புதன், 27 ஜூன், 2018

பிரதமர் மோடிக்கு கடும் பாதுகாப்பு ... அமைச்சர்கள் கூட சந்திப்பது ... யுத்தகால நடவடிக்கைகள் போன்று ...

இனி அமைச்சர்களும் கூட மோடியை சந்திக்க முடியாது!மின்னம்பலம் : மக்களின் தலைவர் என்று பாஜகவினரால் போற்றப்படும் பிரதமர் மோடியை அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் கூட தேவையில்லாமல் நெருங்க முடியாத அளவுக்கு, மோடியின் பாதுகாப்பு நடைமுறைகள் பலப் படுத்தப்பட்டிருக்கின்றன.
பிரதமர் மோடியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய நெறிமுறைகளின்படி மத்திய அமைச்சர்கள் கூட பிரதமரைப் பார்க்க வேண்டும் என்றால் பிரதமரின் பாதுகாப்புப் படையான எஸ்பிஜியின் அனுமதி பெற்ற பிறகே பார்க்க முடியும்.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் ராஜீவ் காந்தியைப் போல மோடியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் பிரதமர் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமரின் பாதுகாப்பு பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள் துறை செயலாளர் ராஜீவ் கவுபா, உளவுத் துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புப் படையான (Special Protection Group) எஸ்பிஜியிடம் இருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டன.
இந்த ஆலோசனையின்போது, “பிரதமர் மோடி வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவின் முக்கிய சொத்தாகக் கருதப்படுபவர். அதேநேரம் அவரது உயிருக்குப் பலரும் குறிவைத்துள்ளனர். எனவே, மோடி வரும் தேர்தலில் பெரும்பாலும் சாலை வழியாகச் செல்லும் ஊர்வலம், பேரணிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டால் மோடியின் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும்’’ என்று பரிந்துரைத்துள்ளன மத்திய பாதுகாப்பு அமைப்புகள்.
இதற்கிடையில் சிபிடி எனப்படும் பிரதமருக்கான ‘நெருங்கிய பாதுகாப்புக் குழு’ (Close Protection Team) பிரதமருக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விதிகளை வகுத்துத் தந்திருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பிரதமர் நரேந்திரமோடியை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்குக் கூட இனி கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது. பிரதமரைச் சந்திக்க வேண்டும் எனில் அதற்கான முழு விவரங்களுடன் எஸ்பிஜி படைப் பிரிவுக்கு விண்ணப்பித்து அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே பிரதமரைச் சந்திக்க முடியும். மத்திய அமைச்சர்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் கூட இந்த விதிமுறை பொருந்தும் என்கிறார்கள்.
அண்மையில் மேற்கு வங்காளத்துக்குப் பிரதமர் சென்றிருந்தபோது ஆறு அடுக்கு பாதுகாப்பைத் தாண்டியும் ஒருவர் பிரதமரின் காலில் கை வைத்தார் என்று தகவல்கள் வெளியாகின. இனி இதுபோன்ற குறைபாடுகள் நிகழக் கூடாது என்றும் பிரதமரைச் சுற்றி கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய நக்சலைட்டுகள் நடமாட்டமுள்ள மாநிலங்களின் காவல் துறை தலைமைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஓர் உத்தரவு போயிருக்கிறது. இம்மாநிலங்களுக்குப் பிரதமர் வரும்போது கூடுதல் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, பிரதமரைச் சந்திக்க முடியவில்லை எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்றோரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கும் நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் பிரதமரின் அரசியல் மற்றும் அரசு ரீதியான செயல்பாடுகள் மேலும் சுருக்கப்படுமா என்பது பற்றியும் தேசிய அரசியலில் விவாதம் எழுந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக