ஞாயிறு, 3 ஜூன், 2018

கலைஞர் 95 - தொண்டர்களை பார்த்து புன்னகைத்தபடியே தனது கையை அசைத்தார்.

tamilthehindu : திமுக தலைவர் கருணாநியின் 95-வது பிறந்த நாளுக்கு காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருணாநிதியின் பிறந்த நாளுக்கு தமிழக அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி தன் ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டுகள் மகிழ்ச்சியின் வாழ வேண்டுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ''கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் மகிழ்வுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்'' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இன்றைக்கும் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து பிற கட்சிகளை இயக்குபவராக திமுக தலைவர் கருணாநிதி விளங்குகிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று 95 ஆவது பிறந்தநாள் காணும் முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதி நீடூழி வாழ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நெஞ்சார வாழ்த்துகிறது.
தனது 14-வது வயதில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த தலைவர் கருணாநிதி கடந்த எண்பதாண்டுகளாக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டு ‘தனக்கு நிகர் தானே’ என்கிற வகையில் மகத்தான சாதனைகள் படைத்த வரலாற்று நாயகனாக விளங்குகிறார். அரசியல் களத்தில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் அதிநுட்பம் வாய்ந்த ஆற்றலாளராக முத்திரை பதித்தவர். குறிப்பாக கலை, இலக்கியம் போன்ற தளங்களில் பேராளுமை வாய்ந்த படைப்பாளியாக கோலோச்சியவர்.
பேரறிஞர் அண்ணாவுக்குப் பின்னர், தனது வலிமைவாய்ந்த அரசியல் உத்திகளால் கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தன்னையே மையப்படுத்தித் தமிழக அரசியலைச் சுழல வைத்தவர். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் சமூக நீதியின் பாதுகாப்பு அரணாக செயலாற்றியவர். குறிப்பாக ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ என்னும் குடியிருப்புகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி, அமைதியான முறையில் ஒரு மகத்தான சமூகப் புரட்சியை நிகழ்த்தியவர். இன்றைக்கும் சாதி மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர்.
தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முத்தமிழறிஞர் கருணாநிதி, இன்று மூப்பின் காரணமாக செயல்பட இயலாத நிலையிலிருந்தாலும், அவரே இன்றைக்கும் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து பிற கட்சிகளை இயக்குபவராக விளங்குகிறார்.
இத்தகைய பேராற்றல் வாய்ந்த தலைவர் கருணாநிதி நூறாண்டுக்கும் மேல் நலமுடன் வாழ விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மனமார வாழ்த்துகிறது'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக