வெள்ளி, 15 ஜூன், 2018

பெரியாரும் அண்ணலும் .. ஒரு தேவையில்லாத வாதம் பரப்பப்படுகிறது.. பார்ப்பனிய நோக்கம் பரப்பபடுகிறது?

Krishnavel T S : பெரியாரும் அண்ணலும்
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு தேவையில்லாத வாதம் பரப்பப்படுகிறது. அதாவது அண்ணல் உயர்ந்தவரா? பெரியார் உயர்ந்தவரா? என்ற ஒரு முட்டாள்தனமான வாதம்.
சமத்துவ சமுதாயத்தை பார்க்க வலது கண் முக்கியமா? இடது கண் முக்கியமா? என்பது போன்ற கேள்வியே அது, ஒரு கண் தான் முக்கியம் என்று சொல்லி இன்னொரு கண்ணை குருடாக்கும் முயற்சியே இது, இறுதியில் இரண்டு கண்ணையும் இழந்து நாம் குருடாக அலையவேண்டும் என்பதே பார்ப்பனிய நோக்கம்
பெரியாரும் அண்ணலும் இருவரும் சமூக வர்க்க அடிப்படையில் இருதுருவங்களில் பிறந்தவர்கள்,
பெரியார் மிகப்பெரிய கோடிஸ்வரர் குடும்பத்தில் பிறந்தவர் படிக்க வேண்டிய அவசியமோ வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியமோ இல்லாத சூழலில் பிறந்தவர், இவரின் கல்வித் தகுதி வெறும் நான்காம் வகுப்பு மட்டுமே, ஆனால் சமூக அக்கறையின் காரணமாக தன் வாழ்நாள் மற்றும் தனது அனைத்து சொத்துகளையும் திராவிட இயக்கத்துக்காக தியாகம் செய்தவர்.
அண்ணல் மிக ஏழ்மையான மற்றும் தீண்டாமையான குடும்பத்தில் பிறந்தவர், பள்ளி செல்வதே கனவு என்னும் சூழலில் தன உழைப்பால் லண்டன் சென்று பாரிஸ்டர் வரை படித்தவர், இந்தியா திரும்பியபின் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி பொறுப்பு இவரை தேடிவந்த போது, அதை ஏற்றுக்கொண்டு பணக்கார கோமானாக வாழ்ந்திருக்க முடியும், ஆனால் என் பணி மக்கள் பணியே என்று அந்த பதவியை மட்டுமல்ல அது போன்ற பல்வேறு பதவிகளை தூக்கி எரிந்தவர்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால் இன்றும் இந்தியாவில் சமூக நீதி என்பது வெறும் கனவு மட்டுமே
1937-ல் அண்ணல் “Anihilation of Caste” என்ற நூலை எழுதி, அதற்கு காந்தியார் வரை பலர் எதிர்ப்பு தெரிவிக்க, இறுதியில் தனது சொந்த வெளியீடாக அவரே வெளியிட்டார்.
ஆனால் அதே 1937-ல் பெரியார், அண்ணலின் அனுமதியுடன், அந்த நூலை தனது குடியரசு நாளேட்டில் தொடராக வெளியிட்டு, பின்னர் அதனை தமிழில் நூலாகவும் வெளியிட்டார்.

நீங்கள் அம்பேத்கரிஸ்ட்டா பெரியாரிஸ்ட்டா என்று கேட்கும் மடையர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான்
பெரியாரே ஒரு அம்பேத்கரிஸ்ட் தான்
அண்ணலே ஒரு பெரியாரிஸ்ட் தான்
இதை புரியாமல் RSS மற்றும் பார்ப்பன கூட்டு சதியில் சிக்கிகொள்ளாமல் நாம் இணைந்து செயல்படவேண்டும்.
இறுதியாக ஜெய் பீம் பற்றி...
இரண்டு இஸ்லாமியர் சந்தித்துக் கொண்டால் “அஸ்லாம் அலைக்கும்” என்று சொல்லிக்கொள்வார்கள்
இரண்டு கிருஸ்துவர்கள் சந்தித்துக் கொண்டால் “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லிக்கொள்வார்கள்
இரண்டு ISKON அமைப்பினர் சந்தித்துக் கொண்டால் “ஹரே கிருஷ்ணா” என்று சொல்லிக்கொள்வார்கள்
இப்போது எல்லாம் சில பார்ப்பனர்கள் சந்தித்துக் கொண்டால் “ராதே ராதே” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
அண்ணலின் புகழை “ஜெய் பீம்” என்ற இரண்டு சொற்களில் அடக்கும் முயற்சியாகவும் அவரை கடவுளாக்கும் முயற்சியாகவும் தான் இதை என்னால் பார்க்க முடிகிறது. யாரையாவது நீங்கள் புனிதப்படுத்த கடவுள் நிலைக்கு கொண்டு செல்ல விரும்பினால், உங்களை அறியாமல் அங்கே ஒரு பூசாரியை உள்ளே கொண்டுவருகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்
அண்ணலின் தத்துவங்களும் உழைப்பும் தியாகமும் “ஜெய் பீம்” என்ற இரண்டு வார்த்தைகளை விட மிக மிக பெரியது, அவரது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்ப்பதே அதை விட முக்கியம்.
இப்படியே போனால் வருங்காலத்தில் பெரியாரிஸ்ட் ஒருவரை ஒருவர் சந்தித்தால் “கடவுள் இல்லை தோழர்” என்றும் பதிலுக்கு “கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் தோழர்” என்று சொல்லிக் கொள்ளவேண்டும் என்று யாராவது முட்டாள்தனமாக ஒரு வாதத்தை முன்வைப்பார்கள், இறுதியில் பெரியார் பிறந்தநாள் அன்று திடலுக்கு கருப்பு உடை அணிந்து காவடி எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்
ஓங்குக அண்ணலின் புகழ்....
பரவுக அவர் தம் கொள்கைகள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக