திங்கள், 25 ஜூன், 2018

சேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை... எங்கள் பாவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே .... போலீசார் கவலை .

savukkuonline.com : (தனது நிலத்தில் வழித்தட கற்களை நடவந்த அதிகாரிகளைத் தடுத்த  வயதான மூதாட்டியை போலீஸ் கைது செய்து கொண்டு செல்லும்போது எடுத்த புகைப்படம்) சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்து ஜூன் 11, 2018 அன்று சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது, “முன்மொழியப்பட்ட இந்தத் திட்டமானது தொலைதூரத்தை 60கிமீ குறைக்கும், பயண நேரத்தை பாதியாக குறைக்கும், சென்னை-சேலம் பயணிக்க 2மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் வருடத்திற்கு 700கோடி மதிப்புள்ள எரிபொருள் மிச்சமாகும்.”
புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் படி நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 லட்சம், கான்கிரீட் வீடுகளுக்கான இழப்பீடு சதுர அடிக்கு 340 ரூபாயும், தென்னை  மரத்திற்கான இழப்பீடு 40,000 ரூபாயும் இருக்கும். நெடுஞ்சாலைகள் கொண்டுவரும் பல்வேறு நன்மைகளை பட்டியலிட்ட அவர் மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சட்டசபையில் பேசுகையில் பொய்யின் உச்சக்கட்டத்திற்கு சென்றார் முதல்வர். சேலம் வழித்தடத்தில்  ஏற்கனவே அமைந்திருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்க 2200 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டிய நிலை வரும் எனவும்,  புதிதாக முன்மொழியப்பட்ட எட்டு வழிச் சாலைக்காக 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே  கையகப்படுத்த வேண்டியுள்ளது இணைப்பும் கூறினார். ஆனால் சேலம் எட்டு வழி சாலைக்கான  NHAI செயலாக்க அறிக்கையின்படி மொத்தம் 2791 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தவுள்ளது.
மேலும் முதல்வர் பேசுகையில், வன நிலத்தில் 49 ஹெக்டேர்  மட்டுமே கையகப்படுத்தப்படும் என கூறினார். ஆனால் 120  ஹெக்டேர் வன  நிலம் கையகப்படுத்தவுள்ளதாக NHAI அறிக்கை கூறுகிறது.

முதல்வர் அவர்கள் சட்டசபையில் இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை ஏன் கூறிவருகிறார்?
முதல்வரின் பேச்சின் படி, எட்டு வழி சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்  2.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து சேலம் சென்று விடலாம்.
முன்மொழியப்பட்ட  சென்னை-சேலம் நெடுஞ்சாலையின் மொத்த தொலைவு 277.30 கி.மீ. இதனைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 125 கிலோமீட்டர் என்னும்  வேகத்தில் வாகனத்தை இயக்க  வேண்டும். 8 சுங்கச்சாவடிகள்  மற்றும் பிற நிறுத்தங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்வோமேயானால், ஒருவர் தன் வாகனத்தை 180கிமீ வேகத்தில் இயக்கினால்தான் 125கிமீ தொலைவைக் கடக்க இயலும்.
நொய்டாவுக்கும் ஆக்ராவுக்கும் இடையிலான உலகத்தரம் வாய்ந்த  யமுனா அதிவேக சாலையில் கூட அனுமதிக்கப்பட்ட வேகத்தின் அளவு 100கிமீ மட்டுமே.
இந்த திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக ஏன் முதலமைச்சர் இவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை அறிய புருவங்கள் உயர்கின்றன. இயல்பாகவே எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து கடும் குரல் எழுப்பின.
நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் சமூக ஆர்வலர் பியுஷ் மனூஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  “8 வழிச் சாலை திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த வந்த வருவாய் அதிகாரிகளுக்கு  கொலை  அச்சுறுத்தல் கொடுத்தார்” என்ற குற்றச்சாட்டின் பேரில்  சமூக செயற்பாட்டாளர்  வளர்மதி  அடுத்த நாளே  கைது செய்யப்பட்டார்.
உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில்,”இந்த திட்டத்திற்கு எதிராக பேசும் எவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும், தேவைப்பட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தைப் பயன்படுத்தவும் காவல்துறைக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.”
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மெனக்கெடலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன? ஏற்கனவே சேலத்திற்கு செல்லும் கிருஷ்ணகிரி வழித்தடம் மற்றும் உளுந்தூர்பேட்டை வழித்தட சாலைகளை விரிவாக்க முதல்வர் ஏன் மறுக்கிறார்? 120 ஹெக்டேர் ரிசர்வ் காடுகளை அழிக்கும் புதிய வழித்தடம் அமைக்க ஏன் முயற்சிக்கிறார்?
இந்த மர்மம் 13 ஆண்டுகளுக்கு முன்னால்  செல்கிறது. 2005 ஆம் ஆண்டில், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், மாநில அரசுக்கு  சொந்தமான தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகமானது(TIDCO) “ஜிண்டால் விஜயநகர ஸ்டீல்ஸ்” நிறுவனத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில்  ஈடுபட்டு, தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம் (Tamil Nadu Iron Ore Mining Corporation TIMCO)  உருவாக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் 325ஏக்கரில் அமைந்துள்ள கவுத்திமலை  மற்றும் சேலத்தில் 638ஏக்கரில் அமைந்துள்ள கஞ்சமலை  ரிசர்வ் காடுகளில் இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பதுதான் இதன் திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட மொத்த  முதலீடு 135 கோடி. அதில் 1 சதவீதம் (1.35 கோடி) TIDCO நிறுவனத்தால் முதலீடு செய்யப்படும். இந்த சிறு பங்கும் மூன்று வருடங்களுக்குப் பிறகு நீக்கப்படும். அதன்பின்னர் மொத்த உரிமமும் TIMCO நிறுவனத்துடன் இருக்கும். TIDCO நிறுவனத்திற்கோ, அரசிற்கோ எந்த ஒரு  பங்கும், லாபமும் இருக்காது. ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி திட்டம் என்றுகூறிதான் அனைத்து அனுமதிகளும் ஒப்புதல்களும் பெறப்பட்டன.
ஒரு மேலோட்டப் பார்வையிலேயே இவை அனைத்தும் ஜிண்டாலுக்கு சாதகமான திட்டம் எனப் புரிந்துவிடுகிறது.
முன்மொழியப்பட்ட இந்த  சுரங்க நடவடிக்கைகள் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன. சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டால், அருகிலுள்ள விவசாயத்தைச் சார்ந்துள்ள  51 கிராமங்கள் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தினால்  325 ஹெக்டேர் ரிசர்வ் காடுகள்  அழிக்கப்படும். மேலும் வேளாண்மை, நீர் ஆதாரங்கள், மரங்கள் மற்றும் மூலிகைகள், மற்றும்  வனவிலங்குகள்  ஆகியவற்றின் மீது பாதிப்புகள் ஏற்படும்.


மலைகளில் இரும்புத் தாது சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு  எதிராக  கட்சிகள், உள்ளூர் கிராமவாசிகள், அரசு சாரா நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் கட்சிசாரா வல்லுநர்களிடம்  இருந்து குரல்கள் எழுந்தன. இந்த திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கங்கள் உருவாகின. கண்டனப் பேரணிகள், கையெழுத்து இயக்கங்கள், பாதிக்கப்படும் கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், TIMCOவுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் ஆகியவை போராட்ட வடிவங்களாக இருந்தன.
உச்சநீதிமன்றமானது அதிகாரம் பொருந்திய  மத்தியக் குழுவை(CEC) நியமித்தது. சேலத்தின் மீதான ஜிண்டாலின் நோக்கத்திற்கு ஒரு கடுமையான அடியை CEC கொடுத்தது.  இரும்புத்தாது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை TIMCO  கைவிட வேண்டும் என CEC  29 June 2009  அன்று ஆணை பிறப்பித்தது. “இரும்புத்தாது வெட்டியெடுக்கும் சுரங்கப் பணிகளுக்காக  திருவண்ணாமலை மாவட்டத்தில் 325 ஹெக்டேரில்   2,22,397 மரங்களை வெட்ட TIMCO கோரிய அனுமதி மறுக்கப்படுகிறது” என CEC அறிக்கையில் கூறப்பட்டது.
பிப்ரவரி 2015இல் கவுத்தி-வேடியப்பன் மலையில்  மர்மமாக ஏற்பட்ட காட்டுத் தீயில் பெரும்பாலான காடுகள் அழிந்தன.
மத்திய அரசு உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியது, “பொதுத் துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை  மத்திய அரசு வேண்டுமென்றே தொடர்ந்து நஷ்டத்தில் வைத்துள்ளது.  அதன் உற்பத்தி குறைந்துள்ளது. அந்நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டு விட்டது.   அது ஜிண்டாலின் JSW ஸ்டீல் நிறுவனத்துக்குத்தான் விற்பனை செய்யப்பட உள்ளது”.


பெயர் வெளியிட விரும்பாத  உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது, “TIDCO மற்றும் ஜிண்டால் விஜயநகர ஸ்டீல்ஸ் இடையிலான TIMCO கூட்டுத் திட்டமானது சேலம் மற்றும் திருவண்ணாமலையில் செயல்படுத்த விரும்பிய இரும்புத்தாது திட்டமானது தேவையான  அனைத்து ஒப்புதல்களையும் பெறுவதற்கு தயாராகிவிட்டது.”
அனைத்து ஒப்புதல்களையும்  ஜிண்டால் பெற்றுவிட்டால் திருவண்ணாமலையில் 325 ஹெக்டேரில் அமைந்துள்ள கவுத்திமலை  மற்றும் சேலத்தில் 638 ஹெக்டேரில் அமைந்துள்ள கஞ்சமலை  ரிசர்வ் காடுகளில் இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பார்கள். முன்மொழியப்பட்ட 8 வழிச் சாலையானது  திருவண்ணாமலை, அரூர் வழியாக சேலம் செல்கிறது. இதனால் ஜிண்டால் நேரடியாக நன்மை அடையும்.
இன்னோரு அதிர்ச்சியான நடவடிக்கை தெரியுமா? எடப்பாடி அரசானது திருச்சி மற்றும் திண்டிவனம் இடையிலான NH 45 சாலையை  6 வழித்தடமாக அகலப்படுத்தும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அதற்கு மாற்றாக சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள மதுரவாயல் – தாம்பரம் இடையிலான 19 கிமீ சாலையை  அகலப்படுத்தும் திட்டத்தையும்  கைவிட்டுவிட்டது,  அதற்கான காரணங்களும் தெளிவாக இல்லை.

அதிக  ஆக்ரோஷத்துடன் விவசாயிகள் வாய்க்குள் இந்தத் திட்டத்தை அரசு திணிக்கிறது. அதனால் பொதுமக்கள் தெளிவாக இந்தப் பெரும்  சதித்திட்டத்தின் பின்புலத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். தற்போது அரசானது இந்த திட்டத்தை எதிர்த்துக் குரல் எழுப்பும் எவரையும்  காவல்துறை இயந்திரத்தைப் பயன்படுத்தி கைது செய்கிறது.
பாரத்மாலா சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது, ​​சேலம் 8 வழி சாலைத் திட்டம் அந்தப்  பட்டியலில் இல்லை. 25 பிப்ரவரி 2018 அன்று நிதின் கட்காரிக்கு எடப்பாடி எழுதிய கடிதத்தில் முதல்முறையாக சேலம் 8 வழி சாலைத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டதாவது:”சேலம் நகரின் அதிகப் போக்குவரத்து நெரிசல் மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை அமைக்கப் பரிந்துரைக்கிறேன். இதனால் பயண தொலைவு மற்றும் எரிபொருள் பயன்பாடு குறையும். இந்தப் புதிய சாலையினால் மாநிலத்தின் சமூகப், பொருளாதார நிலையில் அதிக முன்னேற்றம் இருக்கும். இந்தத் திட்டமானது அதிக வறண்ட நிலங்களை மட்டுமே உள்ளடக்கும். திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை ஒப்பிடும்போது,  திட்டத்திற்காகக் கையகப்படுத்தும் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக இருக்க வாய்ப்பில்லை”.

Nitin Gatkari announcing Salem 8 lane project with Edappadi Palanisamy

இந்தக் கடிதம் எழுதப்பட்ட நேரத்தில், திட்டத்திற்காகக் கையகப்படுத்தும் நிலத்தின் மதிப்பு பற்றி கூட தமிழக அரசு தெரிந்திருக்கவில்லை என்பது அந்தக் கடிதத்திலேயே தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மிகவும் ஆச்சரியமாக, மறுநாளே, அதாவது 26 பிப்ரவரி 2018 அன்று தமிழக முதல்வரோடு இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்தார் மத்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி.  இப்படி ஒரே இரவில்  அரசின் திட்டமானது அனுமதி பெறுவது கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று, அதுவும் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பெரிய திட்டம்.
இந்த திட்டம்  பற்றி நம்மிடம் பேசிய ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, “இது 10,000 கோடி மதிப்புள்ள  திட்டம். இது சம்பந்தமாக உளவுத்துறையை அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை. எனினும், மாநில உளவுப்பிரிவானது  சட்டம்  ஒழுங்கு பிரச்சனை, குறிப்பாக விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இந்த திட்டத்திற்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதையும், கடுமையான சட்ட ஒழுங்கு சிக்கலை உருவாக்கும் என்பதையும்  சுட்டிக்காட்டியது.
நான் அறிந்தவரையில் எந்த அரசியல் தலைமையோ, நிர்வாகத் தலைமையையோ  இந்தப் பிரச்சினைகள் பற்றி கவலைப்படவில்லை. எப்படியேனும் இந்தத் திட்டத்தை மக்களின் தொண்டையில் திணிக்க விரும்புகிறார்கள். இதற்கு ஒரு காரணம் அதிக அளவிலான லஞ்சம் மட்டுமே.
திட்டத்தை பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்குவது அரசாங்கத்தின் கடமை. கிருஷ்ணகிரி மற்றும் திண்டிவனம் வழியாக மாற்று வழி இருக்கும்போது  போது, ​​அதனை  6 வழித்தடமாக விரிவுபடுத்தி பயன்படுத்தலாம். ஒரு புதிய வழித்தடம் அமைக்கவேண்டிய எந்த அவசரமும்  இல்லை. இந்த கோணங்களில் கேள்விகள் எழுப்பும்போது, ​​அரசாங்கத் தரப்பில் ஒரு மெளனமான அமைதி நிலவுகிறது”.
தனிப்பட்ட முறையில் பேசும் காவல்துறை அதிகாரிகள், அப்பாவி கிராமவாசிகளை சட்டவிரோதமான முறையில்  கைது செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக வருத்தப்படுகிறார்கள். “எங்கள் பாவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் கைது செய்யும் அப்பாவிகளின் அழுகுரல் எங்கள் உறக்கத்தை தடுக்கிறது” என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டார்.
எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சாலைத் திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கும் மோடி அரசின் ஆர்வம் நமக்கு சரியாகத் தோன்றவில்லை, மற்றும் ஊழலுக்கான அனைத்து கூறுகளும் இதில் உள்ளன. பாரத்மாலா திட்டத்தினை முழுமையாக விசாரித்தால் நிறைய மோசடிகள் வெளிப்பட வாய்ப்பு உண்டு.
மோடி அரசு மற்றும் எடப்பாடி அரசு  இருவரும் இணைந்து, அடக்குமுறைகள் மூலமாக மக்களின் போராட்டங்களை அடக்க முயற்சிக்கிறார்கள். மற்றுமொரு தூத்துக்குடி சம்பவத்தை உருவாக்குகிறார்கள்.
மொழிபெயர்ப்பு உதவி குருநாதன் சிவராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக