைச்சர் சீனிவாசனுக்கு தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி மீது பெரிய மதிப்போ, நம்பிக்கையோ இருக்க வாய்ப்பில்லை. அவர் மதிப்பும், நம்பிக்கையும் அதைத் தாண்டி பயமும் கொண்டிருந்த ஜெயலலிதாக்கே நம்பிக்கை குறைவாக நடந்துக் கொண்டிருக்கும் போது, சட்டமாவது, இறையாண்மையாவது....
சீனிவாசனின் கூத்தின் உச்சக்கட்டம் தான், ஜெயலலிதா குறித்த அவரது தற்போதைய பேச்சு. " அம்மாவால் (ஜெயலலிதா) கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு" என்று 18 எம்.எல்.ஏக்கள் குறித்து பேசுகிறார். எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இப்போதும் இது குறித்து விளக்க, அமைச்சர் என்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசன் கடமைப்பட்டவர். ஆனால், நாளையே இது வாய் தவறி பேசியது என சொல்வார் அல்லது பதிலே சொல்லாமல் அமைதி காத்தும் விடுவார்.
எதற்கெடுத்தாலும் தானாக முன்வந்து கமெண்ட் அடிக்கிற நீதிதேவதைகள், இந்த விஷயத்தில் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். சீனிவாசனை கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். அவர் சொல்வதில் உண்மை இருந்தால் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தால், அந்தப் பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது சீனிவாசன் சொல்வது பொய் என்றால் சீனிவாசனை கண்டிக்க வேண்டும்.
சீனிவாசன் போன்றோரது நடவடிக்கைகள், ஆட்சி மீதும், அரசியல் மீதும் இளையோருக்கு மிகப் பெரும் அவநம்பிக்கையை கொடுக்கிறது. அது தடுக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்பு மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
# உண்மையான நம்பிக்கையும் மாறாதப் பற்றும் ஏற்பட...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக