வெள்ளி, 15 ஜூன், 2018

7 பேர் விடுதலை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

7 பேர் விடுதலை மனு: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!minnambalam :ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.

பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டுக் கடந்த ஜூன் 11ஆம் தேதியோடு 27 ஆண்டுகள் நிறைவடைந்ததால், பலரும் அவரது விடுதலை எப்போது என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கைதிகளின் விடுதலை குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் கைதிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விவரங்களைக் கேட்டு தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பியது.இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனுப்பிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இந்தத் தகவல் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் கொலைக் குற்றவாளிகள் எந்தச் சூழலிலும் சுதந்திரமாக நடமாடக்கூடாது” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று (ஜூன் 15) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், “ இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் விளக்கத்தைத் தெளிவாக எடுத்துவைத்து அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக