திங்கள், 4 ஜூன், 2018

சவுக்கு : நாந்தாம்பா ரஜினிகாந்த் – ரஜினியின் அந்தர் பல்டிகள்


தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் செம்பு  உருக்கு ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கடந்த வெ்ளிக்கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதிலிருந்து,  அரசியல்வாதியாக அவதானித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட தனது கருத்துக்களிலிருந்து பல பல்டிகளை ( “யு டர்ன்“களை) அடித்துள்ளார்.
மே 22 அன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது போலீஸாரை குற்றஞ்சாட்டி ஒரு குறுகிய வீடியோ வெளியிட்டார். ஆனால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் காயமடைந்த எதிர்ப்பாளர்களை சந்தித்த பின்னர் -அங்கே சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த ஒருவர் சூப்பர் ஸ்டாரைப் பாரத்து, ”நீங்கள் யார்?,” எனக் கேட்ட அவமானத்தை சந்தித்தபிறகு –  ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட வேறொரு பாத்திரத்தில் நடித்தார்.
அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது, தீய சக்திகளும் சமூக விரோதிகளும் போராட்டத்தை கையிலெடுத்தள்ளதாக கூறினார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போலீஸாரை தாக்கிய பின்னர்தான் வன்முறை வெடித்தது எனக்கூறிய ரஜினிகாந்த், ”போலீஸ் மீதான தாக்குதல்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்,” என அறிவித்தார்.
பின்னர், 2016-ல் மரணமடைவதற்கு முன்னர் அவரது ஆட்சியில் இந்த சமூக விரோத சக்திகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்ந்தார். ”இந்த விஷயத்தில் அதிமுக அரசாங்கம் ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும். இந்த சமூக விரோதிகளை கட்டுப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்
1996-ல் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அதே ரஜினிகாந்த்-தான் இவர். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்ற அவரது அறிவிப்பு மிகவும்  பிரபலம் ஆனது.
ரஜினிகாந்தின் சமீபத்திய ”யு டர்ன்” (பல்டி) சமூக ஊடகங்களில் மக்களிடமிருந்து ஒரு கடுமையான தாக்குதலை வரவழைத்தது. அவரை யார் எனக்கேட்ட  அந்த காயமுற்ற இளைஞருக்கு, # நான்தான்பா ரஜினிகாந்த்”, என அவர் அளித்த பதில் டிவிட்டரில் டிரென்டிங் ஆனது.  அவருடைய தைரியத்திற்காக எல்லோரும் அந்த இளைஞரை பாராட்டினர்.
தூத்துக்குடி மரண சம்பவத்திற்கு பிறகு, அவரது அறிக்கைகள் மாநிலத்தில் பாஜக தலைவர்கள் எடுத்த நிலைப்பாட்டை பிரதிபலித்ததால், ரஜினிகாந்தை பாஜகவின் கைப்பாவை என பலரும் அழைத்தனர்.
வேறு எதையும் விட, ரஜினிகாந்தின் அறிக்கைகள் அவரது ஆட்சி குறித்த ஒரு ஐடியாவை பார்வைக்கு அளித்துள்ளன. ஒரு வழியில், 1980களில் இந்த தென்மாநிலத்தை ஆட்சி செய்த தமிழக அரசியலில் மற்றொரு சூப்பர் ஸ்டாரான எம்.ஜி. ராமச்சந்திரனைப்போல அவைகள் பிரதிபலிக்கின்றன.
ரீல் vs  நிஜம்
பெரிய திரையில் பார்த்த ரஜினி காந்த்தும், அரசியல்வாதியான ரஜனிகாந்த்தும் பலவழிகளில் வெவ்வேறானவர்கள் என்பது புதன்கிழமை தெளிவாகத் தெரிந்தது. ஜுன் 7-அன்று வெளியாகவுள்ள அவரது சமீபத்திய படமான “காலா“வின் ட்ரெய்லரில், ஏழைகளுக்கு அவர்களது உடல்கள்தான் ஆயுதம் எனக்கூறி,  மக்களை போராட அழைக்கிறார் ரஜனிகாந்த். நிஜ வாழ்க்கையில், ”இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம்னா தமிழகம் ஒரு சுடுகாடாக மாறிவிடும்” என்று ரஜினிகாந்த் கூறினார். அவரது இந்த அறிவிப்பு தமிழகத்தில் அரசியல்கட்களிடமிருந்து ஒரு வலுவான எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.  முதல் எதிர்ப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடமிருந்து வந்தது. ”எந்த போராட்டமும் நடக்கவில்லை என்றால்தான் தமிழகம் கல்லறையாக மாறும்” என்றார். அவர். காற்று, நீர் மற்றும் நிலம் ஆகியவை மாசுபடுத்தப்படும்போது அது சுடுகாடாகிறது” என சுட்டிக்காட்டினார் திருமாவளவன்.
பல தலித் அறிவுஜீவிகள் சிலகாலமாக சொல்லி வருவதை ரஜினிகாந்தின் அறிக்கைகள் உறுதிப்டுத்துகின்றன. அது யாதெனில், கபாலி மற்றும் காலா படங்களில் வரும் அரசியல் வசனங்கள் அந்த படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தினுடையது, ரஜினிகாந்தினுடையது அல்ல. இயக்குநரின் பார்வைக்கு அவர் ஒரு வாகனம் என்பதே. இக்கருத்தை இயக்குனர் Scroll.in க்கு ஒரு நேர்காணலில் வியாழனன்று விளக்கினார்.
தன்னுடைய செய்தியை தெரிவிக்க நடிகர் ரஜின்காந்தின்  புகழை இயக்குநர் ரஞ்சித் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால், ரஜினிகாந்தின் இந்த அறிவிப்புகள் காலா மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2016ல் கபாலி வெளியிடப்பட்டபோது, ரஜனிகாந்த் அரசியலில் இணையவில்லை. இன்று, அவர் அரசியலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளார். மேலும்,  தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை அவர் டிசம்பரில் அறிவித்தார், அப்போதிருந்து, காலாவில் தனது கதாபாத்திரத்துக்கு விரோதமான விஷயங்களை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அரசியலில் அவரது நுழைவு அத்தகைய முரண்பாடுகளுக்கு ஒரு வேறுபட்ட பரிணாமத்தை கொடுத்திருக்கிறது.
எம்.ஜி.ஆர் வழி
திரைப்பட மற்றும் உண்மையான கதாபாத்திரங்களுக்கு இடையேயான வித்தியாசம் தமிழகத்துக்கு புதிது அல்ல. அவரது திரைப்பட வாழ்க்கையின் உயரத்தில், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் மீட்பராக தன்னை எம்.ஜி.ஆர் சித்தரித்தார். இது அவரது அரசியல் வெற்றிக்கு ஒரு பெரும் பங்களிப்பாக இருந்தது.
ஆனால், அவர் 1977ல் முதலமைச்சராக ஆனபோது, அவரைப் பற்றியது அனைத்தும் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை. அவர் அறிமுகப்படுத்திய வரிவிதிப்பு கொள்கைகள் பணக்காரர்களைவிட ஏழைகளையே அதிகம் பாதித்தன. தமிழகத்தில் உயர் கல்வித்துறை தனியார்மயமானதற்கு அவர்  மூலகாரணமாக இருந்தார்.  எதிர்ப்பை அடக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. அதனால் அவர் குண்டர் தடைச் சட்டத்தை இயற்றினார். இது எதிர்ப்பை நசுக்க அவரது அரசாங்கத்தால் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட ஒரு தடுப்புச் சட்டம். பத்திரிகைகளை தணிக்கை செய்ய பயன்படும் ஒரு சட்டத்தை அவர் விரும்பினார். எம்.ஜி.ஆரின் இந்த அம்சங்களை கல்வியாளர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் தனது “இமேஜ் ட்ராப்” என்ற புத்தகத்தில் விரிவாக கையாண்டிருக்கிறார். ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய பெரும்பாலான விமரிசனங்கள் அவர் இறந்த பின்னரே வெளிப்பட்டன. அவர் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய ஏழைகளின் பங்காளன் இமேஜ் மற்றும் முன்னெப்போதுமில்லா தேர்தல் வெற்றிகள் காரணமாக, தன்னை பொதுமக்களின் கூர்ந்தாய்வுக்கு அப்பால் வைத்துக்கொண்டார்.
ரஜினிகாந்த் ஒருவகையில் எம்.ஜி.ஆரைப் போலவே, அவரது படத்தின் கதாபாத்திரங்கள் ஏழைகளுக்கும் பலவீனமானவர்களுக்கும் பச்சாதாபம் காட்டுபவராக இருப்பதைக் குறிக்கின்றன. ஆனால் எம்.ஜி.ஆரைப் போலல்லாமல், தனது அரசியல் நிலைப்பாட்டின் இயல்பு காரணமாக, ஆர்ப்பாட்த்திற்கெதிரான போராட்டங்களுக்கு எதிரான தனது அறிக்கைகள் குறித்த விமரிசனங்களுக்கு அப்பால் தன்னை வைக்க ரஜினிகாந்தால் முடியவில்லை. தனது முதல் தேர்தலை சந்திக்கும் முன்னரே அவர் அவநம்பிக்கையை சம்பாதித்துள்ளார். திராவிட இயக்கத்தின் அடிப்படையான பல அம்சங்களை நீர்த்துப்போகச் செய்தாலும், அந்த இயக்கதின் முகமாக எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனால், ரஜினிகாந்த் அன்னிய இந்துத்துவா முகம் நோக்கி மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறார்.
பாஜக, ரஜினிகாந்த் மற்றும குருமூர்த்தி
புதன்கிழமை சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்வி இதுதான் : தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் குறித்த அவரது புரிதலை பல்டி (யு டர்ன்) அடிக்கச் செய்தது எது?
தனது அரசியல் நுழைவை கடந்த ஆண்டு அவர் அறிவித்தபோது, தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று ரஜினிகாந்த் கூறினார். பாரதீய ஜனதா கட்சியை வழிநடத்தும் “இந்துத்துவாவுக்கு“ இது ஒரு மங்களகரமான சொல்லாக தமிழ்நாட்டில் பார்க்கப்பட்டது.
மே 22-ம் தேதி, தூத்துக்குடியில் போலீஸ் அட்டூழியங்களைக் கண்டிப்பதற்கு பதிலாக, ”தமிழகத்தில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் காரணமாக தமிழகத்தில் வன்முறை ஏற்பட்டது,” என தமிழக பாஜக தலைவர்கள் கூறினர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மிகவும் நெருக்கமானவரும், ரஜினிகாந்தின் நண்பருமான “துக்ளக்” பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி மே 23-ம் தேதி வரிசையாக ட்வீட்டுகளை வெளியிட்டார். ”குழப்பம் விளைவிப்பவர்கள், தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தை ”ஹைஜாக்” செய்துவிட்டனர்” என அந்த ட்வீட்டுகளில் அவர் குற்றஞ்சாட்டினார். ”கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் ஒரு போர் மண்டலமாக மாற்றி விட்டனர்,” என்றார் அவர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், செப்பு உருக்காலை குறித்த ரஜினிகாந்தின் கருத்து மற்றும் சமூக விரோதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்ற அவரது குற்றசாட்டு, குருமூர்த்தியின் குற்றச்சாட்டை எதிரொலிக்கிறது. மேலும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் அச்சங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் ரஜினிகாந்த் ஒரு வாதத்தை  எடுத்துரைத்தார். அதாவது, ”இப்படி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றால், அவை முதலீடுகளையும், வேலைகளையும் விரட்டியடித்துவிடும். இளைஞர்களுக்கு துயரத்திற்கு வழிவகுக்கும்” என்பதே அது.
புதன்கிழமை, குருமூர்த்தி ட்விட்டரில் ரஜினிகாந்தை பாராட்டினார்.
அந்த நடிகருக்கான பாராட்டு அத்தோடு முடியவில்லை. கடந்த வாரம் வரை, நடிகர்  ரஜினிகாந்த் மற்றும் அவரது அறிக்கைகளை சிறுமைப்படுத்தி பேசியதோடு, காலாவில் ஆத்திரமூட்டுவதாக கருதப்படும் பாடல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்திய அதிமுக, சூப்பர் ஸ்டாரை அவரது நேர்மைக்காகப் பாராட்டியது. கடலோர நகரில் (தூத்துக்குடியில்) ஆர்ப்பாட்டங்கள் வெளி ஆட்களால் ஹைஜாக் செய்யப்பட்டன என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை சூப்பர் ஸ்டார் வழிமொழிந்துள்ளதாக அக்கட்சியின் ஊதுகுழலான ” நமது அம்மா” நாளிதழ் கூறியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுங்கட்சியான அதிமுக செயல்படுவதாக கடும் விமரிசனத்தை எதிர்கொண்டது. தமிழகத்தில் அக்கட்சியின் நம்பகத்தன்மை குறைந்துவரும் நிலையில், அதிமுகவின் ஆதரவு ரஜினிகாந்தின் வாதத்துக்கு உதவியாக இருக்காது.
அவர் குறிப்பிட்ட அந்த “சமூக விரோதிகள்“ யார் என்பதை அவர் தெரிவிக்க  வேண்டும் என நிருபர்கள் தொடர்ந்து கேட்டபோது, ரஜினிகாந்த் கோபமடைந்தார்.    போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருப்பது எப்படி தெரியும் என நிருபர்கள் கேட்டதற்கு, “தனக்கு தெரியும்“ என ரஜினிகாந்த் கூறினார்.
பாஜக சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு மாநிலத்தில், எந்த ஒரு உண்மையான ஆதாரத்தையும் வழங்காமல் அக்கட்சியின் கூற்றுக்களை ஆதரித்து அறிக்கைகள் விட்டுவிட்டு தப்பிப்பது ரஜனிகாந்த் போன்ற ஒரு சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் சிரமமாக இருக்கும். அவரது தூத்துக்குடி விஜயம் அவர் ”தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட அடி.”. அதை சரி செய்ய நிறைய தேவைப்படும்.
ஸ்ருதிசாகர் யமுனன்
நன்றி தி ஸ்க்ரோல் இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக