திங்கள், 18 ஜூன், 2018

சென்னையில் ஆர்ப்பாட்டம் .. காஷ்மீர் நாளிதழ் ஆசிரியர் ஷுஜாத் புகாரி கொலையை கண்டித்து ..

பத்திரிகையாளர் படுகொலை:  இன்று ஆர்பாட்டம்!
மின்னம்பலம்:ரைசிங் காஷ்மீர் நாளிதழின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இன்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஜூன் 14ஆம் தேதியன்று ஸ்ரீநகரிலுள்ள தனது அலுவலகத்திலிருந்து இப்தார் விருந்துக்குச் செல்வதற்காகக் கிளம்பியபோது, ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் தலைமையாசிரியர் ஷுஜாத் புகாரி மூன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், அவருடன் இருந்த இரண்டு பாதுகாவலர்களும் உயிரிழந்தனர்.
புகாரியின் இறுதிச் சடங்கில் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஷுஜாத் புகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் மெஹபூபா முப்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பத்திரிகையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ரைசிங் காஷ்மீர் நாளிதழின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி படுகொலைக்கு சென்னைப் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. ஷுஜாத் புகாரியின் படுகொலையை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் முன்பு 18.06.2018அன்று மாலை 3.30 மணியளவில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்ய அழைக்கின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக