வியாழன், 14 ஜூன், 2018

ஸ்டெர்லைட் அரசாணை செல்லாது; அமைச்சரவையைக் கூட்டுக! மதுரை உயர்நீதிமன்றம் ..

ஸ்டெர்லைட் அரசாணை செல்லாது; அமைச்சரவையைக் கூட்டுக!மின்னம்பலம்: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலிமையாகவும், செல்லத்தக்கதாகவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (ஜூன் 14) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக தொடரப்பட்ட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக வினா எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக மே 29 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,‘ஓர் ஆலையை மூடுவது எளிதான ஒன்றல்ல. ஆலையை மூடி பிறப்பிக்கப்படும் அரசாணை என்பது Speaking order--க்கு இணையாக விரிவான காரணங்களை பட்டியலிட்டிருக்க வேண்டும். ஒரு பத்தியில் அரசாணை பிறப்பிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 1994-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் விதிக்கப்பட்ட எந்த நிபந்தனையையும் ஸ்டெர்லைட் ஆலை மதிக்கவில்லை. இதைக் காரணம் காட்டியே ஆலையை மூடியிருக்கலாம்’ என்று கூறியிருந்தேன். இப்போது உயர்நீதிமன்றமும் அதே கருத்தைக் கூறியிருப்பதன் மூலம் அரசின் துரோகம் அம்பலமாகியிருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கும் அன்புமணி,
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்டிருக்கும் கேவியட் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை மிகவும் பலவீனமானது என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டம் செல்லும் என்று சாதித்தார். அமைச்சரவையில் அனைத்துக்கும் கருத்துக் கூறும் உலகத்தர திறமையான இன்னொரு அமைச்சரோ, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை உலக நீதிமன்றத்திலும் செல்லுபடியாகும் என்று கூறினார். இவ்வளவையும் கூறிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டால் தங்களிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு. அரசாணை மீது நம்பிக்கை இருந்தால் கேவியட் மனு தாக்கல் செய்வது ஏன்?’’ என்று கேட்டிருக்கிறார்.
மேலும், “இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. அரசு பதவியில் நீடிக்கும் பட்சத்தில் நாளையே அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், மனித குலத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை விரிவாக பட்டியலிட்டு தமிழகத்தில் தாமிர உருக்காலைகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றலாம். அதனடிப்படையில் புதிய மூடல் ஆணையை பிறப்பிக்கலாம். அதுதான் சட்டப்படி செல்லத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பது உண்மை என்றால், அந்த ஆலைக்கு நிலங்கள் வழங்கப்பட்டதற்கான ஆணை ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு கட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கட்டிடங்களை அப்புறப்படுத்த அரசு தயாரா? அந்த நிலங்களை உடனடியாக கையகப்படுத்தி, கொல்லப்பட்டவர்களுக்கான நினைவிடத்தை அங்கு அமைக்கத் தயாரா? எனவே நாடகத்தை நிறுத்திவிட்டு அமைச்சரவையைக் கூட்ட வேண்டும் தமிழகத்தில் தாமிர உருக்காலைகளுக்கு அனுமதி இல்லை என்று கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை புதிதாக வெளியிட வேண்டும். ஆலை ஊழியர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அவர்களின் மாற்று வேலைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அன்புமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக