வியாழன், 28 ஜூன், 2018

கிழக்கு கடற்கரை சாலை ...98 ஏக்கர் விவசாய நிலத்தை பறிக்க மத்தியரசு ... டிபென்ஸ் காரிடார்

டிஃபன்ஸ் காரிடர்:  அரசு கைப்பற்றும் 98 ஏக்கர் விவசாய நிலம்!1996-2001 ஆண்டுகளில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிலமில்லா விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் இந்த 98 ஏக்கர் நிலத்தையும் அந்த நிலத்தை உழுது பயிர் செய்துவந்த 78 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் பட்டாப் போட்டுக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்த விவசாய நிலப்பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அந்த நிலத்தில் வாழ்ந்த 78 பேர் தவிர கூடுதலாக 86 குடும்பத்தினருக்கும் குடியிருந்து வந்த இடத்தில் வீட்டு மனைக்கான பட்டா மட்டும் கொடுத்துள்ளனர்.
மின்னம்பலம்: கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று சென்னை-மகாபலிபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில், இந்திய இராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட ராணுவ கண்காட்சியில் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சேலம்,கோவை, ஓசூர், சென்னை, திருச்சி வழித்தடங்களில் டிஃபென்ஸ் காரிடார் எனப்படும் பாதுகாப்பு வழித்தடம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற் சாலைகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதை மேற்கோள் காட்டி, பத்தாயிரம் கோடி முதலீட்டில் சென்னை-சேலம் எட்டுவழி பசுமைப் பாதை என்பது உண்மையில் ராணுவ பயன்பாட்டுக்கான பாதைதான் என்பதை 21.06.2018 அன்று மின்னம்பலம்.காமில் முதன்முதலில் செய்தி வெளியிட்டோம்.
மறுநாள் இதை சுட்டிக்காட்டிப் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, "இந்த எட்டு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலை தான். இந்த சாலையில் பொதுமக்கள் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம், வழியிலுள்ள அனைத்து சாலைகளும் இந்த எட்டுவழி சாலையுடன் இணைக்கப்படும். ராணுவ பயன்பாட்டுக்கான சாலை என்பதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்." அறிவித்தார்.

இந்த செய்தியை அறிந்த சேலம் பகுதி வாசகர் ஒருவர் சேலத்தை அடுத்துள்ள கஞ்சமலை அடிவாரத்தில் இருக்கும் சடையாண்டி ஊத்து என்ற இடத்துக்கு போனால் உங்களுக்கு கூடுதலான செய்திகள் கிடைக்கும் என்று நம்மிடம் சொன்னார்.

இந்த இடம் எங்குள்ளது என்று விசாரித்ததில், சேலத்துக்கு மேற்கில் உள்ள கஞ்சமலையின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது என்பது தெரிந்தது. சேலம்-கோவை சாலையில் பெரியசீரகப்பாடி விநாயகா மிஷன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ராஜாஜி பாலிடெக்னிக் கல்லூரியை அடுத்து இளம்பிள்ளை செல்லும் சாலையில் சென்று, கல்பாரப்பட்டி ஊராட்சியை ஒட்டியுள்ள பாதை வழியாக கிழக்குப் பக்கம் திரும்பி சடையாண்டி ஊத்து பகுதிக்கு சென்றோம்.
கஞ்சமலையில் முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்து முக்திபெற்றதாக சொல்லப்படும் சித்தர்கோயில் இருக்கிறது. இந்த மலையில் இருந்து உருவாகி, மலையின் தென்பகுதியில் வழிந்து வரும் தண்ணீர் ஊற்றாக மாறும் இடம் தான் சடையாண்டி ஊத்து என்று அழைக்கப்படுகிறது.
இந்த இடத்திற்கு முன்பாக உள்ள அம்மன் நகர் என்ற இடத்திற்கு சென்று விசாரித்தபோது, பெரிய சீரகப்பாடி பஞ்சாயத்தில் சர்வே எண் ஒன்றில், 98 ஏக்கர் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு பயன்படும் மந்தை நிலம் உள்ளது. கஞ்சமலை அடிவாரத்தில், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஒட்டியுள்ள இந்தநிலம், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஆடு, மாடுகள் மேய்க்கப்படும் மந்தை தரிசாகத்தான் இருந்துள்ளது. இந்தப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கால்நடைகளை வளர்த்துக்கொண்டு வாழ்க்கை ஓட்டியவர்கள் பிற்காலத்தில் அந்த இடங்களை சமன் செய்து மானாவாரி விவசாயம் செய்யத் துவங்கியுள்ளனர்.

1996-2001 ஆண்டுகளில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிலமில்லா விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் இந்த 98 ஏக்கர் நிலத்தையும் அந்த நிலத்தை உழுது பயிர் செய்துவந்த 78 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் பட்டாப் போட்டுக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்த விவசாய நிலப்பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அந்த நிலத்தில் வாழ்ந்த 78 பேர் தவிர கூடுதலாக 86 குடும்பத்தினருக்கும் குடியிருந்து வந்த இடத்தில் வீட்டு மனைக்கான பட்டா மட்டும் கொடுத்துள்ளனர். இந்த நிலத்தின் வழியாக மேட்டூரில் இருந்து சேலம் நெத்திமேடு பகுதிக்கு 110 கிலோ வாட் மின்சாரம் செல்லும் இரண்டு மின் கோபுர பாதைகளும் உள்ளது.
இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் விவசாயம் செய்து வந்த அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து நிலத்தை அளவீடு செய்து விட்டு சென்றுள்ளனர்.
அம்மன் நகர் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரை சந்தித்தோம்.
"இப்போ கிட்டத்தட்ட 200 வீட்டுக்காரங்க இந்த எடத்துல குடியிருந்து வருகிறோம். திடீர்னு நாலு மாசம் முன்னால வந்த அதிகாரிகள் கையில இருந்த மேப்பில் இருந்த அடையாளத்தை பார்த்து போன்ல சொன்னாங்க, அதுக்கு சாட்டிலைட்டில் இருந்து வந்த சிக்னல்களை வைத்து செல்போன் போல இருந்த ஒரு கருவியைக் கொண்டு இந்த எடத்தை சுற்றிச்சுற்றி கணக்கெடுத்தாங்க. 98 ஏக்கர் நிலத்தில் ரெண்டு ஏக்கர் அளவுள்ள குட்டை போக, மீதி 96 ஏக்கர் அப்படியே இருப்பதாக நிலத்தை அளக்க வந்த சேலம் தெற்கு தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேசிக்கிட்டாங்க.
எதுக்கு சார் இந்த நிலத்தை அளவெடுக்கறீங்கன்னு நான் கேட்டதுக்கு இந்த எடத்தில் பெரிய தொழிற்சாலை வரப்போகுது. அதன் மூலமாக இங்குள்ள மக்கள் எல்லோருக்கும் நெறைய வேலைவாய்ப்பு கிடைக்குமுன்னு சொன்னாங்க. அதுக்கு பிறகு, அடிக்கடி இந்தப் பக்கம் வந்துபோகும் அதிகாரிகள் சொல்றதையும், எட்டு வழி ரோட்டுக்கு நடக்கிற வேலையையும் பார்த்தால், இந்த இடத்தில் எதோ ராணுவம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை தான் வரும் போலத் தெரியுது..." என்றார்.
ராஜேந்திரனின் பக்கத்து காட்டுக்காரரான ஜெகநாதன் "அம்மன் நகருக்கு போற வழியில் பட்டாக் காட்டுக்காரர்கள் நிலத்துக்கும் பக்கத்துல உள்ள நிலத்துக்கும் இடையில் இரண்டு பக்கமும் கரட்டுக்கு போகவர ஒரு சின்ன கொடித்தடம் இருக்குது. அந்த தடத்தை அத்துத் கட்டித்தான் சர்வே பண்ணுனாங்க. இதுக்கு அடையாளமாக முட்டுக்கல் எதுவும் நடவில்லை.

மேற்கில் கல்பாரப்பட்டி பஞ்சாயத்தில் இளம்பிள்ள போகும் ரோட்டுக்கும் கிழக்கில், சடையாண்டி ஊத்துக்கும் மேற்கில் நாலு கிலோமீட்டர் நெட்டுக்கு இந்த இடம் உள்ளது. இந்த மேய்ச்சல் நிலம் முடியும் இடத்தில் இருந்து கிழக்கே சுமார் 2 கிலோ மீட்டர் போனா இப்ப எட்டு வழிச் சாலை முடியும் இடம் வரும். அங்கிருந்து மேற்குப் பக்கம் கொஞ்சதூரம் பட்டா காட்டுக்குள்ளே ரோடு போட்டுக்கிட்டு வந்தா இந்த 98 ஏக்கர் தரிசு நிலத்துக்கு வந்துரலாம்.
இந்த இடத்தை ஒட்டியே கஞ்சமலை அடிவாரமும் வருது. கஞ்சமலையில் ஏராளமா இரும்பு, செம்பு தாது மண் இருக்குதுன்னு பல காலமா மக்கள் பேசிக்கிறாங்க.. எப்படியோ கஞ்சமலையை வெட்டிக் கொண்டு போக இந்த இடத்துலே எதோ ஒரு பேக்டரி கட்டப்போறாங்க. ராணுவ முகாமோ, இல்லே ஆயுத தொழிற்சாலையோ, இல்லே கஞ்சமலையில் இருந்து தாது மண்ணை வெட்டி கொண்டுபோகும் தொழிற்சாலையோ எதோ ஒன்னு இந்த இடத்துலே கொண்டுவரப்போறாங்க...'' என்கிறார்.
இது குறித்து சேலம் தெற்கு வட்டாச்சியர் சுந்தராஜிடம் பேசினோம். “விநாயகா மிஷன் கல்லூரிக்கு பின்பக்கம் உள்ள ஒரு இடத்தை நாங்க சர்வே செய்தோம். நீங்க கேக்கிறது அந்த இடமாகத்தான் இருக்கும்” என்று நாம் கேட்கும் இடத்தை அரசு அளந்ததை உறுதி செய்தார்.
ஆக இந்த 98 ஏக்கர் நிலத்தில் இரும்பு தொடர்பான ஒரு தொழிற்சாலை வரப் போவது உறுதியாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக