வெள்ளி, 15 ஜூன், 2018

சின்னகுத்தூசி - தியாகராஜன் .. சுயமரியாதை; சுயசாதி மறுப்பு; சமூகத்துக்காக வாழ்தல்!

சிறப்புக் கட்டுரை: சுயமரியாதை; சுயசாதி மறுப்பு; சமூகத்துக்காக வாழ்தல்! மின்னம்பலம்: தனியன் - சின்னக்குத்தூசி பிறந்த தின (ஜூன் 15) கட்டுரை
சின்னக்குத்தூசி தியாகராஜன். மூத்த பத்திரிகையாளர்; பல பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் விமர்சகர் என்பதாகப் பரவலாக இந்தத் தலைமுறையினரிடம் அறியப்பட்டிருக்கும் அவருக்கு வேறு பல தனிச் சிறப்புகளும் உண்டு.
இடைவிடாத படிப்பாளி. சமகால அரசியல் தொடர்பான புத்தகங்கள் முதல் சரித்திரச் சான்றாவணங்கள் வரை, உள்ளூர் தினசரி, வார, மாத சஞ்சிகைகள் முதல் அனைத்திந்திய ஆங்கிலப் பத்திரிகைகள் வரை ஒன்றுவிடாமல் சொந்தக் காசில் வாங்கி ஓயாமல் படித்தவர். பாதுகாத்தவர். வாழ்நாளின் பெரும்பகுதியில் எதையேனும் இறுதிவரை வாசித்துக்கொண்டே இருந்தவர்.
எதையும் வாசிக்காத நேரத்தில் இசையோடு வாசம் செய்வார். அவர் தேர்ந்த இசை ரசிகர். மரபுரீதியான கர்னாடக சங்கீதம் முதல் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் வரை அவர் கேட்டு ரசிக்காத இசை மரபோ, வடிவமோ ஒன்றில்லை. கலைகளை வளர்த்த காவிரி மண்ணின் மைந்தரான அவருக்குப் பிடித்தது மரபிசையான கர்னாடக சங்கீதமானாலும், இசையின் எல்லாப் புதிய போக்குகளையும் அவர் கேட்டு ரசித்தவர். அதன் மூலம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருந்தவரும்கூட. ஒரு குழந்தையின் குதூகலத்துடன்.


அறிவுச் சுனையும் அன்பின் ஊற்றும்
தன்னை நாடி வந்த யாரையும் மரியாதையுடன் நடத்துவது அவரது தன்னியல்பு. வசதிக்கேற்ற, பதவிக்கேற்ற கூடுதல் தனி மதிப்பேதும் இல்லை. எல்லோரையும் சமமாகவே பாவித்தவர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள் எனப் பல தரப்பாருக்கும் அவரது வல்லப அக்ரஹாரத் தெருவில் இருக்கும் எட்டுக்கு எட்டு அறை எந்நேரமும் திறந்தே இருக்கும். அறிவு தானம் செய்தபடி, அன்பைச் சுரந்தபடி, அரவணைப்பைத் தந்தபடி. செவிக்கும் வயிற்றுக்கும் உணவளிப்பது மட்டுமல்ல, பல பத்திரிகையாளர்களுக்கு வாழ்வை அளித்த 24 மணிநேர இலவச வேலைவாய்ப்பு அலுவலகமாகவும் அவரது அறை இயங்கியது.
அவர் படுக்கும் கட்டிலிலும் அவர் அமரும் நாற்காலியிலும் படுக்கவும் அமரவும் தேவையான இடம் போக மற்ற அனைத்து இடங்களிலும் புத்தகங்கள், பத்திரிகைகள் நிரம்பி வழியும். அந்த அறையில் புத்தகங்களும் பத்திரிகைகளுமே குடியிருந்தன. அவற்றுக்கு மத்தியில் அவரும் ஒண்டிக்கொண்டு இருந்தார் என்பதே அந்த அறை குறித்த சரியான வர்ணனையாக இருக்கும்.
பெரிதாக எதற்கும் ஆசைப்படாத மனம். யாரின் உதவியையும் எதற்காகவும் எதிர்பார்க்கக் கூடாது என்கிற வைராக்கியம். எளிமையான வாழ்வு, எதிரிக்கும் இரக்கம் காட்டும் பண்பு, தான் பட்டினி கிடந்தேனும் தன்னை நாடி வரும் அடுத்தவருக்கு உணவளிக்கும் தன்மை என அவரது ஞானம் மற்றும் மனிதாபிமானத்தின் ஆழ அகலங்கள் பலரும் அறியாத அருங்குணங்கள்.
இவையெல்லாம் சிறந்த குணங்கள் என்றாலும், இவற்றை நீங்கள் வேறு சிலரிடமும் காண முடியும். முழுமையாக இல்லாவிட்டாலும் தனித்தனியாகவேனும். இவற்றையெல்லாம் தாண்டி மற்றவர்களிடம் காண முடியாத சிறப்பான சின்னக்குத்தூசிக்கே உரிய அருங்குணங்கள் மூன்று -சுயமரியாதை; சுயசாதி மறுப்பு, சமூகத்துக்காகவே வாழ்தல். அவரது ஒட்டுமொத்த வாழ்வையும் இந்த மூன்று சொற்களில் அடக்கிவிட முடியும்.

சுயமரியாதை
அவர் உண்மையான சுயமரியாதைக்காரர். எந்த நேரத்திலும் எவரிடமும் தனக்காக அவர் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தவரல்லர். வாரக்கணக்கில் அவர் கையில் காசில்லாமல் இருந்திருக்கிறார். ஒரே ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டிருக்கிறார். அதுவும் பல சமயம் அவரது சுயமரியாதையை மதிக்கத் தெரிந்த அவருடைய மிகச் சில நெருங்கிய நண்பர்கள் வாங்கிக்கொடுக்கும் உணவாக இருக்கும். அப்படியானதொரு சூழலிலும் அவர் தனது சுயமரியாதையை எங்கும் எவரிடமும் விட்டுக்கொடுத்தவரல்ல.
அவரது சுயமரியாதை உணர்வு எப்படியானது என்பதற்கு உதாரணமாகப் பல சம்பவங்களுண்டு. அதில் ஒரு சம்பவம். அவர் அப்போது முரசொலியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். முரசொலியில் வரும் அரசியல் கட்டுரைகள், பெட்டிச் செய்திகள் திமுக தலைவர் மு.கருணாநிதி அல்லது முரசொலி மாறன் பார்வைக்குச் செல்லாமல் அச்சுக்குப் போகாது. அதில் ஒரே விதிவிலக்கு, சின்னக்குத்தூசி தியாகராஜனின் எழுத்துகள் மட்டும் நேராக அச்சுக்குச் செல்லும்.
அப்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது. மத்தியிலும் கூட்டணி ஆட்சியில் திமுக இடம்பிடித்திருந்தது. மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியில் இருந்து ஆதரவளித்துவந்த காலகட்டம் அது. அதேசமயம் அந்த இரண்டு கட்சி தலைவர்களும் அவர்களின் பத்திரிகைகளும் தொடர்ந்து திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிரான தாக்குதல்களை செய்துவந்தனர். அந்த தாக்குதல்கள் தீவிரமடையவும் சின்னக்குத்தூசி திமுக மீதான தாக்குதல்களுக்கு முரசொலியில் மறுப்பு எழுத ஆரம்பிக்கிறார்.
முரசொலியில் வந்த சின்னக்குத்தூசியின் விமர்சனத்துக்கு பதில் எழுதாமல், அப்படிப்பட்ட ஒரு கட்டுரையை எடுத்துக்கொண்டு அந்த தேசியக் கட்சித் தலைவர்களில் சிலர் கருணாநிதியிடம் புகார் செய்கிறார்கள். “மத்தியில் உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், உங்கள் கட்சிப் பத்திரிகை எங்களைத் தாக்குவது எப்படி சரி?” என்பது அவர்களின் வாதம். ஆனால் சின்னக்குத்தூசி தானாகச் சென்று அவர்களைத் தாக்கவில்லை; அந்தக் கட்சிகள் திமுக அரசு மீது வைத்த பகிரங்கக் குற்றச்சாட்டுக்கள் / விமர்சனங்களுக்கான மறுப்பை எழுதினாரே தவிர அவராக வலிந்து போய் அந்தத் தாக்குதல்களை நடத்தவில்லை என்பதை அந்த தேசியக் கட்சித் தலைவர்கள் வழக்கம்போல வசதியாக மறந்துவிட்டார்கள்.
அந்த தேசியக் கட்சித் தலைவர்களின் கோபம் கருணாநிதிக்கும் தொற்றிக்கொள்ள, அவர் முரசொலி அலுவலகத்தில் இருந்த சின்னக்குத்தூசிக்குத் தொலைபேசியில் பேசுகிறார். அந்த தேசியக் கட்சித் தலைவர்கள் தன்னிடம் தெரிவித்த புகாரைச் சொல்லிவிட்டு, “அவர்கள் மத்தியில் நம் ஆட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். அதை நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது” என்பதாக கருணாநிதி சின்னக்குத்தூசியிடம் சொல்கிறார்.
பதிலுக்கு, தானாகப் போய் அவர்களைத் தாக்கவில்லை திமுக ஆட்சியின் மீதான அந்தக் கட்சிகளின் தாக்குதல்களுக்கு மட்டுமே தான் பதில் சொல்வதாக சின்னக்குத்தூசி விளக்கமளிக்கிறார்.
ஆனால், கருணாநிதி அவரது விளக்கத்தை ஏற்க மறுக்கிறார்.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் தாக்குதல்களுக்கு திமுகவின் கட்சிப் பத்திரிகை பதில் தராமல் இருக்க முடியாது என்று வாதாடிய சின்னக்குத்தூசி, முரசொலி அமைதி காத்தால் திமுக மீதான குற்றச்சாட்டுகள் உண்மையோ என்கிற சந்தேகம் திமுகவினருக்கே தோன்றும் என்பதோடு அதற்கான பதில் முரசொலியில் வர வேண்டுமென திமுகவினரே எதிர்பார்ப்பார்கள் என்றும் வாதாடுகிறார். இதையெல்லாம் எழுதாமல் முரசொலியில் வேறு எதை எழுதுவது என்று சின்னக்குத்தூசி கேள்வி எழுப்பவும் கருணாநிதியின் கோபம் மேலும் அதிகரிக்கிறது.
"அப்படியானால் நானே எழுதுவேன் தெரியுமில்ல? என்னாலும் எழுத முடியும்" என்கிறார் கருணாநிதி.
"தாராளமாக எழுதுங்கள். நீங்களே எழுதினால் அது இன்னும் சிறப்பாகவும் இருக்கும்; முரசொலியும் அதிகம் விற்கும்; கட்சிக்காரர்களும் உற்சாகமடைவார்கள். இதுவரை எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி" என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்ததும் முரசொலி வேலையிலிருந்து விலகிவிடுகிறார்.
தான் மிகவும் மதித்த, நேசித்த, தன் இறுதிக்காலம் வரை உளப்பூர்வமாக ஆதரித்த ஒரு ஆகப் பெரிய அரசியல் தலைவரே ஆனாலும் தன் சுயமரியாதைக்குச் சின்னதாய் ஒரு காயம் ஏற்படுவதாக அவர் உணர்ந்தால் அங்கிருந்து அடுத்த நொடி விலகும் ஆன்ம பலம் அவருக்கிருந்தது.
அதிகாரத்தை அண்டிப் பிழைப்பதே அத்தியாவசிய வாழ்நெறியாகவும் தனிமனிதத் திறனாகவும் ஊடகத் தொழில்நேர்த்தியாகவும் கற்பிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு தலைமுறை ஊடகவியலாளர்கள் மத்தியில் இப்படியாகவும் ஒருவர் இருந்தார்; அதுவும் இருபத்தியோராம் நூற்றாண்டில் என்பது அதிசயமாகத் தோன்றலாம். ஆனால் அதுவே உண்மை.
இப்படித் தானாக ஒதுங்கியவரை மீண்டும் முரசொலியோடும் கருணாநிதியோடும் இணைக்க முரசொலி மாறன் பல முயற்சிகளை எடுத்தார். தன் குடும்ப உறுப்பினர்கள், திமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரைத் தூதனுப்பினார். எல்லோரையும் வரவேற்று உபசரித்து சிரித்துப் பேசி அன்போடு வழியனுப்பி வைத்த சின்னக்குத்தூசி, எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

முடிவை மாற்றிய இரவு
அந்த முடிவை அவரே ஒரே இரவில் மாற்றிக்கொண்டார். இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழக அரசியலின் மறக்க முடியாத, மறக்கக் கூடாத இருண்ட இரவுகள் இரண்டு. முதலாவது கருணாநிதியின் நள்ளிரவுக் கைது. இரண்டாவது, சுமார் இரண்டு லட்சம் அரசு ஊழியர்களை ஒற்றைக் கையெழுத்தில் வேலையிலிருந்து நீக்கியதோடு, அப்படி நீக்கப்பட்ட நுற்றுக்கணக்கான அரசாங்கப் பணியாளர்கள், அவர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் (அவர்களில் பலர் பெண்கள்) இரவோடிரவாக வீடுபுகுந்து கைது செய்யப்பட்ட கொடுமை. இரண்டையும் செய்தவர் ஜெ.ஜெயலலிதா.
2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி நள்ளிரவில் படுக்கையறையிலிருந்து குண்டுக்கட்டாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கைது செய்யப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தவர், விடியற்காலை குளித்துவிட்டு முரசொலிக்குத் தானாகச் சென்று தன் ஊடகப் பணியை ஆரம்பித்தார்.
அதுதான் சின்னக்குத்தூசி ஆர்.தியாகராஜன் என்கிற நேர்மைமிகு சுயமரியாதைக்காரர். தனிமனித சுயமரியாதைக்கான இடம், பொருள், ஏவல்... பொதுநன்மைக்காகச் சேர்ந்து செயற்பட வேண்டிய சூழல் எது என்பதில் அவருக்குத் தெளிவான பார்வைகள், வரையறுக்கப்பட்ட எல்லைகள், வலுவான அளவுகோல்கள் இருந்தன. அவற்றின் அடிப்படையிலேயே அவர் வாழ்ந்தார்.அவையே அவரது சுயசாதி மறுப்பு மற்றும் சுயநலன் தவிர்த்து சமூகத்துக்காகவே வாழ்தல் ஆகியவற்றிலும் அவரை வழிநடத்தின.
அவை குறித்து இன்று மாலை 7 மணிப் பதிப்பில் காணலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக