வெள்ளி, 1 ஜூன், 2018

BBC : நான்கு திசைகளிலும் தோல்வி - பாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மே 28 அன்று, இடைத்தேர்தல் மற்றும்
ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டது. 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி உத்தராகண்ட் மாநிலம் தராளி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. >இவற்றுடன் உத்தரபிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கார் மற்றும் பந்தாரா - கோந்தியா மற்றும் நாகலாந்து ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அவற்றில் பல்கார் தொகுதியில் பாஜகவும், நாகலாந்து தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன. மற்ற இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்துள்ளது.
 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மக்களவை இடைத் தேர்தல்களில் இதுவரை ஒன்றில்கூட வெற்றிபெறாமல், தொடர்ந்து மக்களவையில் தனது பலத்தை இழந்து வந்த பாஜக முதல் முறையாக ஒரு மக்களவை இடைத்தேர்தலில் வென்றிருப்பதும் இம்முறைதான்.

எனினும், தேர்தல் நடந்த மொத்தமுள்ள 15 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் நேரடியாக வெறும் இரண்டில் மட்டுமே வென்றுள்ள பாஜக நிச்சயமாக தற்போது கொண்டாடும் நிலையில் இல்லை. தனித்து நின்ற பாஜக, கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த எதிர்க்கட்சிகள் இந்த இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதும் தற்போது கவனிக்கத்தக்கது.
 


2014இல் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 73ஐ பாரதிய ஜனதா கூட்டணி வென்றது. சமீபத்தில் அம்மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளை இடைத் தேர்தலில் இழந்த பாஜக, இப்போது கைரானா தொகுதியையும் இழந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் பெண் வேட்பாளர் தபசும் பேகம் வெற்றி பெற்று, நடப்பு நாடாளுமன்ற மக்களவையில் உத்தர பிரதேசத்தின் முதல் இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினாராகவுள்ளார். 

அதே மாநிலத்தில் நுர்பூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் வென்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரும், பிகாரில் ஜோஹிகட் தொகுதியில் வென்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஆகியோரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த ஊடகவியலாளர் மணி, "எதிர்க்கட்சிகளாக உள்ள தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியும்," என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகக் கூறுகிறார்.  


"தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக அல்லாமல், முன்கூட்டியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் வெல்ல வாய்ப்புள்ளது," என்று அவர் கூறுகிறார்.
"தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்ள அக்கட்சித் தலைவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, அவர்கள் மீது சிறிய வழக்கு இருந்தாலும் அவற்றை வைத்து அவர்களை அச்சுறுத்தி, அவர்களை ஒன்று சேர விடாமல் செய்வதே பாஜகவின் அடுத்த நகர்வாக இருக்கும்," என்று கணிக்கிறார் மணி. 


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்ததே அவர்களின் வெற்றிக்கான காரணம் என்ற மணியின் கருத்தையே பிபிசியிடம் பேசிய இன்னொரு மூத்த ஊடகவியலாளருமான வி.எஸ்.சந்திரசேகர்.
"இந்த இடைத் தேர்தலின் முடிவுகள் 2019இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. இடைத் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய வெவ்வேறு விவகாரங்களில் அடிப்படையில் எதிர்கொள்ளப்படுபவை," என்கிறார் அவர். 


எல்லா மாநிலங்களிலும் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், காங்கிரஸ் கட்சியால் பாஜகவின் பலத்தை பாதியாகக் குறைக்க முடியும் என்று கூறும் அவர், பாஜக பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அதை எதிர்கொள்ள முடியுமா எனும் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்: "இப்போது தங்களுக்கு தோழமையாக இருக்கும் பிராந்திய கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதே பாஜகவுக்கு சவாலாக இருக்கும். பெட்ரோல் விலை உயர்வு, பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களால் நிதிஷ் குமார் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக முனுமுனுக்கத் தொடங்கிவிட்டனர்."
மூன்றாவது அணி குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஒரு அணியால் பாஜக அல்லாத அரசை அமைக்க முடியாது," என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக